தலைப்பு-கிடைக்கா உரிமை :thalaippu_kidaikkaa_urimai

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை !

நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று
நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப்
பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார்
பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று !
வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம்
வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால்
பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே
பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே !

பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும்
பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள்
ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே
அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று
கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால்
கள்ளிப்பால் ஊட்டிசிசு கொல்லல் போன்று
வேல்கொண்டு குத்தியவன் கையி லேயே
வெதுசெய்யக் கொடுத்திட்டார் மீண்டும் வேலை !

வல்லரசு களெல்லாம் ஒன்று கூடி
வழங்கிட்டார் அதிகாரம் திருடன் கையில்
கொல்லரசா நிலைநாட்டும் நீதி தன்னை
கொன்றதினை நியாயமென்றே தீர்ப்பு ரைக்கும்
எல்லாமும் இங்கிருக்கும் தமிழர் தம்முள்
எள்ளளவும் ஒற்றுமையே இல்லா மைதான்
சொல்லியென்ன தமிழ்நாட்டுத் தலைவ ரெல்லாம்
சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை !

karumalai_thamizhaazhan

– பாவலர் கருமலைத்தமிழாழன்