(உ.வே.சா.வின் என் சரித்திரம், 5 இன் தொடர்ச்சி)

என் பாட்டனார் (தொடர்ச்சி)

அப்போது மேலெழும் கோபத்தால் சிறிது நேரம் மௌனம் ஏற்படும். மறுபடியும் ஆரம்பிப்பார்: “அதை அம்மியிலே வச்சு நன்னா ஓட்டி ஓட்டி ஓட்டி ஓட்டி அரைக்கணும்”

அந்த ‘ஓட்டி’ என்னும் சொல்லை அவர் பலமுறைசொல்லுவார். அப்படிச் சொல்லும்போது அவர் கைகளின் அபிநயத்தைப் பார்த்தால் உண்மையாகவே கத்தரிக்காய்த் துவையலை அரைப்பவர்கள் கூட அவ்வளவு சிரத்தை கொள்ள மாட்டார்களென்று தோற்றும்.

தாத்தாவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு கொஞ்ச தூரம் போவேன். அதற்குள் மறுபடியும் அவர், “டே, இங்கே வாடா” என்று கூப்பிடுவார். ”நான் சொல்றது தெரியறதா? நன்னா ஓட்டி ஓட்டி அரைக்கச் சொல்லு. உளுத்தம் பருப்பை அதிலே போடவேண்டாம்” என்று மறுபடியும் எச்சரிக்கை செய்வார். நான் கேட்டுக்கொண்டு அப்படியே என் தாயாரிடம் சொல்லி விடுவேன்.

இப்படி என் பாட்டனாருக்குப் பிரியமான கத்தரிக்காய்த் துவையலின் பக்குவத்தைப் பற்றியும் வேறு விசயங்களைப் பற்றியும் அவர் சொல்லும் சமாசாரங்களை என் தாயாரிடம் சொல்லும் வேலை எனக்கு அடிக்கடி நேரும். இந்த சம்பாசணையைக் கேட்டிருக்கும் அயலார்கள் எனக்கு அந்தப் பெயரை வைத்துவிட்டார்கள்.

அந்தக் காலத்தில் பெண்களுடைய நிலைதான் மிகவும் கடினமானதாக இருந்தது. மாமனார், மாமியார் நாத்தனார் முதலியவர்களால் அவர்கள் படுங் துன்பங்கள் பெரும்பாலான வீடுகளில் உண்டு. மற்ற எல்லா விசயங்களிலும் அக்கால வாழ்க்கை சிறந்ததாக இருந்தாலும், இந்த ஒரு விசயத்தில் மாத்திரம் குறைபாடாகவே இருந்தது.

எங்கள் பாட்டனார் அடிக்கடி கூறும் குறைகளைக் கேட்டுக் கொண்டு என் தாயார் மிக்க பொறுமையுடன் இருந்து வந்தார். ஒருநாள் என்னையும் அழைத்துக் கொண்டு ஓர் ஊருக்குச் செல்லுகையில் இடையே மணஞ்சேரியென்னும் கிராமத்தில் தங்க நேர்ந்தது. அப்பொழுது மாலை நேரம். நாங்கள் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் தாவளியைப் போர்த்துக்கொண்டு ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவர் சந்தியாவந்தனம் செய்வதற்காகத் தீர்த்தம் கொண்டு வரும்படித் தம் பேரனை ஏவினார். அவன் பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் கொண்டு வந்து வைத்துவிட்டு உத்தரணியைக் காணவில்லை என்றான். கிழவருக்குக் கோபம் வந்து விட்டது. ”போய் நான்னாத் தேடிப் பாரு. அவள் அங்கே வெந்நீரடுப்புக்குள்ளே சாம்பல்லே செருகியிருப்பா, பாரு” என்று சொல்லும் போதே அந்தத் தொனியிலே அவர் சினம் வெளிப்பட்டது. ‘அவள்’ என்றது அவருடைய மருமகளைத் தானென்பது நிச்சயம்.

அவர் கூறிய வார்த்தைகள் என் தாயாரின் காதிலும் விழுந்தன; ”ஓகோ! அங்கேதான் இருக்கிறீரென்று நினைத்தேன்; இங்கேயும் இருக்கிறீரா?” என்று என் தாயார் அப்போது கூறிய வார்த்தைகளுக்கு அந்த இளம் பருவத்தில் எனக்குப் பொருள் விளங்கவில்லை; பிறகு விளங்கியது. அந்த வீட்டிலும் மருமகளைக் குறை கூறும் முதிய மாமனார் இருப்பதில் என் தாயாருக்கு ஓர் ஆறுதல் உண்டாயிற்றென்றே எண்ணுகிறேன். இது மனித சுபாவந்தானே?

எங்கள் ஊரில் சிலர் முதிய பிராயத்தில் சந்நியாசம் வாங்கிக் கொண்டு சில காலம் இருந்து பிறகு சித்தியடைந்தார்கள். பிறகு அவர்கள் ஓரிடத்தில் சமாதியில் வைக்கப்பட்டார்கள். அவ்வாறுள்ள சமாதிகள் சில. ஆனால் அவை பாதுகாக்கப்படவில்லை. சில முதிய பெண்கள் அந்த இடத்தில் சாணி தட்டி உலர்த்துவார்கள்.

