(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 11. தொடர்ச்சி)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்இரா.இராகவையங்கார். : 12

3. ஔவையார் (தொடர்ச்சி)



ஒரு காலத்தவரும் ஒரு தன்மையரும் ஆதல்பற்றி இவரது ஓருடற்பிறப்பு ஒருவழியான் வலிபெறுவதாகும். இப்பிறப்பையும் அதிகமான்பாலே பெரிதுமுறலாகும். அதுவும் அவன் பரிசில் நீட்டித்தபோது ஔவையார் அவனைச் சினந்து, அதிகமான், ‘தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல்’ என்றது ஔவையார்க்கும் அவ்வதிகற்கும் உளதாகிய இவ்வுறவினையே குறிப்பாற் றெரித்துக் கூறப்பட்டதெனக் கொள்ளுதற்கும் இயைதலின் நீங்கும் என்க. இவ்வாறு கொள்ளுதலே பண்டுதொட்டு வழங்கும் உலகவழக்கிற்கும் செய்யுள்வழக்கிற்கும் இயைபுடைத்தாகும்.

ஔவையார் பெண்ணையாற்றங் கரையிலுள்ள புல்வேளூர் என்னுமிடத்துப் பூதனென்னுங் கொடையாளி யொருவனாற் பெரிதுஞ் சிறப்பித்துப் போற்றப்பட்டு வெயிலால் வறந்த அவன் வயலுக்குக் கிணற்றுநீர் தானே ஏறிப்பாயக் கட்டளையிட்டு, ஆண்டுச் சிலகாலந் தங்கிப் பின்னர்த் தகடூர் புகுந்து, ஆண்டிருந்த அதிகமானெடுமானஞ்சியைப் பாடி, அவன் பரிசினீட்டித்தானாக, அப்போது அவன் வாயில்காப்போனிடத்தில் அவனை முனிந்து கூறி, அக்காலத்திருந்த அறிவும் புகழுமுடைய வேறு சிலர்பாற் பரிசில் பெறும்பொருட்டுச் செல்லுதற் கொருப்பட்டார். இதனை அதிகமான் தெரிந்து, இவர்க்கு வேண்டுவனவெல்லாம் விரைந்தளித்து, நெடுங்காலம் உயிர்வாழ்தற்குக் காரணமாகத் தான் அரிதின் முயன்றுபெற்ற அமிழ்தத்தன்மையுடைய நெல்லிப்பழம் ஒன்றையும் இவர்க்குதவ, இவர் அதனைப் பெற்று, அவன், தன்னினும் தம்மை மீப்பட மதித்தமைக்கு உவந்து, அவன்பால் அன்பும் அருமையு மிகுத்து அவனையே புகழ்ந்து பாடி, அவனுக்கு உயிர்த்துணைவராய்ச் சிறந்தனர்.

[*] அக்காலத்துக் கச்சியை யாண்ட தொண்டைமானுழை அவ்வதிகன் இவரைத் தூதுவிட, இவர் அவன் பொருட்டுத் தூதுஞ் சென்றனர்; இதனிடையிற் பாரியிடஞ் சென்று அவனானும் அன்பு பாராட்டப் பெற்றனராவர். அதிகமான் கோவலூர்மேற் படையெடுத்துச்சென்று அவனை யெறிந்த காலத்தும், அவனுடனிருந்து அவ்வென்றியைப் புகழ்ந்து பாடினர். அவ்வதிகமான் கோவலூரை யெறிந்து மீண்டு தனதூர் புகுந்து, தனக்குத் தவமகன் பிறந்தானைக் கண்டபோதும், இவர் ஆண்டிருந்து அவனைப் பாடினர் (புறம் 110). அவன் தகடூர் பொருது வீழ்ந்தபோது ஆற்றாத்துயராற் பெரிதுமிரங்கிப் புலம்பினர் (புறம் 235). இவ்வாறு அவன் சாந்துணையும் அவன் செய்நன்றிபாராட்டி அவற்கின்னுயிர்த்துணைவராய்ச் சிறந்து, பின்பு அவ்வதிகமான் தவமகனாகிய பொகுட்டெழினிபாலும்

