கம்பன் புகழைப் பாடு மனமே ! – அம்பாளடியாள்
கம்பன் புகழைப் பாடு மனமே !
கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர் ! -செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள் இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!
விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் !
நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்!- அஞ்சாதே
கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?!
செம்பட்டுப் போன்றே செழிப்பு!
அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே
கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! -நெஞ்சும்
சுவைக்கும் பொருளைச் சுரந்தவர் கம்பர் !
அவைக்கும் அவரே அழகு !
பாட்டால் உயிர்கொடுத்த பாவலர் !கம்பரே
வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்!- கேட்டாலே
போதும் அரும்பாக்கள் ஓதும் பொழுதினிலே!
காதும் குளிரும் கமழ்ந்து !
கவிப் பேரரசர் கம்பனைப் போற்ற
புவிமேல் புலரும் புதுமை!- தவிக்காதே
காக்கும் கடவுளும் கம்பரே! இன்பமாய்
வாக்கும் மணக்கும் மலர்ந்து !
அலைந்து திரிந்தே அமுதெனக் கொண்டேன்!
சிலைபோல் மிளிரும் சிறந்து ! கலைமகள்
அந்தாதி கம்பர் அளித்த செல்வம் ! போற்றுக!
நந்தவனம் ஆகும் நினைவு!
நாமகள் அன்பினை நாளுமே பெற்றகம்பர்
வாழ்வினைக் கண்டிட ஆசையோ !-பாவினைப்
பாடும் மனமேநீ பாடுக அந்தாதி
கூடிடும் இன்பம் குவிந்து !
கலைவாணி நற்கருணை கண்களிலே தங்கும்!
தலையையும் காக்கும் தழைத்து!- மலையின்ப
அந்தாதி பாடினால் அன்னைக் கதுபோதும்!
சந்தன வாசத் தமிழ் !
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார் !- தேயவழி
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து !
கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும்
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர் !- அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு !
-கவிஞர் அம்பாளடியாள்
Leave a Reply