(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் – தொடர்ச்சி)

திலீபன் நினைவுப் பேருரை:


தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு


கடல் கடந்து போனாலும் தமிழ் கடந்து போகாமல் தமிழ் மொழி, இன, தேச, உணர்வோடு வாழ்ந்து வரும் உலகத் தமிழர்களுக்கு நான் சார்ந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் முதலிலே வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஈகத்தின் இன்னொரு பெயர் திலீபன்.

என்றும் நினைவில் நிலைத்திருக்கும் திலீபனை நினைவுகூர்ந்து, தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதி ஆக்கிக்கொண்ட பல்லாயிரம் மாவீரர்களையும் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களையும் எண்ணித், தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவுப் போராட்டத்தில் தீக்குளித்து மாண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் தொடங்கி இந்தப் போராட்டத்தில் ஈகம் செய்து கொண்ட அத்தனைப் பேரையும் எண்ணி, இன்றைக்கு இருக்கின்ற உலகச் சூழலில் தமிழீழ விடுதலைக்கான போராட்டம், நீதிக்கான போராட்டம், இதற்கும் இந்தியப் பாதுகாப்புக்குமான தொடர்பு, இவற்றில் தமிழகம், தமிழக அரசு வகிக்க வேண்டிய பங்கு ஆகியவைபற்றிச் சுருக்கமாக என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவதாக, திலீபனின் உயிரீகம் எந்த வகையில் மகத்தானது? தமிழீழ மக்கள் தங்களுக்கு நண்பன் என்று கருதி வரவேற்க அணியமாக இருந்த இந்தியப் படைகள், உண்மையில் அவர்கள் செய்த கொடுமைகளால் தமிழீழ மக்களுக்குப் பகை என்று தெரிந்த போது அந்தப் பகையைத் தோலுரித்துக் காட்டுவதற்கு தீலீபனின் ஈகம் பயன்பட்டது. இந்தப் போரில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இன்றைக்கு அவருடைய பெயரால் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், தமிழகத்தினுடைய வகிபாகம் குறித்தும் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம். திலீபனின் தியாகத்தை நினைவுகூர்ந்துதான் நாங்கள் தமிழ்நாட்டிலே திலீபன் மன்றம் தொடங்கி ஈழத்தமிழர் துயர் துடைப்பதற்காக இயக்கம் நடத்தினோம்.

இன்றைக்கு இருக்கின்ற சூழல் என்பது விடுதலைப் போராட்டம் ஈடுசெய் நீதிக்கான போராட்டமாக உருக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்ட இனவழிப்பினால் தமிழீழத்திற்கான தேவையோ, தமிழகத்திற்கான போராட்டத்திற்குரிய தேவையோ மறைந்து விடவில்லை. அவை பன்மடங்கு பெருகித்தான் உள்ளன என்று 2010ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் – முன்னும் பின்னும் என்ற ஒரு குறுநூலில் நான் எழுதினேன். இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் இந்தியாவுடன் நமக்கு இருக்கின்ற உறவு குறித்தும தமிழீழ மக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன்.

எனக்கு நீங்கள் அளித்திருக்கின்ற தலைப்பில், இந்தியாவின் – அதுவும் எதிர்கால இந்தியாவின் – பாதுகாப்பு என்று குறிக்கபப்ட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தியா என்றுதான் இதைச் சொல்கிறேன். இதில் நமக்கு ஒருதெளிவு இருக்க வேண்டும். இலங்கை அல்லது சிறிலங்கா என்று சொல்வது ஈழத் தமிழர்கள், சிங்களவர்கள் என்று இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு தீவுநாடு என்று நாம் வரையறுத்துப் புரிந்து கொண்டிருக்கிறோம். அந்த இரண்டு தேசங்களின் சுயநிர்ணய உரிமை எனப்படும் தன்தீர்வுரிமை, அவற்றிற்கிடையிலான நிகர்மை, தமிழீழத் தேசத்தினுடைய இறைமை ஆகியவற்றை எல்லாம் தந்தை செல்வா அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த அடிப்படையில்தான் பட்டுக்கோட்டை தீர்மானம் இயற்றுவதற்குக் காரணமாக இருந்தார்கள்,