++++
[*] இவர்க்கும் அதிகற்குமுள்ள பெருநட்புரிமைபற்றி ‘தெவ்வடு வைவே லெழினி, யௌவை’ என்றார் திவாகரநூலாரும் (பழைய ஏடு). எழினி, அதிகற் கொருபெயர். (புறம். 158)
+++

அந்நட்புரிமையே பூண்டு அவனையும் புகழ்ந்துபாடி, அவனாலுஞ் சிறப்புப் பலபெற்று விளங்கினர். இவர் அதிகமான்பால் நெல்லிப்பழம் பெறுதற்கு முன்பே புல்வேளூர்ப் பூதனாற் சிறப்பித்தோம்பப் பட்டனரென்பதும் அவன் வயற்குக் கிணற்றுநீர் ஏறிப்பாயக் கட்டளையிட்டனரென்பதும்,

‘பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையு
மாங்குவரு பாற்பெண்ணை யாற்றினையு–மீங்கு
மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றை நாவை
யறுப்பித்தா யாமலகந் தந்து.’

‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரவென் றேபுளித்த மோரும்–பரிவுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்புரிந் திட்டசோ
றெல்லா வுலகும் பெறும்.’

என்னுந் தமிழ்நாவலர்சரிதைப் பாடல்களானும்,

‘சொல்லாரு மௌவை பரிவாய்த் தனக்கிட்ட சோறுலக
மெல்லாம் பெறுமென்று பாட்டோ தப் பெற்றவ னின்னருளாற்
கல்லாரற் சுற்றிக் கிணறேறிப் பாயுங் கழனிபெற்றான்
வல்லாளன் பூத மகிபால னுந்தொண்டை மண்டலமே.’

என்னுந் தொண்டைமண்டல சதகச் செய்யுளானும் தெரிவன. அதிகமானைப்பற்றி இவர் பாடிய ‘வாயிலோயே வாயிலோயே’ என்னும் புறப்பாட்டால் (206), இவர் அவன் பரிசி னீட்டித்தமைபொறாது, ‘நெடுமானஞ்சி தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல், அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென, வறுந்தலை யுலகமு மன்றே யதனாற், காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை . . . . .. எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ என்று சினந்து கூறி, வேற்றிடங்கட்குச் செல்ல ஒருப்பட்டனர் என்பது அறியப்படுவது.

பின்பு அதிகன் இவர்க்குப் பரிசில் நல்கி வரிசை செய்ய உவந்து, அவன் பரிசினீட்டித்தானென நினைந்து, அவனை வெறுத்துச் செல்லற்கு ஒருப்பட்ட தம் நெஞ்சினைக் கழறி, அதிகமான் பரிசில் பெறுங்காலம் நீட்டிப்பினும் நீட்டியாதொழியினும் அப்பரிசில் தப்பாது என்று கூறி, அவனையும் வாழ்த்தினர் என்பது 101 – ஆம் புறப்பாட்டான் விளங்குகின்றது. இவர்பால் இவன் என்றைக்கும் ஒருபடியான பேரன்பே பூண்டிருந்தனனென்பது, ‘ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம், பலநாள் பயின்று பலருடன் செல்லினுந், தலைநாட் போன்ற விருப்பினன்’ (புறம். 131) என இவன் அவனைக் கூறியதனானே அறியலாகும்.

அமுதத் தன்மை பொருந்திய நெல்லிப்பழம் ஒன்றை அதிகமான் ஔவையார்க் களித்தனனென்பது, ‘சிறி யிலை நெல்லித் தீங்கனி குறியா, தாத னின்னகத் தடக்கிச், சாத னீங்க வெமக்கீத் தனையே (புறம் 91), ‘வன்கூற்றை நாவை யறுப்பித்தா யாமலகந் தந்து‘ என இவர் பாடியவாற்றானும், ‘கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி, யமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீந்த . . .அதிகனும்’ எனச் சிறுபாணாற்றுப்படையில் நத்தத்தனார் கூறியதனாலும் அறியப்படுவது. பரிமேலழகரும் இதனையே சுட்டி, ‘ஔவையுண்ட நெல்லிக் கனிபோல்வது‘ (திருக்குறள் 100) என்றார்.

அதியமான்பொருட்டுத் தொண்டைமானுழைத் தூதுசென்றபோது அத்தொண்டைமான் தன்போர்வலியின் பெருமையுணருமாறு தன் படைக்கலக்கொட்டிலைக் காட்ட, இவர் அவற்றைப் பார்த்து, ‘இப்படைக்கருவிகளெல்லாம் போரிற் பயன்படாமையாற் பீலியணிந்து மாலைசூட்டிக் காம்பு திருத்தி நெய்யணிந்து காவலையுடைய அரண்மனைக்கண் வீணே தங்குவன; எம்முடைய அதிகன்வேல் பகைவரைக் குத்துதலான் நுனிமுரிந்து கொல்லன் பணிக்களரியிற் சிறிய கொட்டிலிடத்து உற்றன’ என்று அத்தொண்டைமான் வீரத்தை யிகழ்ந்து, தமது அதிகன் போர்வீரத்தையே மேம்படுத்து உரைத்தார்.

இத்தூது சென்றமையானும் இவ்வமையத்து எடுத்து மொழிந்த வீரவார்த்தையானும் இவரது ஆண்மையும் அறிவும் செய்ந்நன்றி மறவாமையும் நன்றறியத்தக்கன. மேற்குறித்த ‘மடவர லுண்கண்’ என்னும் பாட்டும் அத்தொண்டையர் வேந்தன், ‘நும் நாட்டிற் போர்புரிவாரும் உளரோ?’ என இவ்வௌவையாரை வினாவியபோது, அவனுக்கு விடையாக உரைத்ததாகும். இவர் அதிகனையே தம்மரசனாகக்கொண்டு ‘என்னை’ எனக் கூறுதலுங்காண்க (புறம் 96). அதிகமான் கோவலூரெறிந்ததனை இவர் பாடினரென்பது, ‘இன்றும், பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ, முரண்மிகு கோவலூர் நூறிநின், னரணடு திகிரி யேந்தியதோளே.’ (புறம் 99) என்பதனாலறிக. இவ்வடிகளானும் அதிகன் பரணர் ஔவையார் இவர்கள் ஒருகாலத்தவராதல் புலனாகும். அகநானூற்றில், ‘நெடுநெறிக் குதிரைக் கூர்வே லஞ்சி, கடுமுனை யலைத்த கொடுவிலாடவ, ராகொள் பூசலிற் பாடுசிறந் தெறியும் பெருந்துடி‘ (372) என்பதனானும், ‘வாய்மொழி, நல்லிசை தரூஉம் இரவலர்க்குள்ளிய, நசைபிழைப் பறியாக் கழறொடி யதியன்’ (162) என்பதனானும் அதிகமான் வீரமுங் கொடையும்பற்றிப் பரணராற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளான் என்பதும் அறிக. இவ் வௌவையார் அதிகனைப் பாடிய பாடல்கள் பெரும்பாலும் அவனுடைய வீரமும் தியாகமும் பற்றியே வருவன. அவன் இரவலர்க்கெளியனாய்ப் புலவர்க்கரியனாய் நின்ற நிலைமை இவராற் பெரிதும் பாராட்டப்படுவது. இதனை,

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலி
னீர்த்துறை படியும் பெருங்களிறு போல
வினியை பெரும வெமக்கே மற்றதன்
றுன்னருங் கடாஅம் போல
வின்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே.’

எனவரும் இனிய பாடலா னறிக. இவர் அதிகமான் இறந்ததன் மேலும் அவன் மகன் பொகுட்டெழினிபாற் சில காலந் தங்கிப் பின்னர்த் தமிழ்மூவேந்தர்பாற் செல்லற்கெழுந்து, பழையனூர் புகுந்து, ஆண்டுள்ள காரி என்பவனால் உபகாரம்பெற்று, அவன் தம்பால் வைத்த அன்பின் மிகுதியாற் பிரிதற்கியலாது, அவன் வேண்டியன சில செய்தொழுகிச் சிலபோது கழித்தனர். இவனது பேரன்புடைமையே இவராற் ‘காரியன் றீந்த களைக்கோலும்‘ என்பதனாற் புகழ்ந்து பாராட்டப்பட்டது. களைக்கோலென்பது களையெடுக்குங் கோல் என்று கொண்டு இவர் அவன் வேண்ட அவனுடைய கொல்லைக்குக் களையெடுத்தனர் எனவுங் கூறுப.

(தொடரும்)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
 இரா.இராகவையங்கார்