thalaippu_chenthamizhser_ uruvaayinai_thamizhanambi

செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!

நீயே,
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!
ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை!
வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில்
செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை!

உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம்
இறவா மொழியால் எழுந்திடப் பாடினை!
ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி
முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில்
தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை!

கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை!
புதுவை பொரித்த புரட்சிக் குயிலே!
எதுவும் யாரும் இணையுனக் கில்லை!
‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர்
வினைசா வெனின்அச் சாநாள் திருநாள்’

‘புலவர்க்குக் கைவேல் பூந்தமிழ்’ என்றனை!
நலங்கெடுப் பார்எலாம் நடுங்கிட இயங்கினை!
“சிறுத்தையே, புலியே, சீயமே, சிம்புளே!
திருப்பு முகத்தை! திறந்திடு விழியை!
மொழிப்பற் றுற்றே விழிப்புற் றெழுக!

அழிப்புறுந் தமிழை பழிப்பறக் காப்பாய்!”
எனத்தமி ழிளைஞரை ஏவினை! இக்கால்
இழிதுன் பில்தமிழ்! இடிக்குரல் ஆர்த்தே
பழியறக் காத்திட, பகைவே ரறுத்திட
யாருங் காண்கிலேன், எழிற்பா வேந்தே!

தீருமோ இத்துயர் தெரியேன்
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கியே!

(விழுப்புரம் “பாவேந்தர் பேரவை”யின் பொறுப்பாண்மையர் உயர்திரு. உலகதுரை, பாவேந்தர் சிலை திறப்பின்பொழுது வெளியிடவிருக்கும் மலருக்காகப் பாடல் எழுதித் தருமாறு ஏறத்தாழ ஈராண்டிற்கு முன்னர் கேட்டபோது எழுதித்தந்த பாடல்)

தமிழநம்பி : thamizhanambi

தமிழ நம்பி