thee paravattum01

  தமிழர், தனி இனத்தவர், பன்னெடுங்காலம் பண்புடன் வாழ்ந்து, பாரோர் புகழ வாழ்ந்து, கலைச் செல்வங்களைக் கண்டவர். இந்தியா எனும் உப கண்டத்திலே பல இனங்கள், தத்தம் கலைகளுடன் உள்ளன. தமிழ் இனத்துக்குத் தனிக்கலை ஒன்று உண்டு. வெவ்வேறாகவும், தனித்தனியாகவும் தனிப்பண்புகளுடன் விளங்கி வந்த ஆரிய திராவிடக் கலைகள் கலக்க நேரிட்டது ஒரு பெரும் கேடாக முடிந்தது. அத்தகைய கலப்பு நூற்களே கம்ப இராமாயணமும் பெரிய புராணமும். தமிழனுக்குத் தனிக்கலை உண்டென்றேன். சங்க நூல்கள் அக்கலைச் செல்வத்தைக் காட்டுகின்றன. தனியான கலையுடன் தனியான வாழ்வும் தனியரசும் பெற்று வாழ்ந்த தமிழர், பின்னர் தாழ்ச்சியுற்றுத் தன்மானம் இழந்து தன்னரசு இழந்ததற்குக் காரணம், கம்ப இராமாயணம், பெரிய புராணம் போன்ற ஆரியக் கற்பனைகளை உள்ளடக்கிய கலப்புக் கலையைத் தம் தலைமேற் கொண்டதனால்தான் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

-அறிஞர் அண்ணா : தீ பரவட்டும்!

unmai - Mar 16-31 - 2010