வெளிச்சவீடு : velicha veedu

இது மாவீரர் மாதம்

கார்த்திகையில்..
கடலடிக்கும்..ஓசை..
காதைப் பிளக்கும்..
வாடைக் காற்றில்
பனை ..அடித்து
மேளங்கள் கொட்டும்..
விளை நிலங்கள் எங்கும்..
தினை வெடித்துப் பறக்கும்..
சம்பா நெற்கதிர்கள்..
தலை சாய்த்து -புலி
வீரர்களை வணங்கும்..

இளங் குமரி..
வடலியிலே.. ..காகங்கள்
அமர்ந்திருந்து..
கட்டிய முட்டிகளில்..
கள்ளடித்து.. ..மயங்கி..
புல்லரிக்கும் ..பாடல்களை
பாடும்….!

கருவேல மரங்களும்..
முல்லைகளும் முருங்கைகளும்..
தெருவோர வாகை மரங்களும்..
முள் முருக்கைகளும் ..
பொன்னலரிச் செடிகளும்
பெரு மழையைக் கண்டு..
நாணி..நெளிந்து..நடனம் ஆடிக்..
காதலால்..
சிலிர்த்து.. தழைத்து..மகிழ்ந்து..
பூக்களைச் சொரியும் மாதம்..

புல் பூண்டுகளின் நுனிகளில்..
மழைத் துளிகள்..என்னும்
மரகத வீணைகள்..
சொட்டுச் சொட்டாய்க்..
கம்பிகளை இணைத்து..
புதுப் புது..
இராகங்கள் பாடும்..மாதம்…

அன்றலர்ந்த மலர்கள்..
தமிழ் ஈழத்..தேசம் எங்கும்
காதலால்..
இதழ் விரித்துச் சிரித்திருக்க .. ..
அவற்றைத் தேடி..
சில் வண்டுகளும்..வண்ணத்துப் பூச்சிகளும்
நாடிவந்து…..
காதல் கடிதம் கொடுக்கும் மாதம்..

தமிழ் ஈழத் தேசியப் பறவைகளாம்..
செண்பகங்கள்..
பனைவேலி இடுக்குளில்
புழுக்களை..நத்தைகளைத் தேடி..
நுழைந்து புகுந்து..மகிழ்வினால்..
நனைந்து..பறந்து.. விளையாடி
அழகின் ஆலாபனைகளைப் பாடி..
வலம் வரும் மாதம்..

நீர் வழிந்து ஓடும்..
வாய்க்கால் கரையெங்கும்
தமிழ் ஈழத் தேசிய மலர்களாம்
தேன் வடியும்
கார்த்திகைப்பூக்கள்..
முகை அவிழ்ந்து.. ….மாவீரர்களின்
இன்முகத்தைக் காண..
தவமிருந்து..
மலர்ந்திருக்கும் மாதம்..

தமிழர் தலைவன்..தானைத் தளபதி..
தனக்கென..
தன்னிகர் இல்லாப் பெருமகன்..
பிரபாகரன் என்னும் பெருமலை..
தமிழ் மண்ணில் ..தாயின் கருவறையில் இருந்து..
உதித்த..ஒப்பற்ற.. நாள்தான்..
காத்திகை..மாதம்..

வீரம் பிறந்த மாதம்..மட்டுமல்ல..இது…
மண்ணுக்காய் மடிந்த..அந்த
பொற் குடங்களுக்காய்.. ….
போர்ப் பரணிகளுக்காய்..
மா..வீரர்களுக்காய் ..
தமிழ் கூறும் உலகம் எங்கும் உள்ளோர்
தீபங்கள் ஏற்றி..
அவர்களின் இலட்சியங்கள் நிறைவேற..
சபதம் எடுத்து..
ஆவலோடு..ஒன்று சேர்ந்து.. வழிபடும்
தியாகப் பெருநாளும் இதுதான் ….!

கண்ணீரால் எங்கள் மாவீரர்களின்
கல்லறைகளை..நனைப்போம்..
தயார் ஆகுங்கள்..!
செந்நீரால் எங்கள் தமிழ் மண்ணைக்
கழுவிய..அந்த
பன்னீர் முத்துக்களை….
நெஞ்சில் இருத்தி..
“எங்கே உங்கள் விழிகளை..
ஒருமுறை..
எங்களுக்காய்….திறவுங்கள் வீரர்களே..”
என்று உரத்து சொல்வோம்..
வாருங்கள் தமிழர்களே..
இது மாவீரர் மாதம்
கனவுகள் ஊர்வலம் போகும் மாதம்!

– மு.வே. (இ)யோ