ira.ilankumaran01

   தொல்காப்பியர் காலத்தில், ‘சாதி’ என்னும் சொல், விலங்கின் சாதி, பறவைச் சாதி, நீர்வாழ் சாதி, முதலைச் சாதி என்பனவற்றையே குறித்தது; மனிதரைப் பிரிப்பதாய் இல்லை.

திருவள்ளுவர் குடி, குடிமை என்பனவற்றைக் குறித்தார். பிறப்பினைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனப் பெருநெறி காட்டினார்.

அரசர் ஒரு சாதி அன்று;

வணிகர் ஒரு சாதி அன்று;

வேளாளர் ஒரு சாதி அன்று;

எவரும் அரசராகவோ, வணிகராகவோ வேளாளராகவோ ஆகலாம். அவ்வாறே, எவரும் அந்தணர் ஆகலாம். அது சாதிப் பெயர் அன்று என்பதன் சான்று இது.

அந்தணர் என்னும் சொல் தொல்காப்பியம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை என்னும் காப்பியங்கள் ஆகியவற்றில் 85 இடங்களில் வருகின்றது. ஓரிடத்தும் சாதிப் பெயராய் வரவில்லை.

ஆனால் பிராமணர் என்னும் சொல் இந்நூல்களில் ஓரிடத்துத் தானும் இடம் பெறவில்லை. அது சாதிப் பெயர்.

பழந்தமிழ்ச் சொல் அடைவில் இடம் பெறாத சொற்கள் சிலவும் இடம்பெறும் நிகண்டு நூல்களாகிய திவாகரம், பிங்கலம் என்பற்றிலும் பிராமணர் என்னும் சொல் இடம் பெறவில்லை. பிற்கால அகராதிகளில் மிகப் பெரியதும் விளக்கமுடையதும் ஆகிய சென்னைப் பல்கலைக் கழக அகராதியிலும், அந்தணர் என்னும் சொல்லுக்குப் பிராமணர் என்ற பொருள் தரப்படவில்லை. வடமொழித் திணிப்புக் கென்றே படைக்கப்பட்ட அகர முதலி எனப் பாவாணரால் பழிக்கப்படும் அவ்வகராதியிலும் கூட, அந்தணர் என்ற சொல்லுக்கு, ‘பிராமணர்’ என்ற சாதிப் பெயர், பொருளாகத் தரப்படவில்லை.

புலவர்மணி இரா. இளங்குமரன்