ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா!
மோதியுமிழ் என்றுரைத்த பாரதியின் பாட்டினையும்,
சாதியில்லை என்றுரைத்த பெரியாரின் கூற்றினையும்,
காதினிலே வாங்காமல் கண் மூடிக் கிடப்பதனால்,
நீதிநெறி தவறாத தலைவர்கள் இல்லாமல்,
நாதியற்று நெஞ்சுடைந்து நற்றமிழன் சாகின்றான்!
போதிமர நீழல்கள் பொய்யாகிக் கருகியதால்,
தீதிலுயர் ஊழல்கள் தொய்வின்றிப் பரவியதால்,
சாதனைகள் செய்வதாகச் சத்தியங்கள் செய்து,
சூதாட்டக் களமாகத் தேர்தலினை மாற்றி,
வேதனையில் தமிழர்களை வீழவைத்துத் தூகிலேற்றி,
பாதியுயிர் பறித்தெடுத்துக் குற்றுயிராய் நிற்கவைத்தார்!
மீதியுயிர் போகும்முன் மனந்தெளிந்து எழுந்து,
நூதனமாய்ச் சிந்தித்து நல்லவரைத் தேர்ந்து,
சோதிநிறை நன்னிலமாய் தமிழ்நிலத்தை மாற்று!
கோதிலாத குணத்தோடும், கொள்கைகளின் பிடிப்போடும்,
வீதியிலே வந்துநின்று உண்மைகளைச் சொல்பவனை,
ஏதிலாரைப் போல்சினந்து இங்கு சிலர் எதிர்ப்பார்கள்,
ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா!
சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
Leave a Reply