(அகல் விளக்கு – மு.வரதராசனார். 31. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 13(தொடர்ச்சி)

அறைக்கு வந்த பிறகு என் மனம் அமைதியாக இல்லை. அவன் தனியே எங்காவது போய்த் தற்கொலை செய்து கொள்வானோ என்று மனம் அஞ்சியது. அதனால் உட்காருவதும் எழுந்து போய்ப் பார்ப்பதுமாக இருந்தேன். பக்கத்து அறைகளின் கதவின் ஒலி கேட்டாலும் அவன்தான் கதவைச் சாத்துகிறானோ என்று எழுந்து பார்த்தேன். ஏதாவது நஞ்சு வாங்கி வைத்திருந்து அதைக் குடித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வானோ, அப்படியானால் உள்ளே இருக்கிறான் என்று விட்டுவிடுவதிலும் ஆபத்து இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி எழுந்துபோய்ச் சன்னல் வழியாகப் பார்த்து வந்தேன். அவன் பழையபடி அதே கோலத்தில் கிடந்தான். கடிதம் காலையில்தானே வந்திருக்கிறது. அதற்குள் எப்படி நஞ்சு வாங்கிக்கொண்டு வந்து அறையில் வைத்திருக்க முடியும். வீணாக நம் மனம் அஞ்சுகிறது என்று ஒருவாறு தேறினேன்.

அப்பால் சிறிது நேரத்தில் அவனுடைய அறையில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. எழுந்துப் போய்ப் பார்த்தேன். அவன் படுக்கையில் உட்கார்ந்து இரண்டு மாணவருடன் பேசிக்கொண்டிருந்தான். கிழிந்த அழைப்பிதழையும் கடிதத்தையும் எடுத்து மறைத்துவிட்டிருந்தான். “உடம்பு நன்றாக இல்லை. ஒரே மயக்கம். வயிற்று நோவு. படிக்க முடியவில்லை” என்று பொய்யான காரணத்தை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“இரவில் நெடுநேரம் கண் விழித்துப் படித்திருப்பாய். அதனால் வந்திருக்கும்” என்றான் ஒருவன்.

“அல்லது, கண்ட வேளையில் எல்லாம் தேநீர் குடிக்கிறாயாமே, அதனால் வந்திருக்கும், சனியன்” என்றான் மற்றொருவன்.

“என்னவோ, தொல்லை” என்று சந்திரன் கண்களைத் தேய்த்து கைத்துண்டினால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, ஒரு கவலையும் இல்லாதவன் போல் காட்டிக் கொண்டான். சிறிது நேரத்தில் இப்படி நடிக்கக்கூடியவன் இன்னும் சிறிது நேரத்தில் கவலையை மறந்து நடக்கவும் முடியும், படிக்கவும் முடியும் என்று நம்பிக்கை கொண்டேன்.

நண்பர்கள் போனபிறகு சென்று சன்னல் வழியாகப் பார்த்தேன். பழையபடியே படுத்துக்கொண்டிருந்தான். ஆனால் விம்மலும் கண்ணீரும் இல்லைபோல் தெரிந்தது.

நாலைந்து முறை எழுந்து எழுந்து போய்ப்பார்த்தேன். அவன் அதே நிலையில் இருந்தான். மாலைச் சிற்றுண்டிக்கு நேரம் ஆயிற்று. போய் அழைத்தேன். “எனக்கு தேவை இல்லை. வீணாகத் தொந்தரவு செய்யாதே; என் அறைப் பக்கம் வராதே” என்று கடிந்தான்.

பேசாமல் திரும்பினேன். நான் சிற்றுண்டி உண்ட பிறகு வந்து சன்னலருகே நின்று பார்த்தேன். அவன் அங்கே இல்லை. என் நெஞ்சு திடுக்கிட்டது. கதவை மெல்லத் தள்ளிப்பார்த்தேன். பிறகுதான் அது வெளியே பூட்டப்பட்டிருந்ததைக் கவனித்தேன். எங்கே போயிருப்பான் என்று எண்ணிக் கவலைப்பட்டு நின்று கொண்டிருந்த போது, அவன் குளிக்கும் அறைக்குப்போய் முகம் அலம்பிக் கொண்டு திரும்பியதைக் கண்டேன். என் உள்ளம் குளிர்ந்தது. என்னைப் பார்த்ததும் பேசாமல், சாவி எடுத்து அறையைத் திறந்து உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டான்.

