(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  27 –  தொடர்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  28

15. போர்கள் 

‘போர்’ என்பது இன்று எல்லோராலும் வெறுக்கப்படும் ஒன்றாக முழங்கப்பட்டு வருகின்றது.  ஆயினும், ஆங்காங்கே போர் ஆயத்தங்களும் போர் முழக்கங்களும் நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன. ” அமைதியை நிலை நாட்டவே போர் ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளோம்” என்று பறையறையும் அரசுகளும் உள.  கட்சிக் கொள்கை, சமய வேறுபாடு, பொருட்பற்று, பதவி விருப்பம் ஆயவைபற்றி ஆங்காங்கும் போர் இயல் காட்டும் நிகழ்ச்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன.

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

 புதுவது அன்றுஇவ் வுலகத் தியற்கை”    (புறநானூறு -76)

என்று இடைக்குன்றூர்கிழார் இயம்புவது மனித இயல்பை எடுத்துக்காட்டுவதாகும்.  எல்லா உயிர்கட்கும்  இயல்பாக உள்ள பிறவிப் பண்புகளுள் போர் விருப்பமும் ஒன்றாகும்.  போர் முனைப்பை அடக்கி அன்பும் அருளும் பொருந்த வாழ்வதே உயர்வாழ்வாகும் என்ற நல்லறிவு வரப்பெற்று வாழப் பழகி வருவது மக்களினம் ஒன்றே.  ஆயினும் உரிமையைக் காக்கவும், மான இழிவைத் தடுக்கவும், தற்காப்புக்காகவும் போர் வேண்டப்படுகிறது. ஒருவருடைய தனி வாழ்வைத் துன்பமின்றி இன்பமுறக் கொண்டு செல்வதின் பொறுப்பை அரசே ஏற்றுக்கொண்டு விட்டதால் தனி ஒருவர் போர் முயற்சியில் ஈடுபடுவதற்குரிய கட்டாய நிலை கிடையாது. ஆனால், அரசு தன் குடிமக்களிடையே அமைதி வாழ்வை நிலைநாட்டவும், அயல்நாட்டார் அறநெறி மீறிய வன்முறைச் செயல்களை எதிர்த்து ஒடுக்கவும் அது போர் முயற்சியை மேற்கொள்ள  வேண்டிய நிலைக்கு ஆளாகின்றது.  அதனால்தான்,

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

 என்ன பயத்ததோ சால்பு”    (குறள்-987)

என்று அறம் உரைத்த திருவள்ளுவரும் பொருட்பாலின் முதற்பாவின் முதற்சொல்லாகப் போர்க்குரிய ‘ படை’ யை வைத்து,

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்

 உடையான் அரசருள் ஏறு”   (குறள்-381)

என அரசுக்குரிய இன்றியமையாதன ஆறனுள் படைக்கே முதன்மை கொடுத்துள்ளார்.  பின்னரும் ‘படைமாட்சி’ ‘படைச்செருக்கு’ என இரண்டு இயல்களை வைத்துள்ளார்.  ஆதலின், போர் என்பது அறவே விலக்கமுடியாத ஒன்று என்று தெளிய வேண்டியுள்ளது. எல்லாரும் திருவள்ளுவர் கூறும் செவ்விய அறநெறிப்படி வாழும் இயல்பைப் பெறுவரேல் போரும் இராது; படையும் வேண்டா; நாட்டெல்லைப் பூசலும் மறையும்; உலகமே ஒரு குடும்பமாகும்அந் நாள் என்று வருமோ? விரைவில் வருவதாக!

