(தோழர் தியாகு எழுதுகிறார் 82: கடற்கோள் நினைவுகள் தொடர்ச்சி)

“இது துயருற்ற மக்களுக்கு எதிரான விலக்கல்! இன ஒதுக்கல்!!”

இனிய அன்பர்களே!

‘பொருளியலில் நலிந்த பிரிவினர்’ (பொநபி) என்று சொல்லி இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்பு 103ஆம் திருத்தச் சட்டம் செல்லுமா? என்ற வழக்கில் செல்லாது என்று சிறுபான்மைத் தீர்ப்பு வழங்கிய நீதியர் எசு. இரவீந்திர பட்டு அவர்களது தீர்ப்பினைச் சுருக்கித் தமிழாக்கம் செய்யும் வேலையை ஒருவழியாக முடித்துள்ளேன். இந்தத் தீர்ப்பின் சில பகுதிகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் முன்பே உங்கள் பார்வைக்குப் படைத்திருந்தேன். சட்ட நோக்கிலும் சமூக நீதி நோக்கிலும் இரவீந்திர பட்டு செய்துள்ள அலசல் நம் அனைவரின் கவனத்துக்கும் உரியதொன்று. மீண்டும் அதன் முகன்மைப் பகுதிகள் சிலவற்றை அக்கறையுள்ள தாழி அன்பர்களுக்காக முன்வைக்கிறேன்:

இதற்கெல்லாம் நேர் எதிர் நிலையில் முதல் முறையாக அரசமைப்பாக்க அதிகாரம் சமூக அநீதியால் பாதிப்புற்றவர்களுக்கு எதிரான விலக்கலைக் கடைப்பிடிக்கத் துணைக்கழைக்கப்பட்டுள்ளது – இவர்களும் இந்த நாட்டில் ஆகப் பெரும் வறியவர்களே என்ற போதிலும்! இது அனைவருக்குமான சமநீதி, சமூகநீதிக் கொள்கையோடு அப்பட்டமாக முரண்படுகிறது.

+++

அட்டவணைச் சாதிகள் / அட்டவணைப் பழங்குடிகள் / ஏனைய பிற்பட்ட வகுப்புகள் ஆகிய சமுதாயங்களின் சமத்துவத்தை ஊக்கப்படுத்தவும் அவர்கள் சந்திக்கும் நூற்றாண்டுக் கணக்கிலான தீமைகளையும் தடைகளையும் வெல்லவும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்ற உண்மை அறிவுக்குகந்த வகைப் படுத்தலுக்குக் காரணமாக இருக்க முடியுமா? அது வகைப்படுத்தலின் அடிப்படை ஆக முடியாது என்பது என் கருத்தாகும். இப்போதுள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள முக்கிய விளைவுகளால் அட்டவணைச் சாதிகள் / அட்டவணைப் பழங்குடிகள் / ஏனைய பிற்பட்ட வகுப்புகளில் பெரும்பாலார் அவர்களின் ஒதுக்கலுக்கும் வறுமைக்கும் காரணமான அல்லது அவற்றை முற்றச்செய்த நிலைமைகளிலிருந்து மேலே உயர்ந்து விட்டனர் என்று நியாயம் சொல்லி இந்த வகையினங்களை வறுமை அல்லது பொருளியல் அளவைகளின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற கருத்து ஏதும் இவ்வழக்கில் பதிவேற்றப்பட்டுள்ள சான்றுகள் எதிலும் சொல்லப்பட வில்லை. பொருளியல் அளவைகளின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் பயனைப் பெறத் தகுதியுடையோராய் இருந்தும் நாட்டின் மக்கள்தொகையில் (அட்டவணைச் சாதிகள் / அட்டவணைப் பழங்குடிகள் / ஏனைய பிற்பட்ட வகுப்புகள் சேர்ந்து) 82 விழுக்காடாகிற இந்தப் பெரும் பிரிவினரை வெளியே நிறுத்துவது பொருளியலில் நலிந்த பிரிவுகளின் குறிக்கோளை முன்னெடுக்க எப்படி உதவும் என்ற விளக்கமே இல்லை.

[Can the fact that SC/ST and OBC communities are covered by reservations to promote their equality, to ensure that centuries old disadvantages and barriers faced by them (which are still in place, and is necessary to ensure their equal participation) be a ground for a reasonable classification? In my opinion, that cannot be the basis of classification. None of the materials placed on the record contain any suggestion that the  SC/ST/OBC  categories should be excluded from the poverty or economic criteria-based reservation, on the justification that existing reservation policies have yielded such significant results, that a majority of them have risen above the circumstances which resulted in, or exacerbate, their marginalization and poverty. There is nothing to suggest, how, keeping out those who qualify for the benefit of this economic-criteria reservation, but belong to this large segment constituting 82% of the country s population (SC, ST and OBC together), will advance the object of economically weaker sections of society.]

+++

கூடுதலாக ஒரு தகவல்: நாட்டிலுள்ள 766 மாவட்டங்களில் 45 மாவட்டங்கள் முழுமையாகவும் 64 மாவட்டங்கள் பகுதியளவுக்கும் ஐந்தாம் அட்டவணைப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் அட்டவணைப் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள். சின் ஃகோ குழுவின் கருத்துப்படி, அனைத்துப் பழங்குடிகளிலும் 48,4% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள். இது 4.25 கோடி மக்கள்தொகை ஆகும். இவ்வாறு விலக்கி வைத்தல் கூடுதலாகப் புவியியல்சார்ந்தும் செயல்பட்டு, இந்தப் பகுதிகளில் வாழும் வறியவர்களிலும் வறியவர்களான பழங்குடிகளுக்கு ஏழைகளுக்காகவே வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின் பயனை மறுக்கிறது.

[As an aside, it may also be noted that according to the figures available, 45 districts are fully declared, and 64, partially declared, as Fifth Schedule areas, out of 766 districts in the country. Majority of the population of these areas are inhabited by members of scheduled tribes. According to the Sinho Committee, 48.4% of all Scheduled Tribes are in the BPL (below poverty line) zone. This is 4.25 crores of the population. In this manner, the exclusion operates additionally, in a geographical manner, too, denying the poorest tribals, living in these areas, the benefit of reservation meant for the poor.]

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 51