சிறிது நேரத்தில் நண்பர் சிலர் வந்து, “ஏன் இப்படி அழுமூஞ்சிபோல உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? வெளியே சுற்றிவிட்டு வந்து படிக்க உட்காரலாம். வா” என்று அவனை வற்புறுத்தி அழைப்பது கேட்டது. அப்படியாவது அவர்களோடு போனால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அவன் புறப்படுவதாக இல்லை. நண்பர்கள் வெளியே வந்தனர். சிறிது கழித்துப்போய் எட்டிப்பார்த்தேன். கட்டிலின் மேல் படுத்து அந்தப் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். இன்னும் சில நண்பர்கள் வந்து கதவைத் தட்டினர். “அட என்னப்பா! இரவெல்லாம் கண் விழித்தாயா? இப்போது தூங்குகிறாயே” என்றார்கள். “ஆமாம்’பா இப்போது எழுப்பித் தொந்தரவு செய்யாதீர்கள். தயவு செய்து போய்வாங்க” என்று படுத்தபடியே அனுப்பி விட்டான். நானும் எங்கும் வெளியே போகவில்லை.

விடுதி முழுதும் விளக்கொளி பரவியது. ஒரே நோக்கமாக மாணவர்கள் எல்லாரும் தம் தம் அறையில் படிக்கத் தொடங்கினார்கள். சந்திரனுடைய அறையில் மட்டும் விளக்கு இல்லை. அந்த வழியே வந்த சிலர், “இது நடிகமணி சந்திரனுடைய அறை அல்லவா? எங்கே சிவகாமி காணோமே! இமாவதியைத் தேடிக்கொண்டு போயிருப்பான்” என்று பேசிக்கொண்டு போனார்கள். அதைக்கேட்டபோது என் மனமே கலங்கியது என்றால், உள்ளே ஒரு மூலையில் படுத்துக்கிடந்த சந்திரனுடைய மனம் எவ்வளவு வருந்தியிருக்குமோ? அந்தப் பாவிப் பெண் இமாவதி அப்படி இவனை ஆசை காட்டி ஏமாற்ற வேண்டுமா?… இல்லை, இல்லை. அவளுடைய கடிதத்தைப் பார்த்தால் அப்படி ஆசை காட்டியவளாகத் தெரியவில்லையே. நண்பன் ஒருவன் மற்றொரு நண்பனுக்குக் கடிதம் எழுதியது போலவே எழுதியிருந்தாள். காதல் செய்து மணந்து கொள்வதாக ஆசைகாட்டியிருந்தால் இப்படி உண்மையான நட்புரிமையோடு திருமண அழைப்பு அனுப்பிருக்க முடியுமா? அழைப்போடு கடிதம் ஒன்று எழுதியிருக்க முடியுமா? கடிதத்தில் கலங்காமல் எழுதியிருக்க முடியுமா? தான் நன்றாகத் தேர்வு எழுதியிருப்பதாகவும், இனியும் அவ்வாறு எழுதிக் குறையை முடிக்கப் போவதாகவும் குறிக்க முடியுமா?

அதே கடிதத்தில் சந்திரனும் நன்றாக எழுதி வெற்றி பெறவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியுமா? ஒரு வேளை போலி ஆசைகாட்டி அவனை ஏமாற்றிய வேசித்தனம் உடையவளாக இருந்தால், இப்படி உண்மையன்பு உள்ள ஒரு கடிதம் எழுத முடியுமா? ஏமாற்றியவள் தன் ஏமாற்று வித்தையை வெளிப்படையாகக் காட்டி அழைப்பிதழை அனுப்புவாளா? இருக்கவே இருக்காது. இமாவதி உண்மையாக நல்ல பெண்ணாகவே இருக்க வேண்டும். சந்திரனிடத்தில் அன்பு மிகுந்த பெண்ணேதான்.

