kumbakonam-school-fire

பெரியார் ஆண்டு 135  தொ. ஆ. 2880  தி.ஆ.2046

   ஆடவை ( ஆனி ) 30                15–07–2015

பத்தோடு  ஓராண்டு பறந்தோடி  விட்டதுகாற்றாய்

இத்தரையில்  இன்னா  இனியதறியா   இளம்குருத்துகள்

புத்தகமும்  கையுமாய் புத்தறிவுப்  பெறப்போனவர்களை

பத்திஎரிந்த  தீநாக்கு பதம்பார்த்து  விட்டதே !

குடந்தைப்  பள்ளியிலே மடந்தையர்பெற்ற  மலர்கள்

இடம்விட்டு நகராமலே இதயம் கருகினரே !

குடமளவு  கண்ணீரைக்  கொட்டினரே  மக்கள்

தடம்மாறா  நினைவுகளைத் தரணிக்கு அளிப்போம் !

 (16–07–2004 )
கருகிய  மொட்டுகளுக்குக்   காணிக்கை !

” தலைவாரி  பூச்சூடி  உன்னைப்   பாட
சாலைக்கு  போஎன்று  சொன்னாள்  உன்அன்னை ”
கலைபயிலும் சாலைக்கு  விலையில்லாமணியை
கையசைத்து  அனுப்பினாள்   அன்னை
குலைநடுங்கும்  சேதியைக்  கேட்டாளே
குதலைப்   பிஞ்சுகள்  கூவியடங்கியதை !

தலைவாழை  இலையிலே   தங்கங்களை
இலையோடு  சுருட்டிஇன்  னார்எனஅறிய
அடையாளம்  காணக்கூடத்  தடையானதே
குடைஊர்ந்து  உலாவரும்   கும்பேசுவரரே !

குறும்புகள்  காட்டும்  அரும்புகள்
கரும்புகையை  மூச்சாக்கி  மூச்சடக்கி
கட்டியணைத்தே   கல்விச்  சாலையில்
சுட்டிடும்  நெருப்பில்  சுருண்டதே !

கன்னல்  செல்வங்கள்  கருகிடும்வேளை
என்னநினைத்து  எரிதீயில்  வெந்ததோ
சதைகொடுத்   துயிர்கொடுத்த  ” அம்மா ” என்ற
சொல்கூறி   சேல்விழிகள்   மூடியதோ?

பாதம்பட  வேண்டும்   குடந்தையில்நம்
ஏதம்முழுதும்  எட்டிப்போகும்  எனக்கூறும்
வேதவினாயகர்  கோயில்வாசலில்   நெஞ்சின்
ஓதையுடன்  மண்தூவினாள்  ஓர்மாதா !

தினந்தோறுமுனை  தெய்வமெனக்  கும்பிட்டுத்தானே
தேனூறும்என்  செல்வத்தைப்   பள்ளியிலே
கல்விக்கண்  திறக்க  கைவிட்டுவந்தென்
அல்லிமலர்  கண்களையே  அவித்தாயே !

கண்ணில்லையா  உனக்கு !  இல்லை
புண்ணாகிவிட்டதா  மக்களைக்   காப்பதற்கு
தெருவுக்குத்தெரு  சக்கரபாணி- சாரங்கபாணி
உருவாக  கும்பேசுவரர்   நாகேசுவரர்

இத்தனை  சாமிகளும்  இருந்தென்ன ?
முத்தான   பிஞ்சுகளைக்   காக்க  முடியலையே
சித்திரை  நிலவாய்சிரித்துச்  சென்றவர்கள்
பத்தியதீயில்  பதறிப்பதறி  உருக்குலைந்தனரே!

” கல் ” என்றே  அனுப்பிய  கண்மணிகள்
கல்மனத்தார்   செயலால்  கனலில்எரிந்தனரே
முந்தித்தவமிருந்து   முந்நூறுநாள்  சுமந்து
செந்தீக்கு  இரையாக்கத்  தானோ ?
குந்தியிருக்கும்  தெய்வங்களே  எங்கள்
சந்ததிகளை  வெந்தனலிலிட்டது   சரியா ?

ஆடிவெள்ளி    உங்களை  ஆராதனைசெய்து
பாடிஉணவுப்   படையல்   படைக்க
தலைவாழை    இலையெடுத்து  வந்தோம்
தலையெடுத்த  மகனையதில்  சுருட்டவைத்தாயே !

