கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச்சி)
பூங்கொடி
மலையுறையடிகள் வாழ்த்திய காதை
தொண்டர்க்கு வேண்டுவன
தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும்,
கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும்,
துயரெது வரினும் துளங்கா நிலையும்,
அயரா உழைப்பும், ஆயும் அறிவும்,
தந்நல மறுப்பும், தகவும் வேண்டும் 105
இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே;
இருளும் தொண்டும்
விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன்
துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும்
ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்;
கழியிருள் அதனுள் கடந்தனன் செல்லின் 110
வழியதும் புலனாம் ஒளியுங் காணுவான்;
பொதுநலம் புரிவோர் நிலையதும் இதுவே;
முதன்முதற் புகுவோர்க்கு மலைப்பே முந்துறும்,
மலைப்பும் இளைப்பும் மதியா ராகி
உழைப்போர், வருதுயர் ஒன்றுங் காணார்; 115
அரிதாய் மலைப்பாய்த் தோன்றிய அப்பணி
சிறிதாய் எளிதாய்ச் செயற்படும்; அதனால்
என்மொழி யாவும் ஏற்றுளம் பதித்துத்
தென்மொழி உயரத் தேன்மொழி, தொண்டுசெய்!
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Leave a Reply