கட்டாயம் காலி,தமிழ்சிவா : thalaippu_kattayamkaali_thamizhsiva

கட்டாயம் காலி

 

“காதலில் தோற்றுப் போன உழவோர்

சாதலைத் தேர்ந்து சட்டென மாய்ந்தார்”

திருவாய் மலர்ந்தருளி தித்திக்கும் தனது

கண்டு பிடிப்பை எத்திக்கும் புகழ்மணக்க

எடுத்துக் கூறிய எழில்மிகு ஆட்சியில்

கல்வி கடைச்சரக்கு உண்மை உண்மை

காவிக்கு முதலிடம் முற்றும் உண்மை

சிறுமையே பெருமையும் சிறப்பு மாகும்

நிலத்தைக் கையகப் படுத்தி நாட்டின்

வளத்தைக் கயவர் கையில் கொடுத்து

நெஞ்சம் நிறைவு கொள்ளவே நாளும்

வித்தைகள் காட்டும் வித்தகர் வாழ்க!

உள்ளே குப்பையும் வெளியே தூய்மையும்

கொண்ட “கோ”மகன் வாழி! வாழி!

கண்டெடுத்த கந்தையோர் நிலையோ

கட்டாயம் கட்டாயம் காலி! காலி!

– தமிழ்சிவா