என் பாட்டனார் மிகுந்த அசௌக்கியமாக இருந்த போது, ஒரு வைதிகர் வந்து, “உமக்குத்தான் வயசாகி விட்டதே; ஆபத்சந்நியாசம் வாங்கிக் கொள்ளுமே” என்றார். அதைக் கேட்டபொழுது என் பாட்டனார் சந்நியாச ஆச்சிரமத்தின் பெருமையையோ, அவ்வாச்சிரமத்திற்குரிய ஒழுக்கங்களையோ எண்ணவில்லை. முன்பு சந்நியாசம் வாங்கிக் கொண்டவர்களுடைய சமாதிகளின் நிலைதான் ஞாபகத்துக்கு வந்தது. உடனே, “ஐயையோ! வேண்டவே வேண்டாம். நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டால், சேட்சியும் குப்பிச்சியும் என் தலையில் சாணி துகைத்துத் தட்டுவார்கள்! அந்தப் பதவி எனக்கு வேண்டா!” என்று கூறினார். அந்தக் காலத்தில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுரு பிள்ளை என்பவர் ஒரு சமயம் எங்கள் வீட்டிற்கு வந்திருத்தார். அவருக்கும் என்னுடைய தந்தையாருக்கும் பழக்கம் உண்டு. அதனால் அவர் எங்கள் வீட்டில் தங்கி ஆகாரம் செய்தார். செய்த பிறகு என் தந்தையார் அவரோடு பேசிக் கொண்டிருந்தார். பிறகு பாட்டனாரிடம், “இவர் தாசில்தார்; ஏதாவது நம் குடும்பத்துக்குச் சகாயம் செய்ய வேண்டுமென்று நீங்கள் கேட்டுக் கொண்டால் உபகாரம் செய்யக்கூடியவர். கொஞ்ச நாழிகை பேசிக் கொண்டிருங்கள்” என்று கூறி மரியாதையை உத்தேசித்து வெளியிலே இருந்தார்.

பாட்டனார் தாசில்தாரிடம் போய் சேமச்சமாசாரங்களை விசாரித்தார். தாசில்தாரும் என் பாட்டனாரைப் பதிலுக்கு சேமம் விசாரித்தார். அப்போது சாதாரணமாக, “சௌக்கியமாகத்தான் இருக்கிறேன்” என்று அவர் சொல்லவில்லை. “ஒன்றும் சுகமில்லை. உடம்பே சரிப்படுவதில்லை. வாய்க்கு ஒன்றும் வேண்டியிருக்கவுமில்லை. வயிற்றுவலி இருக்கிறது. ஆகாரம் சீரணமாகவில்லை” என்று வரிசையாகத் தம்முடைய சொந்தக் குறைகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். குடும்பத்துச் சமாசாரத்தையே அவர் மறந்து போனார். சிவகுரு பிள்ளை அவர் கூறிய விசயங்களை அரையுங்குறையுமாகக் காதில் போட்டுக்கொண்டு போய்விட்டார்.

“அவரிடம் குடும்பத்துக்கு அநுகூலம் செய்ய வேண்டுமென்று கேட்கவில்லையே” என்று என் தந்தையார் பாட்டனாரைக் கேட்டார். “

மறந்து போய்விட்டேன். மற்றொரு சமயம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம்” என்று அவர் விடை கூறினார். மற்றொரு சமயம் வரவேயில்லை. என் பாட்டியார் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் பாட்டனாரும் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

அவர் மரணாவசுதையில இருந்தபோது வீட்டிலுள்ளவர்களை ஒவ்வொருவராக அழைத்து அவரவர்களுக்கு ஏற்ற வண்ணம் புத்தி சொல்லிக்கொண்டு வந்தார். என் தாயாரை அழைத்து, “நீ எனக்கு எவ்வளவோ உபசாரம் செய்திருக்கிறாய். நான் உன்னைப் பல சமயங்களில் கடிந்து பேசியிருக்கிறேன். வருத்தப்படாதே. நீ நல்ல பெண்” என்று சொல்லிவிட்டுத் தம் தலைமாட்டிலுள்ள சிறுமூட்டையை எடுத்தார். அதில் ஒரு முடிச்சை மெல்ல அவிழ்த்தார். “இவற்றை நான் நெடுநாளாக வைத்திருக்கிறேன். எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. இந்தா, என்னுடைய ஞாபகமாக இவைகளை வைத்துக் கொள். உனக்கு வேறு என்ன தரப்போகிறேன்! நீ சேமமாயிருப்பாய்” என்று இரண்டு பழைய ஊசிகளை எடுத்துக்கொடுத்தார். என் தாயார் அவற்றை பக்தியோடு வாங்கிக் கொண்டார். என் பாட்டனார் அடிக்கடி தம்முடைய வசுத்திரத்தை அந்த ஊசிகளைக் கொண்டு தைத்துக் கொள்வார். என் தாயார் அவற்றைப் பல வருடங்கள் வரையில் பாதுகாத்து வந்ததுண்டு.

அவருடைய முதுமைப் பருவத்தின் நிகழ்ச்சிகளைத்தான் நான் ஞாபகத்தில் வைக்க முடிந்ததென்றாலும் அவற்றைக் கொண்டே அவருடைய இயல்பை அறிந்துகொள்ள முடியாது. முதுமைப் பருவத்தில் சில இயல்புகள் எல்லாருக்குமே உண்டாவது வழக்கம்.

அவர் முயற்சியுள்ளவர். சீவனாதாரமாக இருந்த நிலத்தைப் போக்கியம் வைத்துக் கடனைத் தீர்த்தது அவருடைய தைரியத்தையும் மானத்தையும் வெளிப்படுத்தியது. அவர் பிறகு சீவனத்தின் பொருட்டுப் பள்ளிக்கூடம் வைத்து உபாத்தியாயராக இருந்து கௌரவமாக வாழ்ந்து வந்தார். இந்த விசயங்கள் அவருக்குப் பெருமையைத் தருவதற்குரியனவாகும். —

அடிக்குறிப்பு ஓதனவனேசுவரரென்பது திருச்சோற்றுத்துறை யென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் திருநாமம்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.