[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 47(2.17) – தொடர்ச்சி]

 

மெய்யறம்

இல்வாழ்வியல்

48. அச்ச மொழித்தல்

  1. அச்ச மனமுட லழிவுற நடுங்கல்.

அச்சம் என்பது உடலும் மனமும் பதறுதல் ஆகும்.

  1. அஃதறி யாமையி னந்தமென் றுணர்க.

அச்சம் அறியாமையின் உச்சம் ஆகும்.

  1. அறம்புகழ் செய்தலா லழியினும் வாழ்வாம்.

அறமும் புகழும் ஏற்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வதால் துன்பம் ஏற்பட்டாலும் அது பின்னர் நல்வாழ்வைத் தரும்.

  1. மறம்பழி செய்தலால் வாழினு மழிவாம்.

பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களைச் செய்வதால் நன்மை ஏற்பட்டாலும் அது பின்னர் அழிவைத் தரும்.

  1. அறம்புகழ் செய்வதற் கஞ்சுதன் மறனே.

அறமும் புகழும் ஏற்படுத்தக்கூடிய நல்ல செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் தீய செயல் ஆகும்.

  1. மறம்பழி செய்வதற் மாண்புடை யறனே.

பழி ஏற்படுத்தக்கூடிய தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் நல்ல செயல் ஆகும்.

  1. அறநெறி மறந்தரின் மறநெறி யாகும்.

ஒரு நல்ல செயலைச் செய்வதால் தீமை ஏற்படின் அது தீய செயல் ஆகும்.

  1. மறநெறி யறந்தரி னறநெறி யாகும்.

ஒரு தீய செயலைச் செய்வதால் நன்மை ஏற்படின் அது நல்ல செயல் ஆகும்.

  1. அச்ச முடையார்க் கெச்சமிங் கில்லை.

நல்ல செயல்களைச் செய்வதற்கு அஞ்சுபவர்களுக்கு ஒரு நாளும் இவ்வுலகில் புகழ் ஏற்படாது.

  1. அச்ச மிலார்க்கு நிச்சலு மெச்சமாம்.

நல்ல செயல்களை அச்சமில்லாமல் செய்பவர்களுக்கு எப்பொழுதும் புகழ் ஏற்படும்.

– அறிஞர்,  செம்மல் வ.உ.சிதம்பரனார்