தமிழீழப் போராட்டத்திற்கான வரலாற்று நியாயத்தை அந்தப் பார்வை வழங்கியது. இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இடம் குறித்து அறிந்திருக்கிற நாம் இந்தியாவில் தமிழ்நாட்டிற்குரிய இடம் குறித்து அறிந்திருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தியா என்று சொல்கிறோமே, அது ஒரு தேசமா? என்ன மொழி பேசுகிற தேசம்? என்ன பண்பாடு கொண்ட தேசம்? என்ன வரலாறு கொண்ட தேசம்? என்ற கேள்விகளை எல்லாம் இந்தியாவிலே இன்றைக்கு எல்லாத் தரப்பினரும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்? இந்தியா என்றொரு தேசம் உண்டா?

இந்தியா என்கிற பாரதம் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதில் இந்தியா என்ற பெயரையே நீக்கி பாரதம் என்று மட்டும் மாற்றி விடவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை ஆளுகிற தரப்பு எழுப்பிக் கொண்டிருக்க, அதற்குக் கடும் எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், இந்தியா என்ற பெயரில் ஒரு எதிர்கட்சிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது, அதற்காகத்தான் இந்த பாரதச் சிக்கல் எழுப்பப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. சம்பு தீபம், ஆரிய வருத்தம், பாரத வருசம் என்பதெல்லாம் புராணக் கதைகளில் வரும் பெயர்கள். ஒரு மொழியின் பெயரோ ஒரு நிலப்பரப்பின் பெயரோ அல்ல. அப்படிப்பட்ட ஒரு பெயரை ஏற்றுக் கொள்வது வரலாற்றைப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் என்று நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

சரி, அப்படியானால் இந்தியா என்பது என்ன? இந்தியா என்ற பெயர் எல்லாருக்கும் ஒரு நடுநிலையான பெயராகக் கருதப்பட்டாலும் அதற்குரிய பொருள் வரலாற்றில் புவியியல் பாடத்தில் என்ன? இந்தியா என்பது துணைக் கண்டம் என்று படிக்கிறோம். துணைக்கண்டம் என்றால் விரிந்த நிலப்பரப்பு என்பதைக் குறிக்கும். அதற்குமேல் வேறு பொருள் இல்லை. உண்மையில் அது என்னவென்றால் பிரித்தானியர் தம்முடைய சுரண்டலின் தேவைக்காகவும், குடியேற்ற(காலனிய) ஆட்சியின் தேவைக்காகவும் தனித்தனியாக இருந்த பல்வேறு தேசங்களையும் அரசுகளையும் ஒன்று படுத்தி ஒரு கட்டமைப்பை உருவாக்கினார். அந்தக் கட்டமைப்புதான் இந்தியா எனப்படுகிறது. இந்தியா என்கிற இந்த அரசுக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட வேண்டுமா? அல்லது இந்தியக் கட்டமைப்புக்குள் ஒடுக்குண்டு கிடக்கின்ற பல்வேறு தேசியஇனங்கள், பல்வேறு பழங்குடிகள் காப்பாற்றப்பட வேண்டுமா? இவற்றில் எது இந்தியப் பாதுகாப்பு என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

அதிலும் எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பு என்று சொல்லும் போது இந்தியா என்கிற இந்தக் கட்டமைப்பு இப்படியே நீடிக்கப் போகிறது, இதனுடைய எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டத்தில் அடங்கி இருக்கிற பல்வேறு தேசிய இனங்களுக்கும், பழங்குடிகளுக்கும் எதிர்காலம் இல்லை என்பதைக் குறிப்பதாகும். இந்தப் பொருளில் இந்தியப் பாதுகாப்பு என்பது தமிழீழத்தின் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு எதிர்காலம் இருக்கலாம், ஆனால் இந்தியாவின் இன்றைய கட்டமைப்புக்கு எதிர்காலம் இருக்குமானால், இது பற்பல தேசங்களுக்கும் கட்டமைப்பியல் இனவழிப்பை ஏற்படுத்துவதாகும். இந்தக் கட்டமைப்பியல் தேசிய ஒடுக்குமுறை என்பது தமிழகத்தின் வருங்காலத்திற்குத் தீங்கு செய்யும். இந்தியாவினுடைய பல்வேறு தேசிய இனங்களின் வாழ்க்கைக்கும் ஊறு செய்யும்.

