attai_ezhilarasi01

எழிலரசி அல்லது காதலின் வெற்றி

 

உலகினிற் சிறந்த வுயர்கலா புரியில்

                வணிக னொருவன் வான் பெருஞ் செல்வனாய்ச்

சீருடன் வாழ்ந்து செல்லுங் காலை

புதல்வர் மூவரும் புதல்வி யொருத்தியும்

5.     எச்சமாய் நிற்க இச்சையி னீட்டிய

                அருநிதி துறந்து ஆவி நீத்தனன்

பெற்றோ ரீட்டிப் பேணிய பொருளை

மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும்

உரிமை யாக்கும் ஒருவிதி நினைந்து

  1.       தந்தை மாய்ந்தபின்தனயர் மூவரும்

பொருள்மீ துற்ற பெருவேட் கையினால்

தம்முடன் பிறந்த தங்கை நன்மணம்

பெறுவா ளென்னிற் பெரும்பொருள் பகிர்ந்து

அவளுக் கொருபங் களிக்கவே வேண்டுங்

  1.      கன்னியாய் இங்கு காலங் கழிப்பின்

அவளுக் குரியவும் அமைவுடன் கொள்ளலாம்

என்றவ ரெண்ணி எழிலின் செல்வியைப்

பிறனுக் களித்துப் பெருஞ்செல் வத்தைப்

பிரிக்கும் மணத்தைப் பிரித்தே வைப்போம்

  1.     என்ற முடிவை யிதயத் திருத்திக்

காதல னொருவனைக் கன்னி யடைந்தே

அளவி லின்பம் அன்புடன் துய்த்துத்

திகழ்ந்தவள் இயற்கை யோடி யைந்த

வாழ்வு நடாத்தும் வழியினை மறைக்க

  1.     முயன்றனர் நாளும் மூதறி வில்லார்

கண்டோ ருள்ளங் கவரு மழகைக்

கொண்டு விளங்கினள்; கண்டவர் சோதரர்

தணியேசெல்லின், தங்கை யழகில்

மையல் கொண்டே மணக்க விரும்புவர்.

  1.    இளமை யழகுடை இளையளும் விரும்புவள்.

என்றஞ் சினரே இரக்கமு மில்லார்

பேரா சையினாற் பின்னை தன்னை

சிறைப்பட் டவர்போல் சிறைவைத் தனரே.

கிள்ளை தன்னை முள்ளினிற் செய்த

  1.   கூட்டினி லடைத்துப் பூட்டிடும் பான்மையில்

வீட்டினி லடைத்து வீக்கினர் தாள்களை

ஏவற் பெண்களைக் காவலாய் வைத்தனர்.

சிறைக்காப் பெவன்செயும் என்பதை யுணரார்.

இளமையும் அழகும் என்செய வல்லார்.

 

(எழில் கூடும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது

படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)

பேராசிரியர் சி.இலக்குவனார்

பேராசிரியர் சி.இலக்குவனார்