கொன்றவர் எவரும் வென்றதில்லை!

மரண ஓலம் கேட்கிறதே! – எங்கள்
மனத்தை அதுதான் தாக்கிறதே
இரண்டுங் கெட்ட நிலையினிலே – எங்கள்
இதயம் இங்கே துடிக்கிறதே!

வெடி குண்டு வைத்துத் தாக்காதே
விடியலை எங்கும் போக்காதே
தீவிரவாதம் ஒழிக ஒழிகவென
தீட்டிய பாக்களை வெறுக்காதே!

குழந்தைகள் செல்லும் வண்டியில்  கூடக்
குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன?
எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால்
எவரையும் அழிப்பதில் நீதி என்ன?

மனித மனங்களில் வன்மங்கள்- இதை
மாற்றிட வேண்டும் வாருங்கள்!
உலகம் அழிவதைப் பாருங்கள்- இதை
ஒவ்வொருவருமே உணருங்கள்!

சங்கடம் முத்திப் போன சாலையில்
சத்தியம் என்றும் நிலைக்காது!
உங்களில் ஒருவர் இறந்திடும் பொழுதிலும்
உணர்வுகள் வேறென இருக்காது!

பகுத்தறிவுள்ள மனிதர்கள் நாம்
பதற்றம் கொள்ளக் கூடாது!
எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட்டு
எறிகணை வீசக் கூடாது!

மதம் என்ன? இனம் என்ன ?
மனிதனின் குணம் என்ன?
அறிந்தது அறிந்தது போதுமடா!
இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
இதயம் துடிக்க வேண்டுமடா!

கொல்லும் வரைதான் கொலைவெறி இங்கே
கொன்றவர் எவரும் வென்றதில்லை!
நெல்லும் புல்லும் அழிந்த தேசத்தில்
உறுதியாய் உயிர்கள் பிழைப்பதில்லை!

(மரண ஓலம் கேட்கிறதே)


கவிஞர் அம்பாளடியாள்