52puthiyaparvai_ilakkuvanar_chirappithazh01

“தமிழ் மாநாடுகளில்

தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” :

வருந்திய இலக்குவனார்

 

பேராசிரியரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும்

“தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும்

இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர்.

எம் போன்றோரை எள்ளியே தள்ளினர்”

எனப் பேராசிரியர் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப் பங்கேற்றுத் தமிழுக்கு எதிரான கருத்துகளைத் தமிழ்ப் பகைவர்கள் ஒலிக்கும் பொழுதெல்லாம் எதிர்த்து முழங்கிய அரிமாவாகப் பேராசிரியர் திகழ்ந்தார். குறிப்பாகப் பிரான்சு நாட்டின் பேராசிரியர் ழீன்பிலியோசா இந்தியா முழுவதும் ஆரியம் பொது மொழியாக இருந்ததாகத் தவறான கருத்து தெரிவித்த பொழுதும் ஐராவதம் மகாதேவன் கி.மு. முதல் நூற்றாண்டில்தான் தமிழ் எழுத்து வடிவம் கண்டது என வடிகட்டிய பொய்யை உதிர்த்த பொழுதும் பேராசிரியரின் கருத்துச் சம்மட்டிகள் அவற்றைத் தவிடுபொடியாக்கின எனலாம். தமிழ் மாநாடுகளின் நிலைகுறித்த பேராசிரியரின் படப்பிடிப்பு வருமாறு:

தமிழ் பற்றி எவரும் எதனையும்

துணிந்து கூறுவர்; பணிந்துகேட்டிடத்

தமிழரும் உண்டு, தமிழறிவின்மையால்.

தமிழ்பழித்தோனைத் தாய் தடுத்தாலும்

விடேன் எனும் வீறுவிட்டே வாழ்வோர்.

உண்மை வரலாறு ஓர்ந்து அறியாப்

புல்லறிவுடையோர், புதிய கருத்தென

இன்றமிழ் நூல்கள் எழுந்த காலத்தைப்

பின்னே தள்ளிப்பெருமை அடைவர்!

பட்டமும் பதவியும் பாரில் பெறுவர்!

சான்றுகள் காட்டி ஆன்ற உண்மையைச்

சாற்றும் புலவரைத் தூற்றி ஒதுக்குவர்!

இன்றைக்கும் இந்த நிலையே மேலோங்கி உள்ளமையால்தான் தமிழுக்காகக் குரல் கொடுப்போர் யாருமிலர் என்னும் அவலமும் மேலோங்குகிறது.

55puthiyapaarvai_ilakkuvanar

– புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 44

தரவு : பாபு கண்ணன்