–          இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன்

 

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

13

அறிக்கைவிட்டு  அறிக்கைவிட்டே நமை ஏமாற்றி

   ஆண்டுவந்தார் இந்தியாவை! தில்லி ஆட்சி

விரித்தவலை வீழ்ந்திருக்கும் இறக்கும்  புறாக்களாகி

   விசையற்றுப் பதவிசுகம் தமிழர் கண்டார்!

அவித்தமுட்டை போலாகிக் கருவும் செத்து

   அருந்தமிழன் தில்லிக்குத்  தீனி  ஆனான்!

புவியாண்ட தமிழினத்தான் புள்கூட்  டம்போல்

  பூமியெலாம் பறந்தோடி அகதி ஆனான்

14

ஊரிழந்தான் உணர்வழிந்தான் தேடித்  தேடி

  ஒவ்வொன்றாய்த் தமிழுயிரை  அவன்அ  ழித்தான்

தேரழித்தான் தெய்வீகப் பண்ப ழித்தான்

  தேனார்ந்த தமிழ்க்குழவி குழுவ  ழித்தான்

வேரழித்தான் தமிழ்ப்பற்றின் விசைய ழித்தான்

  விடியலையே ஈழத்தில் நிறுத்தி வைத்தான்

சீரழித்தான் தமிழ்ப்பெண்ணை! “வாடி இங்கே

  சீறுபுலி நீயா?”என்றே கேட்ட  ழித்தான்.

  15

சிறைப்பட்ட தமிழினத்தான் கண்ணைத் தோண்டி

  சிங்களத்தான் சிரித்தானே! தமிழ்உ  யிர்கள்

நிறைபட்ட இருப்பிடத்தைத்  தேர்ந்தெ  டுத்து

   நிதம்குண்டால் தமிழ்உயிர்கள் குடித்தான் பாவி!

அறைபட்டு பல்லிழந்தார்; இதழை, காதை

    அறுத்தெறிந்தான் சிறைக்குள்ளே! இந்தி யத்தாய்

உறைபட்ட பனிக்குள்ளே பானம் ஊற்றி

    உவகையிலே  குடித்தாளே! நித்தம்!! நித்தம்!!!

16

“இத்தனையும் மறந்தாயா முத்தா! நீயும்

   இளிக்கின்றாய் காமத்தின் பற்கள் காட்டி!

வித்தாக நீயிருப்பாய்! வீரத் திற்கு

  விளைபூமி  நான்ஆவேன்  எனறே நம்பி

முத்தமிட்டு உனைஏற்றேன்!  மணமு டித்தேன்!

  முத்தமிழை  மீட்டெடுக்க உறுதி  பூண்டேன்

கத்துகடல் அலையாக அலைந்த துன்பம்

  கண்மறந்து போயிற்றா முத்தா?” எனறாள்!

17

“மங்கைநீ சொல்வதெலாம் உண்மை! நானும்

  மறந்துவிட  வில்லையடி ஈழப் பாட்டை!

தங்கையை  அண்ணன் முன்கற்ப  ழித்தான்

  தரம்கெட்ட சிங்களத்தான்! எந்தன் தாயை

பங்குபோட்டுச்   சீரழித்தான் சிங்க  ளத்தான்

  பார்த்திருந்தும்  வாழ்கின்றேன் சாகா மல்நான்!

பொங்கிவரும் எரிமலையில் வாரிப் போட்டு

  பொசுக்கிற்றான் தமிழ்உயிரைச் சிங்க ளத்தான்!

18

நஞ்செடுத்துக் குடிஎன்பான் குடிக்கா விட்டால்

   நாயாகிக்  கடிகடிப்பான் ஈழ மண்ணில்

பிஞ்சுமுதல் கருவழித்தான் கருப்பப் பெண்ணைப்

  பிடித்திழுத்து  வயிறுகிழித் தழித்தான்! நித்தம்

செஞ்சுடராய்த்  தீஏந்தி  வெறித் தனத்தில்

  தெருவெல்லாம் எரியவைத்தான்! இதனைக் கண்ணால்

அஞ்சுமுதல் கணடவன்நான்”  என்றான்! மங்கை

  “அடுக்குஇன்னும் ஈழவர லாற்றை” என்றாள்!

19

“கடல்பிரித்த காரணத்தால் தமிழ கத்தின்

  உடல்பிரிந்தே  ஈழமென உருவா யிற்று!

தொடர்ஆட்சி  ஈழத்தில் நாமே செய்தோம்!

  தொல்புகழில் தமிழ்மன்னர் ஈழம் ஆண்டார்!

இடர்ஏதும் இல்லாமல் ஈழத்  தோடு

  இங்கிருக்கும் தமிழகத்தை   இணைத்தே ஆண்டார்!

படர்வான்போல்  தமிழ்விரித்து ஈழம் ஆண்ட

  பதிகத்தைப் படிக்கின்றேன் கேள்! கேள்!!” என்றான்.

 

(தொடரும்)