86. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதப் பகைவர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 86
- ? 86. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதப் பகைவர்கள் என்கிறார்களே!
- சனாதனத்தை எதிர்ப்பவர்கள் மதப் பகைவர்கள் அல்லர். உண்மையில் சொல்லப்போனால் மதம் செம்மையாக இருக்க வேண்டும், மதத்தைப் பின்பற்றுவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிப்பதாக இருக்க வேண்டும், நன்னெறியில் வாழ வழி காட்ட வேண்டும், அனைவரையும் சமமாகக் கருதும் உணர்வை உண்டாக்குவதாகக் கோட்பாடுகள் இருக்க வேண்டும் என நன்மத நம்பிக்கை உள்ளவர்களே. ஆதலின் இவற்றிற்கு எதிரான வாழ்க்கை முறை உள்ள சனாதனத்தை எதிர்க்கிறார்கள்.
அதே நேரம் இந்து மதம் என்பது குறித்த சிக்கலையும் பார்க்க வேண்டும். தமிழர்கள் இந்துக்கள் அல்லர். வடக்கே இருந்த ஆரியச் சமயத்தில் ஆட்கொள்ளப்பட்டார்கள். எனவே வடக்கே இருந்த இந்து சமயமாகத் திரிக்கப்பட்ட ஆரிய/இந்து சமயத் தவறான கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மீதும் ஏற்றப் பெற்றன. எனவே, இவர்களைத் தமிழர் சமயத்தவர் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் இந்து வேறு தமிழர் சமயம் வேறு என்று சொல்லி விடுவார்கள். எனவே, வட இந்து என்றும் தமிழ் இந்து அல்லது தென்னக இந்து என்றும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு சொன்னால்தான் தென்னிந்துக்களுக்கு வட இந்துக்களின் சனாதனம் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். தென்னிந்துக்களுக்குக் கடவுள் ஒன்றே, ஆனால், பல்வேறு உருவங்களாக வரையறுத்து வணங்குகின்றனர், பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் உதவ வேண்டும், அன்னதானம் அனைவருக்குமே அல்ல, பிராமணர்களுக்கு மட்டும் என்னும் வட இந்துக்கொள்கை இவர்களுக்கு உடன்பாடில்லை, இல்லாதவர்க்கு உதவ வேண்டும் என்பது தென்னவர் கொள்கை, பிராமணர்க்கு மட்டுமே உதவ வேண்டும் என்பதே வடவர் கொள்கை. எனவே வட இந்துக் கொள்கை எதிர்ப்பாளர்களை ஒட்டு மொத்த மத எதிர்ப்பாளர்களாகச் சிலர் கருதுகிறார்கள். வடவர் என்பதை வட இந்துவில் மேலாதிக்கம் கொண்ட பிராமணர் என்றே தெளிவாக அறிய வேண்டும். தென்னவர் கொள்கை என்பது தமிழ் நெறி. எனவே, இந்து மதத்தில் உள்ள இந்த முரண்பாடும், தென்னவருக்கு இருக்கும் ஒத்துப்போதல் உணர்வும் வெளிப்படையான எதிர்ப்பிற்குத் தடையாக உள்ளது. ஆனால் இவற்றில் சீர்திருத்தம் வேண்டும் எனக் கருதுபவர்களும் நல்லிணக்க உணர்வாளர்களும் மதப் பகைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். அதேபோல்தான் சனாதனக் கேடுகளைச் சுட்டிக்காட்டும் மத நம்பிக்கையாளர்கள், இந்து மதப்பகைவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.
தமிழர்கள் மட்டுமல்லர். இந்துவாகத் திணிக்கப்பட்ட மண்ணின் மதத்தினருக்கும் சனாதனம் என்பது விரும்பாத ஒன்றே. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சீக்கியம், பிற அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் இந்து சமயம் என்பதற்குள் இந்திய அரசு அடக்கி விட்டது. இவற்றுள் ஆரியத்தை எதிர்க்கும் பெளத்தம் முதலியவற்றையும் அடக்கியதுதான் விந்தை. முசுலிம், கிறித்தவர், பார்சி அல்லது யூதர் அல்லாத ஒவ்வொருவரும் சட்டப்படி இந்து ஆவார் என்பதுதான் கொடுமை. இவ்வாறு இந்துவாகத் திணிக்கப்பட்ட இவர்களில் பெரும்பான்மையருக்குச் சனாதனத்தின் மீது வெறுப்புதான் உள்ளது. எனவே, சனாதன எதிர்ப்பு இந்தியா முழுமையும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. எனினும் இந்துக்களாகவே அறிமுகப்படுத்தப்பட்டு வாழும் புதிய தலைமுறை யினருக்குச் சனாதனம் குறித்து விருப்போ வெறுப்போ இல்லை.
தவறாக வரையறுக்கப்பட்டவாறு சனாதனம் என்பதை இந்து எனக் கருதாமல் பார்த்தால் சனாதன எதிர்ப்பு என்பது மத எதிர்ப்பு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, நாட்டுச் சமயங்களை உரியவாறே குறிக்கவும் எல்லாரையும் இந்துக்களாகக் காட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசியல் யாப்பு திருத்தப்பட வேண்டும்.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 120-122
Leave a Reply