வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.22. தொழில் அறிதல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.21 தொடர்ச்சி)
மெய்யறம்
மாணவரியல்
22. தொழில் அறிதல்
- மெய்யுறுப் புக்கொடு செய்வது தொழிலே.
தொழில் என்பது உடலால் உழைப்பது ஆகும்.
- தொழிலா லுலகந் தோன்றிநிற் கின்றது.
உழைப்பினால் உலகம் அழியாமல் இருக்கின்றது.
- தொழிலிலை யெனிலுல கழிவது திண்ணம்.
தொழில் இல்லை எனில் உலகம் அழிந்து போவது உறுதி ஆகும்.
- தொழிலிலார் வறுமையுற் றிழிவெலா மடைவர்.
தொழில் செய்யாதவர்கள் வறுமை நிலை அடைந்து அவமானப்படுவர்.
- அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன்.
உயர்ந்த, சிறந்த தொழில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளுதல் அனைவரின் கடமை ஆகும்.
- படைக்கல மனைத்தும் பண்பொடு பயில்க.
படைக்கலன்களை இயக்குவதைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
- படைவகுத் தமர்செயு நடையெலா மறிக.
போர் செய்யும் முறைகளை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
- புவிகடல் விண்மிசை போவவூர்ந் தறிக.
பூமி, கடல், வானம் இவற்றில் பயணம் செய்யக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
- எவ்வகை யுருவு மெடுத்திடப் பழகுக.
தம் உருவத்தை மறைத்து வேறு உருவத்தில் தோன்றிடப் பழகுதல் வேண்டும்.
- உழவுவா ணிகங்கைத் தொழில்சில வறிக.
உழவுத்தொழில், வாணிகம், கைத்தொழில் முதலியவற்றைக் கற்றல் வேண்டும்.
– வ.உ.சிதம்பரனார்
Leave a Reply