ஆனால் அந்த அன்பை இவன் காதல் என்று எண்ணிவிட்டான், பைத்தியக்காரன். ஆண் ஒருவன் மிகுந்த அன்பு செலுத்தினால் அது நட்புத்தானே? அப்படிப்பட்ட அன்பை ஒரு பெண்ணும் ஒருவனிடம் செலுத்த முடியாதா? அதுவும் நட்புத்தானே? ஆணுக்கும் பெண்ணுக்கும் மனத்தில் அன்பு நட்பு எல்லாம் உண்டு அல்லவா? பெண் அன்பு செலுத்தினால் அதை ஏன் ஆண்கள் காதல் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். என்னிடம் என் தங்கை அன்பு செலுத்துவதுபோல், ஒரு பெண் உடம்பின் எண்ணம் இல்லாத அன்பைச் செலுத்த முடியாதா? இவ்வளவு கூர்மையான அறிவு உள்ள சந்திரன் இதை உணராமல் அலைகின்றானே! இவனுடைய அறிவையும் அழகையும் கண்டு அந்தப் பெண் அன்பு கொண்டிருப்பாள்! அந்த அன்பை உடம்பின் எண்ணம் இல்லாமல் நட்பாக வளர்த்திருப்பாள்! அவளால் முடிந்தது; இவனால் முடியவில்லை. காதல் என்று கோட்டை கட்டிவிட்டான். இன்று கலங்கி நிற்கிறான் என்று பலப்பல எண்ணினேன்.

உணவு நேரத்தில் சில மாணவர் வந்து கதவருகே நின்று, “எங்கே போயிருக்கிறான். காணோமே” என்றார்கள். அவர்களில் ஒருவன், “இதோ பூட்டு இல்லையே! விளக்கு அணைத்துவிட்டு உள்ளே இருக்கிறான்” என்றான். “சந்திரா! சந்திரா!” என்று கதவைத் தட்டினார்கள். அதற்குள் ஒருவன், “பாமா கதவைத் திறவாய்” என்று பாட்டுப் பாடத் தொடங்கினான். சந்திரன் உள்ளே இருந்து, “எனக்கு உடம்பு நன்றாக இல்லை கொஞ்சம் தூங்கிவிட்டுப் பிறகு வருவேன். தொந்தரவு செய்யாதீர்கள்” என்றான். அவர்கள் அங்கிருந்து உணவுக் கூடத்துக்குச் சென்றார்கள்.

நான் போய் அழைத்தாலும் அதே போல்தான் சொல்வான் என்று உணர்ந்து நானும் உணவுக்குப் புறப்பட்டேன். புறப்பட்ட நேரத்தில் மாலன் வந்து சேர்ந்தான். “என்ன! பக்கத்து அறையில் உங்கள் ஊர் ஆள் இல்லையே! விளக்கே காணோமே! ஆள் இல்லா விட்டாலும் விளக்குப் போட்டுப் பூட்டிவிட்டு மின்சாரத்தைச் செலவு செய்வது கல்லூரி நாகரிகம் ஆயிற்றே” என்றான். “உஃசு” என்று அவனைத் தடுத்து உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்றேன். வழியில், “அவனுக்கு மனம் நன்றாக இல்லை என்று குறிப்பாகச் சொன்னேன். “ஏன்? ஏதாவது காதல் வந்து முற்றி விட்டதோ? அதுவும் தேர்வு நெருக்கடியிலா? அந்தப் பாழும் காதல் இன்னும் நான்கு நாள் தேர்வு முடிந்த பிறகு வந்து தொலையக் கூடாதா?” என்றான். “எனக்கு ஒன்றும் தெரியாது” என்று மழுப்பினேன்.

உண்டு திரும்பி வந்து பார்த்தபோது, சந்திரனுடைய அறை பூட்டியிருந்தது. உள்ளே விளக்கு இல்லை. மனம் திடுக்கிட்டது. இன்னொரு பக்கம், “அப்படி எங்கும் போயிருக்க மாட்டான். இன்னும் சிறிது நேரத்தில் உணவுக் கூடத்துக்கு வருவதாகச் சொன்னான் அல்லவா? அதன்படி உணவுக்குத்தான் போயிருப்பான். நம் எதிரே வரவில்லை. ஒருகால் தெற்குப்படி வழியாக இறங்கிப் போயிருப்பான்” என்று ஒருவகையில் ஆறுதலும் அடைந்தேன்.

என் முக வாட்டத்தை உணர்ந்த மாலன், “ஏன் அப்படிக் கவலைப்படுகிறாய்? சந்திரனுக்காகவா? உன்னை அவன் ஒரு பொருளாகவே கருதவில்லையே. நீ மட்டும் ஏன் இப்படி உயிரை விடுகிறாய்?” என்றான்.

“இவன் எப்படி இருந்தாலும் இவனுடைய அம்மா, அப்பா அத்தை எல்லாரும் நல்லவர்கள். குடும்பமே நல்ல குடும்பம். இவனும் என்னிடம் மிகமிக அன்பாக இருந்தான். இருவரும் ஓர் உயிர் போல் மூன்று ஆண்டுகள் கழித்தோம்” என்றேன்.

“சந்திரனுடைய ஊர் எது?” என்றான்.

ஊர் முதலியவற்றை எல்லாம் விரிவாகக் கூறினேன். அன்றுதான் மாலனும் தன் ஊரைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் விரிவாகக் கூறினான். சிறிது நேரம் வரையில் அக்கறையோடு கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு சந்திரனைப் பற்றிய எண்ணம் வந்துவிட்டது. மாலனை உட்காரவைத்து விட்டே எழுந்து போய்ப் பக்கத்து அறையைப் பார்த்தேன். பழையபடியே கதவு பூட்டியிருந்தது. திரும்பி வந்தேன்.

“இன்னும் வந்திருக்க மாட்டான்” என்றான்.

“வரவில்லை” என்றேன்.

“சரி, சரி படி. நம் கடமையைச் செய்யவேண்டும்” என்று அவன் எழுந்து சென்றான்.

நேரம் ஆக ஆக என் கவலை மிகுதியாயிற்று. என் அறையின் வாயிற்படியிலேயே நின்றேன். கால் நோகவே, உள்ளே நாற்காலியைச் சன்னல் பக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு, வழியில் போவோரை எல்லாம் பார்த்திருந்தேன். மணி ஒன்பது அடிக்கும் வரையில் அவ்வாறே இருந்தேன்.

ஒருகால் இமாவதியையே தேடிக்கொண்டு போய் விட்டானோ? திருமண ஏற்பாடு உண்மைதானா என்று கேட்டு வருவதற்காகப் போனானோ? அல்லது வேறு யார் வீட்டுக்காவது போயிருப்பானோ? அவனுக்கு இந்த ஊரில் யார் நண்பர்கள்? யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே. உணவுக் கூடத்துக்குப் போய் உண்ட பிறகு, தனியே இருப்பதற்குப் பிடிக்காமல், அங்கிருந்து யாரேனும் ஒரு நண்பனுடைய அறைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணினேன். உடனே எல்லா அறையையும் பார்த்துவர வேண்டும் என்று மனம் தூண்டியது. எழுந்து அறையைப் பூட்டி விட்டு மெல்ல எல்லாப் பக்கத்தையும் சுற்றி வந்தேன். மாலனின் அறைப் பக்கமாக வந்தபோது அவன் என்னைப் பார்த்துவிட்டான்.

 “என்ன? எங்கே போய் வருகிறாய்? அவனையா தேடுகிறாய்?” என்றான்.

“இல்லை தூக்கமாக இருந்தது. அதை மாற்றுவதற்காக இப்படி உலாவி வருகிறேன். நீ எழுந்து வரவேண்டா, படி நானும் போய்ப் படிக்கப் போகிறேன்” என்றேன்.

சந்திரனைக் காணாமலே என் அறைக்குத் திரும்பினேன். சரி, வெளியே யாருடைய வீட்டுக்கோ போயிருக்கிறான். காலையில் திரும்பி வந்துவிடுவான் என்று எண்ணி, படிப்பதற்காகப் புத்தகத்தை எடுத்தேன். படித்துக் கொண்டிருந்தபோது கதவு திறக்கும் ஒலி கேட்டு இருமுறை எழுந்து எழுந்து போய்ப் பார்த்தேன். அவனுடைய அறை பூட்டியது பூட்டியபடியே இருந்தது. மணி பத்து அடித்தது. சிறிது நேரம் படிப்பு, சிறிது நேரம் சந்திரன் நினைவு இப்படியே மாறி மாறிக் கழிந்தது. பக்கத்தில் உள்ள மரங்களிலிருந்து ஆந்தையின் ஒலியும் சுவர்க்கோழியின் ஒலியும் கேட்டன. தூக்கம் வந்தது. கடைசியாக எழுந்து போய் ஒரு முறை பார்த்துவந்து உறங்கிவிட்டேன்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு