(சனாதனம் – பொய்யும் மெய்யும் 79 தொடர்ச்சி)

அப்படியில்லை. எல்லா வகுப்பினரிலும் தமிழ்ப்பகைவர்களும் உள்ளனர்; தமிழன்பர்களும் உள்ளனர். ஆனால் பிராமணர்களில் தமிழ்ப்பகைவர்கள் மிகுதியாக உள்ளனர். இதனடிப்படையில் பிராமணர்களை மூவகையாகப் பிரிக்கலாம்.

அ.) தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றும் தமிழன்பர்கள்

ஆ.) சமற்கிருதத்தைத் தாய்மொழியாகக் கருதி, அதற்கடுத்தாற்போல் தமிழை எண்ணும் இருமொழிப் பற்றர்கள். சமற்கிருதத்தை முதன்மைப் படுத்தித் தமிழை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவோர் இவர்களில் உள்ளனர்.

இ.) சமற்கிருதமே உயர்வு எனத் தவறாகக் கருதி, அதனை நிலைநாட்ட முயலும் நோக்கில் தமிழ்ப்பகையாகச் செயற்படுபவர்கள்.

மூன்றாம் வகையினர் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தமிழைப் பழிக்கவும் தாழ்த்தவும் சமற்கிருதத்தைத் தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் இருக்கச் செய்யவும் வாழ்கிறார்கள். இவர்களின் தமிழ்ப்பகைச்செயல்களே ஒட்டு மொத்த பிராமணக் குலத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்துகிறது.

இதனை அறிந்த தமிழ் முரசு பத்திரிகை மலாயாவில் வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினர் தமிழர்கள் என்றும் மலாயா என்ற பெயரே தமிழர்களின் தொடர்பால் உருவானது, அதுமட்டுமின்றி, தமிழர்களின் பண்பாடும் இந்நாட்டு மக்களின் பண்பாட்டோடு இரண்டறக் கலந்து சிறப்புற விளங்குகின்றது என்று கூறி பல்கலைகழகத்தில் தொடங்க இருக்கும் இந்தியப் பகுதி இங்கு வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினரான தமிழர்களின் எதிர்கால நலனுக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் வகையில் அமைவதே சிறந்தது எனும் நிலையில் இலக்கியமும் பண்பாடும்மிக்க தமிழ்ப் பகுதியும் இந்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் இடம் பெறுமாறு நீலகண்ட சாத்திரி அறிவுரை அமைத்தல் வேண்டும் எனச் சாத்திரியாரிடம் வேண்டுகோள் விடுத்தது தமிழ் முரசு பத்திரிக்கை (தமிழ் முரசு, ஏப்ரல், 22, 1953, பக். 08).  சாரங்கபாணியின் முயற்சியில் தமிழர்கள் ஒன்று திரண்டு தனித்தமிழ்த்துறைக்குக் குரல் கொடுத்தனர்.

பேராசிரியர் நீலகண்ட(சாத்திரியா)ர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்குத் தனி இடம் ஒதுக்க இயலாதென்றும் தமிழுக்கென்று கேட்டால் இந்தி வேண்டும் என்று கிளர்ச்சி அதிகப்படுமென்றும், சமற்கிருதம், தமிழ் வகுப்புகள் ஏற்படுத்தி அதில் ஒருவர் பேராசிரியராகவும் மற்றவர் விரிவுரையாளராகவும் நியமிக்கப்படலாமென்று கூறியுள்ளார். மேலும், அதன் மூலம்தான் தமிழுக்கு ஆதரவு இருக்குமென்றும் மேற்கண்ட திட்டத்திற்கு எதிர்ப்பு ஏற்படுமானால் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்.

மலாயாவிலிருந்து நாடு திரும்பிய நீலகண்ட(சாத்திரி) செய்தியாளர்களிடம் தன் தமிழ்ப்கைச் செயல்களை மறைத்து விட்டு,  நேர்மாறான தகவல்களைக் கொடுத்துள்ளார் தினமணிச் செய்தியாளரிடம், மலாயாவில் தென் இந்தியாவில் உள்ள திராவிட கழகத்தைப் போன்று ‘தமிழ்ப் பண்ணை’ என்ற இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய அபத்தமான கோரிக்கையின் விளைவாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1953ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த இந்திய மொழிகள் துறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் மட்டும்தான் போதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் எவ்வளவு சொல்லியும் பலன் ஏற்படவில்லை அதனால் தனது மலாயா பயணம் தோல்வியுற்றதாக நீலகண்டர் தெரிவித்துள்ளார்.

“இவாள் இப்படித்தான் இருப்பார்கள்” என்று சொல்லும வகையில் பலரும் செயற்படுவதற்கு மற்றொரு சான்றையும் குறிப்பிடுகிறேன். மொரீசியசு மக்களுக்குத் தமிழிசை கற்றுத் தருவதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து இசை ஆசிரியர் ஒருவரைக் கலைபண்பாடடுத் துறை மூலம் அரசு அனுப்பி வைத்தது. அவர் அங்கு சென்று தமிழிசைக் கற்பிப்பதற்கு மாற்றாக நிகழ்ச்சிகளிலும் வானொலிகளுிலும வகுப்புகளிலும் சற்கிருதப் பாடல்களைச் சொல்லி வந்தார். அதே நேரம் இவரது பதவிக்காலம் முடிந்ததும் தாராபுரம் சுந்தரராசனை அனுப்ப முயன்ற பொழுது ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு அனுப்பவிடாமல் செய்து விட்டனர்.

மற்றொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மொரீசியில் தமிழ் கற்பிக்கத் தமிழாசிரியர்களைக் கேட்டிருந்தனர். தேர்வுகளைக் கூட இங்கே வந்து எழுதுவதாகவும் தெரிவிததனர். தமிழரல்லாதவர்களின் குறுக்கீட்டால், 50 ஆண்டுகளைக்கடந்தும் இக்கோரிக்கை நிறைவேறவில்லை. அதேநேரம் தமிழ்ப்பிராமண ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு என்றால் உடனே நிறைவேறியிருக்கும்.

இவ்வாறு ஆங்காங்கே சிலர் தமிழுக்கு எதிராக நடந்து கொள்வதால்தான் ஒ்ட்டு மொத்தக் குலத்தினருக்கும் களங்கம் ஏற்படுகிறது.

இவை குறித்து மேலும் அறியப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய ‘ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ என்பதில் இருந்து சில பகுதிகளை வினா-விடை 132இல் காணலம்.

  • (தொடரும்)