வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. மயக்குவ விலக்கல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.15 தொடர்ச்சி)
மெய்யறம்
மாணவரியல்
16. மயக்குவ விலக்கல்
(மயக்குவ-போதைப்பொருட்கள்)
- மயக்குவ வறிவினை மயக்கும் பொருள்கள்.
மயக்குவ என்பவை அறிவினை மயக்கும் பொருட்கள் ஆகும்.
- அவைகள் கஞ்சா வபின்முத லாயின.
அவை கஞ்சா, அபின் போன்றவை.
- அறிவுதம் முயிரே யாதியே யுலகே.
நம்முடைய உயிர், கடவுள், உலகம் எல்லாமாக அறிவுதான் உள்ளது.
- அறிவினை மயக்குத லவற்றை யழித்தலே.
அறிவினை மயக்குவது என்பது இம்மூன்றையும் அழிப்பது ஆகும்.
- அறிவினை மயக்குவா ரருமறம் புரிவர்.
அறிவினை மயக்கும் பொருட்களை உட்கொண்டவர் தீய செயல்களைச் செய்வார்.
- மயக்குவ சிலபிணி மாய்க்குமென் றுண்பர்.
இவ்வகைப் பொருட்கள் சில நோய்களைக் குணமாக்கும் என்று அதனை உண்பார்கள்.
- மயக்காத வுண்டவை மாய்த்தலே யுத்தமம்.
இவற்றை உண்ணாமல் அந்த நோய்களைக் குணமாக்குவதே மிகச் சிறந்தது ஆகும்.
- மயக்குவ வலியினை வழங்குமென் றுண்பர்.
இவை வலிமையைக் கொடுக்கும் என்று சிலர் உண்ணுவர்.
- வலியினை வழங்கல்போல் வலியெலாந் தொலைக்கும்.
இவை வலிமையைக் கொடுப்பது போல் வலிமையை எல்லாம் அழிக்கும்.
- ஆதலான் மயக்குவ வற்பமுங் கொண்டிடேல்.
ஆதலால் அறிவினை மயக்கும் பொருட்களை சிறிதளவு கூட உண்ணுதல் கூடாது.
வ.உ.சிதம்பரனார்
Leave a Reply