(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9. தொடர்ச்சி)

 

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

 10. உடம்பை வளர்த்தல்

 

  1. உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி.

உடல் என்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒப்பற்ற கருவி ஆகும்.

  1. உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல்.

உடம்பை வளர்த்தல் என்பது உடலை வலிமை உடையதாக மாற்றுவது ஆகும்.

  1. உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும்.

உடல் நல்ல வலிமை பெற்றால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளும்.

  1. உரனிலா வுடம்பு வரனிலா மங்கை.

வலிமையற்ற உடல் என்பது வாழ்க்கைத் துணையற்ற வாழ்வு போன்றது.

  1. உளந்தொழில் செயற்கு முடலுரம் வேண்டும்.

நாம் எண்ணும் செயலைச் செய்வதற்கு உடல் வலிமை வேண்டும்.

  1. வளியன னீரதி லளவி னுறச்செயல்.

காற்று, அனல், நீர் ஆகியவை உடலில் சரியான அளவுடன் இருக்குமாறு செய்தல் வேண்டும்.

  1. மாறுபா டிலாவூண் மறுத்துமுப் பொழுதுணல்.

உடலுக்குப் பொருந்துகின்ற உணவை அளவுடன் மூன்று முறையாக உண்ண வேண்டும்.

  1. சிலம்பமெய்ப் பயிற்சிக டினந்தொறுஞ் செய்க.

சிலம்பாட்டம் போன்ற உடற்பயிற்சிகளைத் தினமும் செய்தல் வேண்டும்.

  1. பிணியுறி னுடன்பல தீர்த்தான் மருந்துணல்.

நோயுற்றால் உடனடியாக (பல நோய்களைக் குணமாக்கிய) அநுபவமுள்ள மருத்துவரிடம் வைத்தியம் செய்தல் வேண்டும்.

  1. நினைந்த படியுடல் வளைந்திட வளர்க்க.

நாம் எண்ணியதைச் செய்யும்படி உடலை வளர்த்தல் வேண்டும்.

 

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

வ.உ.சிதம்பரனார்