அகதியம்மா இந்த மண்ணில்!

 

இத்தரையில் வாழ்ந்தாலும் தமிழை இன்றும்

இன்னுயிராய்ப் போற்றுகின்றோம் அதுவே போதும்!
நித்தமெமை வாட்டுகின்ற துயரும் பொய்க்கும்!

நின்கருணை யாலெம்மின் கடமை ஓங்கும்!
அத்தனவன் அருள்பெற்றும் இயற்றும் பாக்கள்
அம்புவியில் எம்புகழை ஏந்திச் செல்லும்!
பெற்றவளை யாமிழந்தோம் கண்ணீர் விட்டோம்!

பேறுபெற்றோம் இன்றமிழைப் போற்றிப் பாட!

 

சித்தத்துள் பேராசை தானும் இல்லை!

சிங்காரத் தமிழ்மீதே காதல் கொள்ளை!
அத்தனையும் தேனாறாய் ஓட வேண்டும்!
அகத்தூய்மை பெற்றுலகில் வாழ வேண்டும்!
மொத்தத்தில் அகதியம்மா இந்த மண்ணில்!

மொழிகாக்கத் துடிக்கின்றோம் தமிழே! தாயே!
பெற்றவளாய் நீயிருந்து கடமை ஆற்று!

பேருவகை அளிக்கவல்ல பாக்கள் பூக்கும்!

மென்மனத்துள் வாழ்கின்ற சக்தி நீயே!

மேதினியில் எமைக்காக்கும் புத்தி நீயே!
பொன்மொழியே! நீயின்றி வாழ்வும் ஏது!
போகின்ற இடமெங்கும் துணையாய் நிற்பாய்!
கன்னலென என்பாடல் ஒலிக்கக் கேட்டு
கானமயில் இங்காட வேண்டும் அம்மா!
இன்னலது எப்போதும் நாடா வண்ணம்

என்னுயிரே பொன்மொழியே காத்த ருள்வாய்!

பாட்டென்றால் அம்பாளின் அடிமை என்றன்
பாட்டென்றே இவ்வுலகம் போற்றச் செய்வாய்!
ஏட்டிலுனை மறவாத கொள்கைப் பற்றை

என்னுயிரே! எப்போதும் அளித்துக் காப்பாய்!
நாட்டினது நன்மைக்காய்ப் பாடும் பாடல்
நலம்தந்து என்றென்றும் நிலைக்கச் செய்வாய்!
கூட்டினிலே வாழ்ந்தாலும் குயிலின் எண்ணம்

குவலயத்தை ஆளுமம்மா தமிழே உன்னால்!

என்றுமிதை எண்ணித்தான் கண்வி ழித்தேன்!
ஏழ்பிறப்பும் அழியாத பாக்கள் யாத்தேன்!
நின்கருணை யாலிந்த வரத்தைப் பெற்றேன்!
நீடுவாழ வைப்பதுவுன் கடமை யன்றோ!
பொன்மீதும் பொருள்மீதும் ஆசை இல்லை!
பொய்யில்லா வாழ்வொளிர நீயே வேண்டும்!
இன்றிதற்காய் எத்தடையும் தாண்டிச் செல்வேன்!
என்னுயிரே! பொன்மொழியே! வாழ்க வாழ்க!

 

 

கவிஞர் அம்பாளடியாள்