உழவனைக் கொன்றுவிட்டு உழவர் திருநாள்!

 

உழவனைக் கொன்றுவிட்டு

உழவர் திருநாள்!

எழவு வீட்டில்

எதற்கு விழா?

 

நிலம் வெடிக்கும் போதெல்லாம்

நெஞ்சு வெடிக்கும்

உழவனை உங்களுக்குத் தெரியுமா?

 

மண்ணை நேசித்தவனை

மரணத்தை யாசிக்க வைத்துவிட்டோம்

 

விடிய, விடிய

அவன் உழுதது

உங்களுக்காகத்தான்

இன்று

விடமருந்தி

நிலம் விழுந்ததும்

உங்களுக்காகத்தான்

 

இதுநாள் வரை

உழவின் சிறப்பைக் கொண்டாடிய நாம்

இன்று

உழவனின் இறப்பைக் கொண்டாடத்

தயாராகிவிட்டோம்

 

நீங்கள்

பொங்கும் பொங்கலில்

தளும்புவது அரிசியல்ல…

ஒரு ஏழை விவசாயியின்

ஆன்மா!

 

நீங்கள்

உலையரிசி போடும்போது

வாய்க்கரிசிகூடக் கிடைக்காமல்

வாழ்க்கை முடித்த

விவசாயியின்

அணைந்த உயிரை

நினைவேந்துங்கள்!

தஞ்சாவூரான்

துபை, ஐக்கிய அரபு அமீரகம்

+971 55 7988477