அக்கினிக் குஞ்சினைத் தமிழினம் தாங்கட்டும்! – புகழேந்தி தங்கராசு
விடுதலையின் முகவரி
நகர மறுக்கிற நதியென
உறங்குகிற கடற்கரை –
வல்வெட்டித்துறை.
பேசும் அலைகளின்றி
பேராரவாரமின்றி
அமைதி காக்கிற
அதன் மூச்சுபேச்செல்லாம்
விடுதலைப் பெருமூச்சு.
அந்தக் கரையில்தான்
உயிரெழுத்தின் நீட்சியென
அவதரித்தான் அவன்!
அந்த ஆயுத எழுத்தின்
உக்கிரத்தால்தான்
அடங்கிக் கிடந்தது
வக்கிர இலங்கை!
பிரபாகரன் – என்பது
ஒரு மனிதனின் பெயரில்லை…
அது
விடுதலையின் விலாசம்!
எமது இனத்தின்
அறுபதாண்டுக் கால
அவல வரலாற்றில்
பிரபாகரனும்
பிரபாகரனின் தோழர்களும்
எழுதியது மட்டும்தான்
பவள வரலாறு.
கையில் ஏந்திய ஆயுதங்களுடன்
அவர்கள் மெய்யில் தாங்கிய
உயிராயுதம் ஒன்றும்
எதிரிப் படையை
உதிரிப் படையாக்கியது.
நச்சுக்குப்பி – என்கிற அவ்வாயுதம்
எம் விடுதலை வீரர்களின்
உயிர் மெய்யெழுத்து.
அவர்கள் கழுத்தில்
மாலையாய்த் தொங்கி
அலங்கரித்தன நச்சுக் குப்பிகள்…
சொந்தச் சனம் காக்கச்
சாகவும் தயாரென்று
பகிரங்கமாகப் பறைசாற்றின.
போருக்குப் போகும்போதும்
போரிடும்போதும்
எந்தெந்த மாலையை அணிவதென்கிற
இலக்கணத்தையே திருத்தி எழுதி
நச்சுக்குப்பி மாலை அணிந்தனர்
மாசற்ற அந்த மாவீரர்கள்.
தங்கப் பதக்கங்களும்
வெள்ளிப் பதக்கங்களும்
அவ் உயிர்ப் பதக்கங்களுக்கு
நிகரில்லை ஒருபோதும்…
நெஞ்சில் அவர்களை
நிறுத்திட அதுபோதும்!
மாவீரர்கள் அவர்கள்
அமைதியாய்த் தூங்கட்டும்…
ஈழம் என்கிற
அவர்கள் கனா தாங்கி,
எம்மால் இயலாதது
எவரால் இயலுமெனும்
அவர்கள் வினா தாங்கி,
அணைய மறுக்கிற
அக்கினிக் குஞ்சினைத்
தமிழினம் தாங்கட்டும்!
அழுவதற்காகவோ
தொழுவதற்காகவோ
எழுதவில்லை இதையும்…
வீரர்கள் கனவில்
விழுதுவிட்ட ஈழம்
எப்படி வீழுமென்று
கேட்கிறது இதயம்!
இனப்படுகொலைக்கான
இறுதி நீதி
ஈழமாய்த்தான் இருக்கும்…
வரலாறு தெரிவிக்கும்
வழிவழிச் செய்தி இது!
அந்த நீதியை
நிராகரிக்கும் பொருட்டே
அழுதுபுரண்டு
அடம்பிடிக்கிறது இலங்கை!
பௌத்தம் அங்கே
மதம் மட்டுமல்ல…
நல்லிணக்கத்தின்
எதிர்ப்பதம்!
மாவீரர்களுக்காக
மணிகள் ஒலிப்பதைத்
தடுத்து நிறுத்த
பிக்குகள் துடிக்கலாம்….
காற்றின் திக்கை
அவர்கள் தீர்மானிக்க முடியுமா?
வீரர்கள் நினைவில்
சொலிக்கப் போகிற
அகல் விளக்கனைத்தையும்
அணைத்திட இயலுமா?
