சிறுநண்டு – உருத்திரமூர்த்தியின் தமிழிசைப்பாடல்
சிறுநண்டு – தமிழிசைப்பாடல்
சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.
கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.
வெறுவான வெளி மீது
மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று
கரகங்கள் ஆடும்.
நெறி மாறுபட நூறு
சுழி வந்து சூழும்
நிலையான தரை நீரில்
இலை போல் ஈடாடும்.
இருளோடு வெளியேறி
வலை வீசினாலும்
இயலாது தர வென்று
கடல் கூறல் ஆகும்.
ஒரு வேளை முகில் கீறி
ஒளி வந்து வீழும்
ஒரு வேளை துயர் நீள
உயிர் வெந்து சாகும்.
http://padalkal.blogspot.in/2005/02/blog-post_24.html
ஈழத்துக்கவிதை மரபின் தனித்துவத்தை நெஞ்சை நிமிர்த்தி வரலாற்றில் எழுதியவர்களுள் மகாகவி என்றழைக்கப்படும் துரைசாமி உருத்திரமூர்த்தி முதன்மையானவர். யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1927 ஆம் ஆண்fடு பிறந்த கவிஞர் உருத்திரமூர்த்தியின் கவிதை மூன்றாவது தலைமுறையையும் கடந்து இன்றும் நிலைபெற்றுள்ளது. அரைகுறை ஆங்கிலம் கலந்து தென்னிந்திய பெருநிறுவனத் திரைப்படங்களின் ஊடாகத் தமிழ்க் கலை என்று அறிமுகப்படுத்தப்படும் அழுக்குகளுக்கு மத்தியிலும் மகாகவி உருத்திரமூர்த்தியின் படைப்புகள் உயிர்வாழ்கின்றன.
அன்றைய யாழ்ப்பாண மீனவச் சமூகத்தின் அவலங்களை நெஞ்சை நெருடும் வகையில் புதிய கவிதை மரபின் வழியாக மகாகவி அறிமுகப்படுத்தினார். மாற்றுக் கலைகளே 80 களின் தொடக்கம்ஆரம்பம் வரை பிரதான கலைவடிவமாக தமிழ்ப் பகுதிகளில் திகழ்ந்தமைக்கு நுழைவாசல்களாக மாக்கவியின் படைப்புகள் அமைந்தன. கிழக்கில் நீலவாணன், முருகையன் ஆகியோரின் சமக்காலத்தவரான மாக்கவியின் சிறு நண்டு என்ற பாடலுக்கு யாழ் கண்ணன் இசைவடிவம் கொடுத்திருந்தார்.
மூன்று தலைமுறைகள் கடந்து இதே பாடல் மீண்டும் புதிய இசை வடிவில் வெளியாகியுள்ளது. இலண்டனில் வசிக்கும் புதிய தலைமுறை இளைஞன் சந்தோசின் இசையில் சிறு நண்டு புதிய உந்துதலைக் கொடுக்கிறது.
ஆங்கிலம் கலந்த தமிழ்க் கொலைஞர்களான கலைஞர்களின் கரங்களில் சிக்குண்டு தமிழிசை அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் வெளிவந்திருக்கும் சந்தோசின் முயற்சி நம்பிகை தருகிறது. வணிக வெறியை ஊடறுத்து இதுதான் தமிழிசை என்று மூன்றாவது தலைமுறை இளைஞர் மாக்கவியை மீள அறிமுகப்படுத்துவது எமது கலைகளுக்குப் புதிய இரத்தம் பாய்ச்சுவதைப் போன்றது.
கருநாடக இசையான மத்திமாவதி இராகத்தின் சாயலோடு இசையமைக்கப்பட்டிருக்கும் பாடலின் பின்னணியில் பறை ஒலிக்கிறது. கருநாடக இசையையும் பறையையும் கலந்து புதிய இசைப் புரட்சி செய்திருக்கும் சந்தோசின் பாடலை ஈழத் தமிழில் பாடி உயிர்கொடுத்திருக்கிறார்கள் பிரான்சைச் சேர்ந்த இந்திரனும், இலண்டனைச் சேர்ந்த இரமேசு (சர்மாவு)ம்.
திசாந்தனின் புல்லாங்குழல் பாடலை மெருகூட்டுகிறது.
ஈழத்தின் இசைப் பரம்பரைக்கு உயிர்கொடுத்திருக்கும் சந்தோசு குழுவினருக்கு வாழ்த்துகள்.
நன்றி,
-இனியாரு-பாடலைத் தரவிறக்கம் செய்ய:
Leave a Reply