இஃது இவ்வாறாகப் பழந்தமிழ் நாட்டில் நிலவிய போர்க் கொள்கை, நிகழ்ந்த போர்கள், இவைபற்றி இனி ஆராய்வோம்:    

சிலர் “பண்டைத் தமிழர்கள் ஓயாது போரிட்டுக்கொண்டு மடிந்தவர்கள்தாமே; தமிழ் இலக்கியம் அறிவிக்கும் உண்மை இதுதானே” என்று தாம் ஏதோ பிறர் அறியாத உண்மையை அறிந்துவிட்டதாக எண்ணி இறுமாந்து உரைப்பர்.  சில வரலாற்றாசிரியர்களும் இவ்வாறே எழுதியுள்ளனர். அவர்கள் ‘புறம்’ பற்றிய சில பாடல்களை மட்டும் படித்துவிட்டு இவ்வாறு கூறிவிட்டார்களேயன்றித் தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியங்களையும் முழுவதும் நன்கு கற்றறிந்து இவ்வாறு கூறினார்கள் என்று கருதுதல் இயலாது.

தமிழிலக்கியப் பகுப்பாம் ‘அகம்’, ‘புறம்’ என்பனவற்றுள் ‘புறம்என்பது போர்பற்றியும் கூறும் பாடல்களைப் பெற்றிருக்குமே யன்றி முழுதும் போரிலக்கியங்களாகவே இரா என்பதனை அவர் அறியார்.  அன்றியும் போர்பற்றிய பாடல்களை நாம் ஆராய்வோமானால் கி.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரையுள்ள சங்க இலக்கியங்களால் அறியவரும் போர்கள் ஒன்பதே ஒன்பதுதான். ஒன்பது நூற்றாண்டுகளில் ஒன்பது போர் என்பது  ஒரு நூற்றாண்டுக்கு ஒன்று வீதமன்றோ கொள்ளவேண்டும். கல்வியும் நாகரிகமும் பண்பாடும் மிகுந்துள்ளதாகக் கருதப்படும் இவ் விருபதாம் நூற்றாண்டில் கால் நூற்றாண்டுக்குள் இருபெரும் போர்களை உலகம் கண்டுளதே.

இதனை நோக்கும்போது சங்கக்காலத் தமிழர்கள் போர்வெறி பிடித்துப் போர் செய்தே வாழ்நாள்களைக் கழித்தார்கள் என்பது எங்ஙனம் பொருந்தும்?

தொல்காப்பியத்தில் புறத்திணையியலில் போர் பற்றி இயற்றுவதற்குரிய இலக்கியங்கட்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.  வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை முதலியன போர்முறை பற்றிய இலக்கியங்களுக் குரியனவே.  அவற்றைப் போர்க்குரியனவே எனக் கொண்டு “ போரையும் கலையாக்கிக் கொண்டனர்; போர்க்கலையில் திளைத்தனர் போர் வெறியர்கள்” என எண்ணிவிட்டனர் போலும்.

அன்றியும் போர்த் தொடக்கம் நிரை கவர்தலாக இருத்தலானும், போர்த் திணைகட்குரியோர் ஒவ்வொரு வகையான பூக்களைச் சூடிக்கொள்வர் என்று அவ்வப்பூக்களால் திணைகட்குப் பெயரிட்டிருத்தலானும், இவ் வொழுக்கங்களெல்லாம் மிக மிகப் பழங்காலத்துக் குரியன என அறுதியிட்டு அதன் விளைவாய்ச் சங்க காலத் தமிழ் மக்களைக் காட்டுவாழ் மக்கள் காலத்தவராகக் (People of the primitive age) கொள்ளும் வரலாற்றாசிரியரும் உளர்.  தொல்காப்பியத்தில் கூறப்படுவனவற்றுள் பல செய்திகள் அவர் காலத்துக்கு முந்தியனவும் உள.  தொன்றுதொட்டு வருகின்ற இலக்கிய மரபுகளைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கூறுகின்றார்.  புறத்திணையின் போர்பற்றிய செய்திகள் எல்லாம் தமிழ்நாட்டில் அவர்க்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பிருந்தே நிகழ்ந்து வந்தன.  அவற்றை இலக்கியத்தில் கூறுவது எவ்வாறு என்பதற்கே திணை, துறை வகுத்து இலக்கணம் கூறுகின்றார்.  “புறத்திணை இலக்கணம்” என்று அவரே கூறுகின்றார்.  ஆதலின், புறத்திணையில் கூறப்படுவன முழுவதும் அவர் காலத்து நடந்த நிகழ்ச்சிகள் என்று கருதுதல் சாலாது.

