கண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்
கண்ணீர்ப் பொங்கல்!
துளைக்க வரும் துப்பாக்கிக் குண்டு கண்டும்
துணிந்தெதிர்த்தார் அஞ்சவிலை ஈழ நாட்டார்
வளைக்கவரும் படைகண்டும் கலங்க வில்லை
வரிப்புலியாய்ப் பாய்ந்தெதிர்த்து வாகை கொண்டார்
அழைத்தபடை அரவணைக்கும் என்று நின்றார்;
அமைதியெனும் பெயராலே குண்டு வீசித்
தொலைக்கவரும் நிலைகண்டே மயங்கு கின்றார்;
தோழமையே பகையானால் என்ன செய்வார்?
சிங்களத்துக் கொடுங்கோலால் அடிமை யாகிச்
சிக்குண்டு நலிந்துருகிப் பின்நி மிர்ந்து
வெங்களத்தில் வரும்விடியல் எனநி னைந்து
வேங்கையெனச் சினந்தெழுந்து போர்தொ டுத்தார்
தங்குலத்தோர் விழியிழந்தும் உயிரி ழந்தும்
தையலர்தம் கற்பிழந்தும் தயங்கா ராகித்
தங்குறிக்கோள் வெற்றிபெறும் வேளை யிற்றான்
தடையாகிப் பாரதமே நின்ற தம்மா!
இனப்பகையை எதிர்ப்பானா? அமைதி பேசி
எழும்பகையை எதிர்ப்பானா? ஈழ நாட்டான்
தனித்துலகில் நிற்கின்றான்; சிங்க ளத்தார்
தாங்குபடை கைக்கொள்ளத் தமிழன் மட்டும்
முனைக்களத்தில் வெறுங்கைய னாக நிற்க
முயல்வதனால் அமைதியுண்டோ? தமிழி னத்தை
நினைக்குமுளம் பொங்குவதால் விழிகள் பொங்கி
நிலைகலங்கித் துடிக்கின்றோம் பொங்கல் நாளில்.
-கவிஞர் முடியரசன் 29-12-1987
Leave a Reply