தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்

8. காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே!

பழந்தமிழ்நாட்டில் காவலுக்கு முதன்மை அளித்தனர். எனவே, நாடு காவலில் சிறந்து இருந்தது. நாட்டு மன்னனையே காவலன் என்று மக்களும் புலவர்களும் கூறினர். மன்னர்கள் தாங்களும் மாறுவேடமிட்டும் இரவுக் காவல் புரிந்தும் காவலில் பங்கேற்றனர்.

இல்லற வாழ்க்கையிலும் காவலுக்கு முதன்மை அளித்தனர். தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதை ஆறுவகையாகக் கூறியுள்ளனர். அவற்றுள் ஒன்று காவலின் பொருட்டுப் பிரிவதாகும். எனவே, இதனைக் காவற் பிரிவு என்கின்றனர்.

பதிற்றுப்பத்து முதலான சங்க இலக்கியங்களிலிருந்து காலந்தோறும் இலக்கியங்கள் தமிழ்நாட்டுக் காவல் சிறப்பைக் கூறுகின்றன. தொல்காப்பியத்திற்கு விளக்கவுரையாக அமைந்த அகப்பொருள் விளக்கத்தில் நாற்கவிராச நம்பி,

அறப்புறம் காவல் நாடு காவல்எனச்

சிறப்புஉறு காவல் திறம்இரு வகைத்தே

எனக் காவலை இருவகை உள்ளமையைக் குறிப்பிடுகிறார். முதலாவது, அறமன்றங்கள் முதலான இடங்களைப் பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு. இரண்டாவது பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளும் பிரிவு என்கின்றனர். இதனை நாம் உள்நாட்டுக்காவல் என்றும் எல்லைக்காவல் என்றும் கூறலாம்.

பழந்தமிழ்நாட்டு நிலை போல் இப்போதும் தமிழ்நாட்டுக் காவல்துறை சிறப்பான நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர். உலக அளவில் தமிழ்நாட்டுக் காவல்துறை சுகாத்துலாந்து காவல்துறைக்கு இணையானது, அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ஆனால், 2022 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 சிறந்த காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை இல்லை. இந்திய அளவிலும் தமிழ்நாட்டுக் காவல்துறை 2019 இல் முதலிடத்தில் இருந்தது, 2020இல் ஐந்தாம் இடத்திற்குச் சறுக்கியுள்ளது.

தேசியக் குற்ற ஆவணக் கழகத்தின்(NCRB) புள்ளிவிவரப்படி 2020 இல் 430 விழுக்காடு உயர்ந்துள்ளது என்கின்றனர். தமிழ்நாட்டில் குற்ற எண்ணிக்கை மிகுதியாக இருப்பதற்கான காரணம், தலைக்கவசம் அணியாமை வழக்குகள், மகுடை(கொரானா)தொற்று விதி மீறல் வழக்குகள் என விதி மீறல் வழக்குகள் தமிழ்நாட்டில் மிகுதியாக உள்ளதே காரணம் எனத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டு முதல்வர் தமிழ்நாட்டில்  குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இனியும் குறையும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

புள்ளிவிவரங்களை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் 2020இல் இந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அறிந்தேற்பான ‘குடியரசுத் தலைவர் கொடி’ 2020 ஆம் ஆண்டிற்கானது தமிழ்நாடு காவல்துறைக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இதுவரை 10 ஆண்டுகள் வழங்கினாலும் தென்னிந்தியாவில் முதன்முறையாகத் தமிழ்நாடுதான் இக்கொடி ஏற்பைப் பெற்றுள்ளது. அதிலும் முன்னரே இந்திய அளவில் ஐந்தாவது வரிசையில் 2009 இல் தமிழ்நாடு பெற்றுள்ளது. (தமிழகக் காவல்துறையின் 150ஆம் ஆண்டை முன்னிட்டு இது வழங்கப்பட்டது.) அஃதாவது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இஃது இரண்டாம் முறையாகும்.

இத்தகைய சிறப்பைப் பெற்ற தமிழ்நாட்டரசின் காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லை என்பதே பேரவலமாகும்.

காவல்துறையின் முத்திரையில் தமிழ் இல்லை; கொடியில் தமிழ் இல்லை; குடியரசுத்தலைவர் கொடியில் தமிழக அரசின் காவல்துறையின் கொடியும் இடம் பெறுவதால் ஆங்கிலத்தில் உள்ள அக்கொடியே இதிலும் இடம் பெற்றுள்ளது; ஊர்திகளில், காவல்துறை, உலா ஊர்தி, காவல் ஊர்தி  எனக் குறிப்பது எவற்றிலும் தமிழ் இல்லை. சாலை நடுவில் வைக்கும் தடுப்புப் பலகைகள், அறிவிப்புப் பலகைகள், சாலை வழிகாட்டிகள், காவல்துறை அறிவிப்புகள் முதலியவற்றில் தமிழை இல்லாமல் ஆக்குவது ஏன்?

மேலே உள்ள படங்கள் மூலம் தமிழ்நாட்டுக் காவல்துறை ஆங்கிலத்திற்கு அடிமையாக உள்ளதையும் பிற மாநிலங்களில் தத்தம் மொழியைப் பயன்படுத்துவதையும் அறியலாம். அவர்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை உள்ளவர்கள், உப்புபோட்டு உண்பவர்கள்.

காவலர்கள் தோளில் அணியும் பதவிக் குறியீட்டில் (இரு நிலை நீங்கலாகத்) தமிழ் இல்லை; காவலர்களின் வருகைப் பதிவின் பொழுதும் அணிவகுப்பின் பொழுதும் ஆங்கிலம் மூலமே ஏவுகின்றனர். அரசு விருதுகளில் தமிழ் இல்லை.

பதவி மாறுதல் ஆணைகளில் தமிழ் இல்லை. தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் ஆங்கிலேய அதிகாரிகள்(?) உள்ளனர் போலும்! அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு(?)த்தான் ஆணை பிறப்பிக்கின்றனர் போலும்! எனவே, அவர்களுக்காக – ஆங்கிலேயர்களால்(?) ஆங்கிலேயருக்கு(?) – ஆங்கிலத்தில்  ஆணை பிறப்பிக்கின்றார்கள் என்பது தெரியாமல், நாம்தான் தமிழில் ஆணைகள் இல்லை எனச் சொல்லி வருகிறோமோ? முன் ஏர் செல்லும் வழிதானே பின்னேரும் செல்லும். எனவே, துறைத் தலைமையினரும் ஆங்கிலேயர்களுக்காகப்(!) பணியாற்றுவதால், மாறுதல் ஆணை என்று இல்லை,  பொதுவான ஆணைகள் பலவற்றிலும் தமிழைத் தேட வேண்டி உள்ளது.

தமிழ்நாட்டுக் காவல்துறையில், கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், தமிழார்வலர்கள் உள்ளனர். தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தைச், சொல்லும் படிச் செயலாற்றுவதற்கு அதிகாரிகளும் ஊழியர்களும் உள்ளனர். இருப்பினும் தமிழகக் காவல்துறையில் தமிழுக்கு இடமில்லாதது ஏன்? என்றுதான் புரியவில்லை.

இப்பொழுது முன்நிகழ்வு ஒன்று நினைவிற்கு வருகிறது. மதுரையில் சித்திரைப் பொருட்காட்சி அரங்கங்கள் ஆங்கில மயமாகக் காட்சி யளித்தன. 1991 இல் நான் மதுரை தமிழ் வள்ச்சித் துறை உதவி இயக்குநராக இருந்த பொழுது இவற்றை மாற்றுவதற்காகத் தமிழில் எழுதும் துறைகளுக்கு நால்வகையில் மும்மூன்று பரிசகளாக 12 பரிசுகள் அறிவித்தேன். சிறப்பாக எழுத வழிகாட்டவும் செய்ததால் அரங்கங்கள் முழுமையும் தமிழாயின. அவ்வாறுதான் முழுமையும் ஆங்கிலமாக இருந்த காவல் துறை அறிவிப்பிற்குப் பின்னர், முழுமையும் தமிழாக மாறியது. காவல்துறைக்கு முதல் பரிசும் கிடைத்தது. நினைத்தால் அருவினை ஆற்றும் காவல்துறை, எண்ணினால் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில்  முதலிடம் பெறலாம் அல்லவா?

எங்கெங்குக் காணினும் ஆங்கிலமடா – தமிழா

ஆங்கிலம் ஒன்றே  எண்ணமடா – எங்கும்

தவறியும் தமிழைக் காணோமடா – அந்த

ஆங்கிலம்தான் அன்னை மொழியோடா!

என்று உள்ள நிலையை மாற்றி மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் தனிக் கருத்து செலுத்தி தமிழ்நாடு எங்கும் தமிழ்மணம் கமழச் செய்வார் என எதிர்பார்க்கலாமா?

இலக்குவனார் திருவள்ளுவன்