(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 32 : பிறமொழி புகுதல் -தொடர்ச்சி)

பூங்கொடி

குருதி சிந்தினர்

தொடும்பணி எதையும் துணிவுடன் ஆற்றக்
கடும்புயல் என்னக் கனன்றெழும் காளையர்
கொடியுடைக் கையர் கூடி எழுந்தனர்;
தடியடி தாங்கினர் தரையிற் செந்நீர்
சிந்தினர் மொழிப்பயிர் செழிப்பான் வேண்டி, 115
குருதி கண்டும் உறுதி குலைந்திலர்
முறுகி எழுந்தனர்; மூண்டெழும் மக்கள்
உணர்ச்சியும் அதனோ டுள்ளெழும் எண்ணமும்
பணத்திமிர்க் கடங்கும் பான்மைய அலவே!

  சிறையும் சிந்தையும்

கிளர்ந்தெழு வீரரைக் கொடுஞ்சிறைக் கிடத்தின் 120
தளர்ந்திறும் புரட்சிஎன் றுளந்தனிற் கொண்டோர்
சிறையகந் தொறுமிடம் இலாமல் அடைத்தனர்;
சிறையகம் வீரர்தம் சிந்தையை அழிக்குமோ?
குறைமதி யாளர்தம் கொள்கை அஃதாம்;

சிறையகம் போலச் சிந்தனை வளர்க்கும் 125

உறைவிடம் மற்றாென் றுலகில் உளதோ:
எண்ணமும் கருத்தும் எலியோ பொறியுள்
நண்ணிய பின்னர் நசுக்க ஒல்லுமோ?

   உண்ணு நோன்பு

எண்ண இயலா இளைஞர் தம்முள்
உண்ணா நோன்பினை ஒருவன் மேற்கொள 130
அஞ்சிய அரசினர் அதட்டினர் அவனை,
நஞ்சையும் கொள்கைக்கு நயந்துண் டோர்பலர்
காட்டிய நெறிகள் கண்டோ னாதலின்
ஊட்டிய உணவை உமிழ்ந்தனன் மேலோன்
உயிர்பெரி தன்றே! உயர்ந்தது கொள்கை! 135

(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி