வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.30. முயற்சி யுடைமை
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. தொடர்ச்சி)
மெய்யறம்
மாணவரியல்
30. முயற்சி யுடைமை
- உயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி.
உயர்ந்ததை அடைவதற்காக உழைக்கும் உடல் உழைப்பே முயற்சி ஆகும்.
- முயற்சி பலவகை யுயற்சி நல்கும்.
முயற்சி பலவகைப் பெருமைகளைக் கொடுக்கும் இயல்பு உடையது.
- முயற்சி யூழையு முதுகிடச் செய்யும்.
முயற்சி, வெற்றிக்குத் தடையாக இருக்கும் விதியையும் தோல்வியடையச் செய்யும்.
- முயற்சி யுடையார் மூவுல காள்வார்.
விடாமுயற்சி உடையவர்கள் மூவுலகத்தையும் வென்றுவிடுவார்கள்.
- முயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர்.
முயற்சியின்றி சோம்பலுடன் இருப்பவர்கள் பிறர் பழிக்கும் நிலைக்கு ஆளாவார்கள்.
- ஊக்கிய வொன்றனை யுடன்கொளத் துணிக.
நம் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டிய ஒரு குறிகோளை உடனே அடைய தீர்மானித்தல் வேண்டும்.
297.அதிகவூ றுறாநல் லாற்றின் முயல்க.
அதை அடைய அதிக இடையூறில்லாத (சிரமமில்லாத) நல்ல வழியில் முயற்சி செய்தல் வேண்டும்.
- உறுமூ றொழித்தறி வுரங்கொடு தொடர்க.
அந்த முயற்சியில் ஏற்படும் இடையூறுகளை நீக்கி அறிவு மற்றும் ஆற்றலுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
- தவறினுந் தாழ்ப்பினுந் தளர்ச்சியெய் தற்க.
முயற்சியில் தோல்வியுற்றாலும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டாலும் நம் மன உறுதியை இழத்தல் கூடாது.
- முயற்சியின் விரிமுத னூலினு ளறிக.
முயற்சியினைப்பற்றி விரிவாக முதல் நூலில் இருந்து அறிந்துகொள்ளுதல் வேண்டும்.(முதல் நூல்- திருக்குறள்)
– வ.உ.சிதம்பரனார்
Leave a Reply