அன்றியும் போர்பற்றி அவர் கூறும் விதிகள் இக்

காலத்தும் நிலவும் உயர்ந்த கொள்கைகளாகவே இருக்

கின்றன. இக்காலத்தில் போர் ஆயத்தத்திற்கு எனப் படைகளைப் பெருக்கும் வல்லரசுகள் கூறுவதென்ன? அமைதியை நிலைநாட்டவும் வன்முறையில் காரணமின்றி ஈடுபடும் அரசை அடக்கவும், தற்காப்புக்காகவும் போர்க் கருவிகளைப் பெருக்குவதாகக் கூறிக்கொள்கின்றனர் அன்றோ? தொல்காப்பியர் `வஞ்சி’ என்பதற்கும் `தும்பை’ என்பதற்கும் கூறும் இலக்கணம் யாது? `வஞ்சி’ என்பது.

எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்

 அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்றே”                  (தொல்.பொ.62)

என்று கூறுகின்றார்.  அஃதாவது நாடுகளை வென்று தனதாக்கிக் கொள்ளும் விருப்பில் குறையாத குணத்தினையுடைய அரசன் நாட்டின்மீது படை யெடுக்குங்கால், அவனைத் தடுத்து நிறுத்தி வெல்லுதல் வேண்டும் என்பதாகும். ‘ தும்பை’ என்பது,

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்

 சென்று தலையழிக்கும் சிறப்பிற்று என்ப”   

       (தொல்.பொ-70)

என்று கூறுகின்றார்.  அஃதாவது தனது வலிமை யொன்றினையே உலகில் நிலைநாட்ட எண்ணங்கொண்டு படையெடுத்து வந்த வேந்தனைத் தன் நாட்டு எல்லையைக் கடப்பதற்கு முன்பே சென்று அவன் வலிமையை அழித்து வெல்லுதல் வேண்டும் என்பதாகும்.  ஆகவே, போர் என்பது தற்காப்புக்காகவும் முறைகடந்து  நாடு பிடிக்கும் விருப்பிலும் வலிமையை நிலைநாட்டும் நோக்கிலும் வரும் அரசரை அடக்கிச் செந்நெறிப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்று தொல்காப்பியர் தெளிவுற வரையறுத்துள்ளார்.  இன்று கூறப்படும் கொள்கையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு சங்ககாலத் தமிழ் நாட்டுப் பெரியோர் கூறியுள்ளனர் என்பது அறிந்து மகிழத் தக்கதுபோர் பற்றிய உயர்ந்த குறிக்கோளை வெளியிட்டவர்களைப் போர் வெறியர் என்பது அன்புக் கடவுளை அரக்கப்பேய் என்பது போலாகுமன்றோ?

தொல்காப்பியர்க்குப் பின் ஒன்பது நூற்றாண்டுகளில் ஒன்பது பெரும் போர்கள்தாம் நிகழ்ந்துள்ளனவாகக் குறிப்பிட்டோம்.  எல்லாப் போர்களும் தொல்காப்பியர் வகுத்த குறிக்கோள்படியே நடந்தன என்று கொள்ளுதல் முடியாதுதான்.  மன்னர்களில் ஒருவர் இருவர் அறநெறி கடந்தும் சென்றிருக்கலாம்.  அவ்வாறு நிகழ்ந்த ஒருவர் இருவர் போர் வெறிச் செயலை ஒரு நாட்டு மக்கள்மீது எக்காலத்துக்கும் உரியதாக ஏற்றிக் கூறுதல் அறத்தொடு பட்டதாகாது.  தவறுவது மக்கள் இயல்புதானே.  ஆயினும், சங்க க்காலத் தமிழ் அரசர்கள், ஓயாது தவறி உலகையே போர்க்களம் ஆக்கிலர்.

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்