உயிராயுதங்களுக்கு
அருப்பணிக்கவென்றே
கங்குல் நெருப்பென
காந்தள் மலர்கள்
கண்விழிப்பதைத்
தடை செய்ய முடியுமா?
வீதிகள் தோறும்
விளக்குகள் ஏற்றுவோம்…
உண்மை ஒளிரட்டும்
உலகம் முழுதும்!
ஓங்கி ஒலிக்கின்ற
மணிகளின் பேரொலியில்
கேளாச் செவியரும்
நம் குரல் கேட்கட்டும்!
சர்வதேச வீதி வழிதான்
தீர்ப்புகள் வரவேண்டும்..
என்றாலும்
நமக்கான நீதியை
நாம்தானே பெறவேண்டும்…!
சிங்கள வெறியரால் வெட்டப்பட்டு
கரும்புச் சக்கையுடன்
சேர்த்தெரிக்கப்பட்ட
இக்கினியாகலை
கரும்பாலைத் தொழிலாளர்
எத்தனை நூறு பேர்?
ஆண்டாண்டுக் காலங்கள்
கடந்துவிட்டதால்,
அந்தச் சாம்பலில்
தடயத்தைத் தேடுதல்
இப்போது எளிதல்ல!
அறுபதாண்டாய்த் தமிழரைத் தாக்கி
டயரில் எரித்த
சிப்பாய்களையெல்லாம்
தேடிப்பிடித்துக் கூண்டிலேற்றுதல்
முழுமையாகச் சாத்தியமல்ல!
என்றாலும்
இலங்கை
கலங்குகிறதே ஏன்?
ஆறாண்டு முன்நடந்த
இனக்கொலைக்கு
கல்லம் மேக்ரேக்களும்
கண்கண்ட சாட்சிகளும்
இருப்பதைப் பார்த்துத்தான்
நடுங்குகிறது இலங்கை.
அறுபதாண்டு அநீதிக்கு
நீதி தேடக்
கிடைத்த வாய்ப்பை
நழுவ விடோமென்று
உறுதியேற்போம்…
கிருசாந்திகள் தொடங்கி
இசைப்பிரியாக்கள் வரை
சிதைத்துச் சிதைத்துப்
புதைக்கப்பட்ட
எம் பிள்ளைகளின் பெயரால்
உறுதியேற்போம்…!
களம் மாறியிருப்பது
உண்மைதான்…
என்றாலும்
மாவீரர்கள் பதித்த
விடுதலையின்
தடம் மாறவில்லை!
இன்றைய நிலையில்
நமக்குத் தேவை
அவர்களது அர்ப்பணிப்பு…
அவர்தம் ஓர்மம்..!
சூரியனையே கீழிறக்கி
குளிர் காய இயலுமெனும்
அவர்களின் மனோதிடம்.
அவர்கள்
ஆனையிறவை இழந்த நொடியில்
அழுது புலம்பவில்லை…
ஆனையிறவை மீட்ட நொடியில்
துள்ளிக் குதிக்கவில்லை…
நெருப்பையும் சீரணித்தார்கள்…
சிரிப்பையும் புறக்கணித்தார்கள்!
அவர்கள் சிந்திய இரத்தம்
பனித் துளியினும்
தூய்மையானது….
மழைத் துளியினும்
தாய்மையானது…
விழிநீரினும்
கூர்மையானது….
தாய்ப்பாலினும்
வலிமையானது…
பரிசுத்தமான அந்த இரத்தம்
ஈழத்தின் வேர் வரை
நனைத்திருப்பதால்தான்
அவரையே எம் இனம்
நினைத்திருக்கிறது.
மொழியும் வழியும்
தொப்புள்கொடியுமே
இணைக்கவில்லை
எம்மை….
அந்த இரத்தத் துளிகள்தாம்
இனத்தை
இணைத்த
செம்மை!
–ஈழநலப் படைப்பாளி புகழேந்தி தங்கராசு
— தமிழக அரசியல் – கார்த்திகை 10, 2046 / 26.11.2015
பக்கங்கள் 10-13
Leave a Reply