(பெருந்தலைச் சாத்தனார் 3 : ந. சஞ்சீவி தொடர்ச்சி)

சங்கக்காலச் சான்றோர்கள் – 22

3. பெருந்தலைச் சாத்தனார் (தொடர்ச்சி)

 

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.’         (குறள், 657)

எனும் மறைமொழி அறியாதவரா நம் புலவர் பெருமானார்? கடல் போலக் குமுறிய புலவர் நெஞ்சில் கருத்து மின்னல் ஒன்று மின்னியது. அம்மின்னல் ஒளி அவர்க்கு ஒரு நல்வழி காட்டியது. எழுச்சி கொண்டார் புலவர். உணர்ச்சிக் கடலாயிருந்த அவர் உள்ளம் உறுதி மலை யாயிற்று. அவர் தம் துயரெல்லாம் மறந்தார்; வறுமைத் தீயில் வேகும் தம் மனைவியார் சிந்தும் கண்ணீரையும், பசிக்கொடுமைக்கு இரையாகிய தம் அன்புச் செல்வத்தின் அலறலையும் மறந்தார்; தம் வாழ்வினும் நாட்டின் நல் வாழ்வும், அருளின் வெற்றியுமே பெரியவெனக் கருதினார். அக்கணமே குமண வள்ளலிடம் விடை பெற்றுக் கொண்டு காடும் மலையும் பின் ஒழிய, ஒலியினும் ஒளியினும் வேகமாய்ப் பறந்தோடிச் சென்றார் இளங்குமண னிடம், நெட்டைக் கனவில் நீந்திக்கொண்டு தன்னை மறந்து அரியணையில் கிடந்தான் இளங்குமணன். அறத்தின் திருவுருவைக் கானகத்திற்கு அனுப்பிவிட்டு இறுமாந்திருந்த அவன்பால் வாயிற்காவலர் விரைந்தோடி, வாளும் கையுமாய்ப் புலவர் ஒருவர் வந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். அவன், ‘தடையின்றி வர விடுக!’ என்றான். சிந்தனையில் ஆழ்ந்தது அவன் உள்ளம். ‘வாளும் கையுமாய்ப் புலவரா!…… அண்ணன் தலைக்கு விலை வைத்தோமே!…. என்னாயிற்றோ!’ என நினைந்தான். அவன் தலை சுழன்றது; மனம் கலங்கியது. ‘அண்ணன் தலைக்கு விலை வைத்த-வாள் வைத்த கயவன் நீ!’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் அவன் உள்ளத்தினுள்ளே ஒலித்தது. இளங்குமணன் இதயம் துடித்தது. புலவரும் உருவிய வாளுடன் உள்ளே புகுந்தார். இளங்குமணன் வாளுடன் வரும் வண்டமிழ்ப் புலவரைக் கண்டான். ‘அண்ணன் தலை என் கையிலா!’ என்று அலமந்து நடுங்கியது அவன் மனம். தானாடாவிடினும் தன் சதை ஆடுமன்றோ? அவன் தன் பால் வந்த தண்டமிழ்ப் புலவர்க்கு இருக்கை அளித்து, அவர் வாயினின்று வரும் சொல் நோக்கி நின்றான். அவன் தோற்றத்தையும் துடிப்பையும் கூர்ந்து நோக்கியவராய்ச் செவ்வியறிந்து அவன் செவிகளில் செந்தமிழ் அமுதை வார்க்கலானார் சாத்தனார்:

‘எப்பொருளும் நிலையாத இந்நிலவுலகின் கண்ணே நிலை பெறுதலைக் கருதியவர், தம் புகழை இந்நிலமிசை நிறுத்தித் தாம் மறைந்தனர். அணுகுதற்கரிய தலைமை யுடைய பெருஞ்செல்வர், வறுமையால் இரப்போர்க்கு ஒன்றும் ஈயாமையால் பழமை சான்ற கொடையாளரைப் போலப் பின்னும் தம் பெயரை நிறுத்தி உலகத்தோடு இடையறாது தொடர்ந்து புகழுடன் இன்றும் விளங்குதலை அறியாது போயினர். யான் பாவலர்க்குப் பரிசிலாகச் சிறந்த யானைகளை மிகுதியாகக் கொடுக்கும் அழிவில்லா நற்புகழ் சான்ற வலிய குதிரையையுடைய தலைவனைப் பாடி நின்றேன். ‘பாடி வந்த பரிசிலன் பயனின்றி வாடினனாகப் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது!’ என நினைந்து, தன்னிற்சிறந்த பொருள் வேறின்மையால், தன் தலையை எனக்குத் தருவதற்காக வாளைத் தந்தான் நின் தமையன்! அவனைக் கண்டு வென்றி மிக்க உவகையால் ஓடி வந்தேன்!’ என்ற பொருள் பொதிந்த பாடலைக் கூறினார் சாத்தனார்:

மன்னு உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே,
துன்னருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்(கு) ஈஇ யாமையின்
தொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே;
தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல்
ஆடியல் யானை பாடுநர்க்(கு) அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனெ னாகக்கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடிழந் ததனிறு நணியின் னாதென
வாள் தந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்;
ஆடுமலி உவகையொடு வருவல்
ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே.’         (புறநானூறு. 165)

நல்லிசைப் புலவரின் நற்றமிழ்ச் சொற்களைக் கேட்டான் இளங்குமணன்; நாணினான், வாள் தந்தனனே தலை எனக்கீய,’ என்ற புலவரது மொழி அவன் நெஞ்சைப் பிளந்தது. ஆறாத்துயர் உற்றான் : கண்ணீர் வடித்துக் கற்சிலைபோல நின்றான். சாத்தனார் இளங்குமணன் கண்ணீர் வெள்ளத்தைக் கண்டார். கடைத்தம்பியாய் இருந்த அவன் கல் நெஞ்சும் கரைந்து உருகும் நீர்மையை அறிந்தார்; வசையில்லாக்குடியில் தோன்றிய அவன்பால் விலங்கு மனம் அழிந்து தெய்வமனம் முகிழ்த்தலை உணர்ந்தார்; உவகை கொண்டார்.

இளங்குமணன் தன் பாழ் நெஞ்சின் பான்மை உணர்ந்த அக்கணமே அரியணை-யினின்றும் இழிந்து, புலவர் திருவடிகளில் வீழ்ந்து, ” அருந்தமிழ்ப் பெரியீர், எவ்வாறேனும் கானகம் பற்றியுள்ள என் அண்ணனை நாடாளும் காவலன் ஆக்க வேண்டும். தீ நெறிப்பட்ட என் வாழ்வு இனியேனும் நன்னெறி காணத் துணை புரிய வேண்டும்,” என்று இரந்தான். பாய்மா பூட்டிய தேரின் மீது புலவரை அமரச்செய்து கானகம் நோக்கி விரைந்தான் இளங்குமணன். வான் வழங்கியற்கை வளியென, அதனினும் கடுஞ்செலவுடை மனமெனப் பறந்தது தேர். கல்லும் முள்ளும் நிறைந்த அருவழியெல்லாம் கடந்து சென்று அருட்கோமானைக் கண்டனர் இருவரும். தன் எதிரில் நாணி நின்ற இளங்குமணனைக் குழந்தைபோல வியந்து நோக்கினான் குமணன். ஒளி வீசும் கண்களுடன் நின்ற புலவர் பெருமானார், உவகை பொங்கும் நெஞ்சுடன் ஈரநன்மொழி பல புகன்று இருவரையும் இன்புறச் செய்தார்; அதன் பின் குமண வள்ளலை நோக்கி, ‘நல்லிசைத் தோன்றலே, இனி நாடாளும் பொறுப்பை நீயே ஏற்க வேண்டும்’ என்றார். அரசாளும் பெருந்துன்பத்தினின்றும் நீங்கி இயற்கைச் சூழலின் இனிமையில் மூழ்கியிருந்த குமண வள்ளலோ, சற்றே தயங்கினான். ஆனால், என் செய்வான்! அவன் தலையும் அவன் உடைமை அன்றே. அது புலவர் பெருமானது உரிமையன்றோ? அதற்கு மணி முடி புனைய அவர் விரும்பின், அதை மறுக்க அவனால் இயலுமோ? எனவே, அவன் சான்றோரின் கருத்துக்கு இசைந்தான். நாடு திரும்பினான்; மணி முடி புனைந்தான்; செங்கோல் ஏந்தினான்; அருளாட்சி புரியத் தலைப்பட்டான். அறிந்தனர் புலவரும் பாணரும்; அளவிலா மகிழ்வு கொண்டனர். ‘கொடை வள்ளல் குமணன் வாழ்க! வள்ளலின் தலை காத்த பெருந்தலைச் சாத்தனார் பெருந்தலைச் சாத்தனாரே! அவர் வாழ்க! நீடு வாழ்க!’ என்ற வாழ்த்தொலி எண்டிசையிலும் எதிரொலித்தது. ‘அறம் வென்றது!’ ‘தமிழ் வென்றது!’ என மாந்தர் யாவரும் இன்பக் குரவையாடினர்; பாடினர்; பண்டுபோலக் குமணவள்ளலின் திருநாட்டில் கலை முழங்கியது; கருணை பெருகியது; எழில் நிறைந்தது; இன்பம் சுரந்தது.

மீண்டும் மணி முடி தாங்கிக் குடி புறங்காக்க ஒருப்பட்ட குமண வள்ளலின் திருவோலக்கத்தில் சின்னாளே தங்கினார் சாத்தனார். வறுமையால் துயருறும் தம் தலைவியாரது துயரமும் மழலைச் செல்வத்தின் அவலமும் களைய அவர் உள்ளம் துடித்தது. புலவர் பெருமானரது இதயத் துடிப்பை உணர்ந்தான் குமணவள்ளல். தம் ஒழுக்கத்தோடியைந்த உணர்வால்-சொல்லால்-செயலால் செயற்கருஞ்செயல் புரிந்த செந்தமிழ்ப் பெரியாரைப் பிரிய அவன் மனம் ஒருப்படவில்லை. அவன் பெரிதும் வருந்தினான். எனினும், தன் பிரிவினும் மிக்க பெருங் துயரம் நிறைந்த வறுமை வாழ்வு வாழ்ந்து நலியும் நற்றமிழ்ச் செல்வரின் குடும்பத்தை நினைந்தான்; தன் துயர் மறந்தான்; பொன்னும், மணியும், பாய்மாவும், மதகளிறும் ‘போதும், போதும்’ எனப் புலவர் கூறி மறுக்கும் அளவிற்கு வாரி வழங்கினான். அருள் ஒழுகும் குமண வள்ளலின் கரம் ஈந்த செல்வமனைத்தையும் பெற்ற சாத்தனார் பெருமகிழ்வு கொண்டார்; அளக்கலாகாச் செல்வச் சிறப்புடன் தம் ஊர் மீண்டார் : குடும்பத்தின் வறுமைப் பிணியைக் களைந்தார்: ஆம்பி பூத்த அடுப்பில் அறுசுவை உண்டி நாளும் அடும்படி செய்தார்; துயரக் கண்ணீர் வடித்து வாழ்ந்த தம் மனைவியார் பெருமிதமும் பூரிப்பும் கொண்டு வாழும்படி செய்தார். பாலின்றி அழுது துடித்த தம் குழவி குறையேதுமின்றி அரசிளங்குழவி போல விளங்கச்செய்தார். சான்றோரின் தமிழகம் விருந்தோம்பும் அரண்மனையாய் விளங்கியது.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்