குடந்தையிலே   மாமாங்கம்  நடத்தினோமே
கும்பேசுவரரே  குழந்தைகள்   சாவுக்கு
உடந்தையாகிப்  போனீரோ ?  உண்மையெனில்
கடைந்தெடுத்த  கற்சிலைதான்  கடவுள்அல்ல !

வருங்காலம்கூறி  வகையாகத்   தொகையை
பெரும்  பொருளாய்ச்  சேர்க்கும்
ஆரூடக்   காரர்களே !   ஆன்மீகவாதிகளே
சிறுமலர்கள்   கருகப்போவது  தெரியாதா ?

கொள்ளையடிப்போரும் கொலைகள் செய்வோரும்

   கள்ளமனத்  துடன்களவு  புரிவோரும்

அள்ளக்குறையா  செல்வமுடனிருக்க   எங்கள்

   வெள்ளைமனப்  பிஞ்சுகள்  வேகலாமாதீயில் ?

கல்வித்துறை  தான்பொறுப்பா?  இல்லையில்லை

   கல்விச்  சாலையினர்  கவனக்குறைவா?

அரசியல்  சதுராடிகளின்  ஆணவப்போக்கா ?

     உரசிப்  பார்க்கின்றோம்  உண்மைதெரிய !

உண்மை  தெரிந்துவிட்டால்  உயிர்கள்வருமா?

     கண்மைகாயு  முன்கருகிட்ட  கண்மணிகள் !

இம்மையில்  உயிர்பெற்று  எங்கள்

    வெம்மைஇதயம் வெண்பனியில்  நனையுமா ?

“வெங்காயம்  சுக்கானால் வெந்தயத்தால்  ஆவதென்ன

இங்கார் சுமந்திருப்பார்  இச்சரக்கை -மங்காத

சீரகத்தைத்  தந்தீரேல் தேடேன்  பெருங்காயம்

ஏரகத்துச்  செட்டி யாரே! “

பாடினான்  ஓர்புலவன் அந்நாளில்

   பள்ளி    கொண்டிருக்கும்  பரந்தாமனை!-அந்த

திருவரங்கப்  பெருமான்  திருஊரிலேயே

   மணவரங்கம்  பிணவரங்கம்  ஆகியதே !

படுத்துக்கொண்டே நிகழ்வைப்  பார்த்தது போதாதா?
அடுத்த  நிகழ்வைத்  தொடுத்தாரா?
கொடுத்திட்ட  முத்தச்சுவடிருக்க குழந்தைகளை
சுடுதீயில்  சுட்டெரித்தநீயும்  தெய்வச்சுடரா?

பெற்றோருக்குக்  கொள்ளியிடுவர்  பிள்ளைகள்
உற்றநிகழ்வு  நாட்டில்   உண்டு;ஆனால்
பெற்றோரே  மக்களுக்குக்  கொள்ளியிடும்
பெருங்கொடுமை   கும்ப  கோணத்தில் !

முத்தங்கள்  பலகொடுத்த   முத்தங்கள்
மொத்தமாகக்  கருகிச்  செத்திட்ட
நிலைகண்டும்  காணாதிருக்கும்  சிலைகளே
இலைநீங்கள்   என்றுமெங்கள்  இதயத்தில் !

சாவின் சன்னதியிலே….சின்னதுகள் கூற்று !

குற்றம்  என்னசெய்தோம்  குடந்தையின்
முற்றாக  நிறைந்திருக்கும்  தெய்வங்களே
அற்றம்காக்கும்  அறிவுபெற  அறிவாலயம்ஏகி
கற்றுத்  துலங்கச்சென்றது  குற்றமா ?

குற்றம்தான்  என்றால்  குடந்தைமக்களே
முற்றும்கற்ற  முத்தமிழ்ப்  புலவர்களே
சுற்றியிருக்கும் தெய்வங்களே குற்றவாளிகளென
சற்றும்  தயங்காது  சாற்றுகின்றோம் !

 (கடந்த  16–07–2004 அன்று கும்பகோணத்துப் 
பள்ளியின்  94 மழலைகள்  செந்தழலைத்
தழுவிச்  செத்தார்கள்  என்ற சேதி கேட்டு என் 
சிந்தை  அழுது  எழுதிய  94  வரிகள் )

– இளையவன் செயா (மா.கந்தையா)
kandhaiya01