ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? – ப.மு.அன்வர்
ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்?
ஓசைக் கிளர்ச்சியினால்
உருண்டுவரும் உலகத்தில்
ஆசைக் கிளர்ச்சியினால்
அமைவதுதான் உயிர் வாழ்க்கை
ஆசைக் கிளர்ச்சி
அடர்ந்தெரியும் நேரத்தும்
ஓசையின்றி வாழ்ந்த
ஒருகாலம் குகைக்காலம்
ஊழித்தொடக்கத்தில்
ஊமையரின் கூட்டத்தில்
பாழைப் பதுக்கியவன்,
பயிலுமொழி பகர்ந்தவன்யார்?
அவிழ்ந்தவாய் அசைவில்
அகரம் பிறந்துவர
உவந்தொலிகள் ஒவ்வொன்றாய்
ஒலித்துவரக் கற்றவன்யார்?
ஒலியலைகள் ஒவ்வொன்றாய்
எழும்பி ஒருங்கிணைந்து
தெளிவான சொல்லமையக்
கண்டு தெளிந்தவன்யார்?
குறில்நெடிலின் வேற்றுமையைக்
குறித்தறிந்து முதன்முதலில்
அறிவறியும் கல்விக்கே
அடிப்படை அமைத்தவன்யார்?
வல்லினமும் மெல்லினமும்
வந்துவிழும் இடையினமும்
புல்லிவரக் கண்டு
புலன்வளர்த்த தலைமகன்யார்?
உந்திக் குழியே
ஒலிகள் பிறந்துவரும்
தத்தியெனக் கண்டு
தரம்பிரித்த அறிஞன் யார்?
பகுதி விகுதிகளின்
பகுப்பறிந்து சொற்குவியல்
தொகைதொகையாய்ச் சேர்த்தமைக்கும்
தொழில்நுட்பம் கண்டவன்யார்?
குற்றுகர நுட்பம்
குறித்த அறிவியலைக்
கற்றறிந்து மற்றவர்க்கும்
கற்பித்த கணக்கன்யார்?
தோன்றல் திரிதல்
கெடுதலெனச் சொல்புணரும்
ஆன்ற விதிவகுத்த
ஆராய்ச்சிக் காரன் யார்?
மூவிடமும் சுட்டி
முறைபிறழ்தல் இல்லாத
காவல் வகுத்த
கணக்காயன் எந்நாட்டான்?
எழுத்துக்கும் சொல்லுக்கும்
இலக்கணங்கள் உண்டுலகில்
பழுத்த பொருளுக்கும்
இலக்கணத்தைக் கண்டவன்யார்?
யாரென்ற கேள்விக்கே
என்தமிழன் பேரன்றிப்
பேர்சொல்ல வேறுயார்
பேர்வந்து முன்னிற்கும்.
ப.மு.அன்வர்: யார் அவன்?
‘உங்கள் குரல்’ தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்:
பக்கம்.43
Leave a Reply