கண்ணதாசன் வண்ணக்கவி வாசன் 

 

         சிறுகூடல்பட்டிதந்த

          பெருங்கவிப் பெட்டி!

          தேன்தமிழ்த் தொட்டி! — பனங்

          கற்கண்டுக் கட்டி!

 

          பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி!      

          கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி!

          வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி!

          கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி!      

             

         கண்ணதாசன், வண்ணக்கவி வாசன்!

          பண்ணுள்ள பாட்டுக்குநீ நேசன்!

          தண்ணியசீர் ஆசுகவி தாசன்!

          எண்ணிலாப் படைப்புக்குமகா ராசன்!                  

 

          பண்டிதரின் பரண்மேலே படுத்திருந்த வண்டமிழின்         

          மண்டுசுவைப் பாக்கள் அனைத்தையும் கீழிறக்கிக்,

          கொண்டதமிழ்ப் புலமையால்  எளியபுது விதையாக்கிப்,

          பண்டுமுதல் பாமரர் உள்ளங்களில் விதைத்தவன்!

 

         கம்பனைப் போலே வேறோர் கொம்பனைக்

              கண்கள் இன்னும் கண்ட தில்லை!

          தெம்புதரும் கவிதந்த கவியரசு போலே

              அம்புவியில் எவருமே பிறந்த தில்லை!

 

           காந்தத்தின் ஆற்றலைக் கொண்டவன்!

                கவிதையின் ஆழம்கண்டவன்1

          கோந்துபோல் ஒட்டுகிற கொஞ்சு

                தமிழ்நிலையம்; கவிவலையம்!

          மாந்தர்க்குக் கவிபல ஈந்தவன்!   

                மண்ஓங்கத் துடித்தவன்!

          சாந்தம் தவழும்பல சங்கதிகள்

                படித்தவன்; கவிவடித்தவன்!

  

          காதலே, கவியரசின் காதல்

                கவிகளைக் காதலிக்கும்!

          ஆதலினால், கவியரசின் கவிகளை

                ஞாலமெல்லாம் காதலிக்கும்!

  

          மிகைச்சுவையாய்த் துயரமே அகத்திருந்தாலும்,

          நகைச்சுவையை நயமாக  வெளிக்காட்டுவான்!

          பகைச்சுவையே அகத்தினில் படர்திருந்தாலும்,

          நகைச்சுவையால் அதனை நிலைநாட்டுவான்!

 

           இன்பம்அது ஓங்கும்! — பெருந்

          துன்பம்அது நீங்கும்!   — கவியில்

          பொருள்பல தூங்கும்! — அதைப்

          படிக்கமனம்  ஏங்கும்!

 

           ஒத்துவரும் தத்துவத்தைக் கொத்துக்

                 கொத்தாய்க் கொடுத்தவன்!

          வித்துவக் கவிகளை இத்தரையில்

                 மொத்தமாய் விதைத்தவன்!

          தித்திக்கும் கவிளைச் சித்திரமாய்ச்   

                  சொத்தாய் நிறைத்தவன்!

          முத்துமுத்தாய்க் கவிகளை முத்தமிழில்  

                 பதித்தவன்; நம்முத்தையன்!

 

          எதுகையும் மோனையும் கவியரசின்

              எழுதுகோல் முன்னே தவங்கிடக்கும்!

          மதுகை கொள்ளும்; மதுரம்நிறை  

              கவிகளாய்த் தாளில்வந்து படுக்கும்!

 

            கொடுப்பான் பல்சுவைப் பாடல்!

          விடுப்பான் பாடல்தனில் சாடல்!

          கொள்ளுவான் அடிக்கடி ஊடல்!

          தள்ளுவான் ஊடல்;பின் கூடல்!

 

          “வழங்கிய எழுத்துக்கள் உளங்களில்

           விளங்க, வளத்தோடு வாழுங்கள்;நான்

           வாழ்ந்தபடி வாழ்ந்திட வேண்டாம்,” என        

           முழங்கிய உண்மைப் பெருங்கவிஞன்!

 

          செந்தமிழ்ச் சொற்கள் அத்தனையும் கவியரசின்

          சந்தம்மிகு கவிதைகளில் வந்துஅமர ஏங்கும்!

          சொந்தம் கொண்டாடும்; சிந்தை மகிழ்ந்தாடும்!

          விந்தைக் கவிகளால் வேதனை வீழ்ந்தோடும்!                              

 

          இல்லை என்று சொல்லுவான்!

               பின்,அதை உண்டென்று ஒப்புவான்!

          தொல்லைக் குள்ளே சிக்கினாலும்

               தொய்வின்றிப் பாட்டுமழை பொழிவான்!

          “வில்லைகளே வாழ்க்கைஎன்று

               விடிந்தாலும், கவிஎல்லை தொடுவான்!

           எல்லை இல்லாச் சுவைவிளங்க

               எழுத்துக் கொடையினை வழங்குவான்!

 

          படைவரினும் அஞ்சான்! – பண

          முடைவரினும் அஞ்சான்! – கவிக்

          கடைவிரித்து வைப்பான்…! – அதில்

          அடைமழை எனக்கவி பொழிவான்!

 

          தடையிலாக் காதலை நாடுவான்!

          இடைவிடாது இன்பக்கவி பாடுவான்!

          கடையருக்கும் காதல் இன்பம்

          கிடைத்திடக் காதல்கவி கொடுப்பான்!

 

          கொஞ்சுதமிழ், தஞ்சமென வந்துநின்று ஏங்க,

          விஞ்சுகுளிர் கஞ்சமலர் எழுதுஎனக் குனிய,

          நெஞ்சத்தை அள்ளுகிற சந்தம்வந்து கெஞ்சப்

          பஞ்சமிலாக் கவிகளை  எஞ்சாமல் தருவான்!

 

           புண்பட்ட நெஞ்சிற்கு

              பண்பட்ட மருந்தாவான்!

          பண்பட்ட காதலுக்குத் 

              தண்பட்ட விருந்தாவான்!

 

          செந்தமிழ்க் கவிஞன்

              என்றுமே செத்ததில்லை அவன்

          சிந்துகவிக் கிடையிலே

              சந்ததம் வாழுகின்றான்!- கவிச்

          சிந்தைச் சுவைஞருடன்

              சிரித்தே மகிழ்கின்றான்!

          அந்தமிலா வாழ்வாலே

              நம்மோடுற வாடுகின்றான்!     

 

       காமுறும் வகையிலே காமத்துப்

              பாலுக்குக் காதலுரை தந்தவன்

       ஏமமுறு தீந்தமிழை ஏற்றிப்

              போற்றி எழுதி வந்தவன்.

             

     திரையிசைப் பாடல் எதுவும் இன்று

              புரிய வில்லை எனக்கு!

       விரைந்தெழுந்து வாநீ; வந்துகவி பாடு!

              புண்ணியமாப் போகட்டும் உனக்கு!

நகைச்சுவை நாயகர்  

 குறளாய்வுக் குரிசில் 

திருக்குறள் தேனீ      

பேராசிரியர்

 வெ.அரங்கராசன்