அண்மையில் நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். இனவழிப்பு என்ற சொல் இந்தியாவில் மீண்டும் மீண்டும் பல கட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு குசராத்தில் இசுலாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். பிபிசி வெளியிட்ட மோதி வினா ஆவணப் படம் இதைத்தான் சித்திரிக்கிறது.

அடுத்து, மிக அண்மையில் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிற நிகழ்ச்சிகளை நீங்கள் கவனித்து வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். நடுநிலையாளர்கள் கூட, சமூகவியலர்கள் கூட சுட்டிக்காட்டுகின்றார்கள். மணிப்பூரில் நடப்பது இனக்கொலைதான் என்று. குக்கி இன மக்கள் இனக்கொலை செய்யப்படுகிறார்கள். யாரால் இனக்கொலை செய்வது யார்? இந்துத்துவ இந்திய அரசும், அதற்கடங்கிய மணிப்பூர் மாநில அரசும சேர்ந்து இந்த இனவழிப்பைச் செய்து கொண்டிருக்கின்றன. இப்படி நிறைய உதாரணங்களை நாம் எடுத்துக்காட்டலாம். இசுலாமியர் இனவழிப்பு, மணிப்பூரில் குக்கிகள் இனவழிப்பு, நாகர் இனவழிப்பு, தண்டகாரண்யப் பகுதியில் பல்வேறு பழங்குடிகள் இனவழிப்பு என்று இந்தியா பரவலாகப் பல இனவழிப்புகளின் களமாகிக் கொண்டிருக்கிறது. காசுமீரம், பசுதார், சட்டிசுகார் என்று பல்வேறு பகுதிகளிலும் இந்தியப் படை மண்ணின் மக்கள் மீது நரவேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

ஆகவே நாம் இந்தியா என்பதை இந்திய மக்கள் என்று கூட சொல்ல இயலாது. ஏனென்றால் இந்தியா என்பது ஒரே மக்களைக் கொண்ட தேசமன்று. அது பல்வேறு மக்களினங்களைக் கொண்ட நாடு. இலங்கை எப்படி இரண்டு மக்கள் சமூகங்களைக் கொண்டதோ. அதுபோல் இந்தியா என்பது குறைந்தது இருபதுக்கு மேற்பட்ட மக்கள் சமூகங்களைக் கொண்டது. இந்தியாவின் மக்கள் (Peoples of India) உண்டே தவிர இந்திய மக்கள்(Indian people) கிடையாது. இந்தியத் தேசம் என்பது சமூக அறிவியலுக்கு மாறானது. இந்தியா ஒரு சிறைக் கூடம், தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று எமதியக்கம் சொல்கிறது. இந்திய அரசமைப்பு என்பது சிறைச் சட்டம். இது தேசிய ஒடுக்குமுறைக்கும் சமூக ஒடுக்குமுறைக்குமான ஆவணம்.

இது குடியேற்ற(காலனிய)க் காலத்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடர்ச்சி. இதை நான் இங்கு ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், நீங்கள் இந்தியப் பாதுகாப்பு என்று மேலெழுந்த வாரியாகப் புரிந்து கொள்ளக்கூடாது. பாக்கித்தானிடம் இருந்து பாதுகாப்பு, சீனாவிடமிருந்து பாதுகாப்பு, எல்லையிலே பாதுகாப்பு என்று புரிந்துகொண்டிருப்பீர்களானால் அது ஆழமான புரிதல் ஆகாது. ஏதோ ஒருகுறுகிய நிலப்பரப்பைப் பாதுகாப்பது அவ்வளவுதான் நாட்டுப் பாதுகாப்பா? சில காணிகள் எதற்கும் உதவாத நிலங்கள், பனி மலைகள். இதற்காக நடக்கிற சண்டையைத்தான் நாடு காக்கும் போர் என்று வண்ணித்து தேச பக்த வெறி ஊட்டுகின்றார்த்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 324