கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11 & 12
(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10 தொடர்ச்சி)
திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 11&12
பதினொன்றாம் பாசுரம்
களப்பிரரையும் வென்ற கன்னித்தமிழ்
அளப்பரிய ஒண்புகழால் ஆண்டவன்பொ றாமல்
வளப்பமுறு தண்டமிழை வாடச் செய்தானோ?
களப்பிரனின் காலத்துக் காரிருள் சூழ்ந்து
களிப்பூறும் மாவாழ்வு காணா தொளியப்,
பளிக்கறைமேல் தூசி வளிவர நீங்கல்போல்
ஒளிகுன்றாள் ஆகித், தனைச்செயவே செய்து
வெளியார் சமணரையும், பௌத்தரையும்
வென்றாள்;
எளியாள் தமிழணங்கின் ஏற்றஞ்சொல்,
எம்பாவாய் !
பன்னிரண்டாம் பாசுரம்
பெருமையில் தாழாத தமிழ்
ஒருவானங் கீழே ஒருபூமி பேசும்
ஒருமொழியாய் நின்றாள், உலகில் தமிழ்த்தாய் !
புரையேது மின்றிப் பொலிந்திருந்தாள்;ஆற்றைக்
கரையுண் டகலம் சுருங்கல்போல், மாலின்
திருவேங்க டத்தின்கீழ் தென்குமரி எல்லை திருவோங்க வாழ்ந்தாள்; திரும்பவுமே காலம்
உருமாற்றத் தென்குமரி உள்ளாழி கொண்டும்
பெருமையிலே தாழாப் புதுமையைப்பா
டெம்பாவாய்!
– கவிஞர் வேணு குணசேகரன்
Leave a Reply