தடவியல் வல்லுநர்களாகிவிட்டோம்!

 

தடவியல் வல்லுநர்களாகிவிட்டோம்

தடவிக் கொண்டே இருக்கிறோம் தொடுதிரையை

ஒருவரை ஒருவர் தொடாமலே!

 

கைவரி மாறவில்லை

பதியும் இடங்கள்தான் மாறிப்போயின

பாதத்‌ தடங்களும் மாறவில்லை

பயணங்களும் மாறவில்லை

பாதைகள் தான் மாறிப்போயின

 

இலக்கு என்னவோ வெற்றியை நோக்கித்தான்

வழிகள்தான் குறுக்கும் நெடுக்குமாக

 

எங்குப் பயணித்தாலும் ஒரு துணையைத் தேடுகிறோம்

என்னதான் தனிமைப்பட்டு இருந்தாலும்

நம் மனம் மட்டும் எப்போதும்

ஒரு துணையைத் தேடுகிறது

 

நமக்கு என்று துடிக்கும் ஓர் உயிரை நாடுகிறது

எனக்கு என்று ஓர் உயிர் இருக்கிறது என்ற நம்பிக்கை வந்துவிட்டால் போதும்

இந்த உலகமே என் காலடியில்

 

காதலிக்கும் எல்லோருக்குமே ஒரு கருவம் இருக்கும் –

அவர்களுக்கு என்று ஓர் உயிர் துடிப்பதால்

 

நம் அழகை நாம் சுவைப்பதை விட

நம் அழகைப் பிறர் சுவைப்பதைச்

சுவைத்துப் பாருங்கள்

கருவம் தானாய்ப் பிறக்கும்

 

எல்லாரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்த காலம் போய்

எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரிக்கும் காலம்

காதலின் தோல்விக்குப் பின்னே

 

காதலிக்கும் போது மறைந்து மறைந்து காதலித்தோம்

மறைந்து மறைந்து சந்தித்தோம்

மறைந்து மறைந்து களித்தோம்

 

தோல்விக்குப் பின்னே

எதையும் மறக்க முடியாமல்

மறைக்க முடியாமல் மறுக்கமுடியாமல்

வெறுமையில் திரிகிறேன் வெளிப்படையாய்

 

காதலில் வெற்றி தோல்வி இல்லை

துரோகம் மட்டுமே காலத்திற்கும் ரோகம்

காண்பவை எல்லாம் கலைந்து போகும் மேகம்

கண்ணீர் மழை மட்டும் நிலையாக

 

காயப்படுவது என்னவோ ஒருமுறைதான்

ஆனால் வடுக்கள் வாழ்நாள் முழுவதும்

காதல் என்னவோ என்னிடம்தான்

கண்ணீர் மட்டும் கல்லறை வரை

 

இதயத்திற்குள் நான் கட்டிய கல்லறைக் கோட்டை

நினைக்கும் போதெல்லாம் உருகிக் கண்ணீராய்

நனைக்கிறது என் கன்னத்தை!

துடைத்துவிட கரம் இருந்தும்

தொடுவதில்லை யாரும் யாரையும்!

 

கரைந்து உருகினாலும்

கனவுகளால் மீண்டும் நிறைந்து

இதயத்திற்குள் இனி யவளுக்காகக்

கட்டிய காதல் கோட்டை  – இன்னமும்

 

தொடு திரையைத் தடவிக்கொண்டே

தொடர்ந்து நடக்கிறோம் குருடனின்

கோல்களைப் போல்

 

தட்டிக்கொண்டே முன்னேறுகிறான் அவன்

தட்டு தடுமாறாமல்

விழி இல்லாதவனுக்கு வழி கிடைக்கிறது

 

முன்னேறாமல் முட்டிக் கொண்டும்

திட்டிக் கொண்டும் முனகிக் கொண்டும்

விழி இருக்கும் நாம் வாழ வழியின்றி

 

எதிர்ப்படும் எல்லாம் சாதகமோ பாதகமோ

அதை எதிர்கொள்ளும் முறையில் பலன் கிடைக்கும்

 

தடவியல் வல்லுநர்கள் நாம்

தவற்றை மறந்து விட்டோம்

ஆறுதலைக் கூட ஆராயத் தொடங்கி விட்டோம்

 

யாரையும் நம்ப கூடாது என்ற வேதாந்தத்தில்

நம்மை நாமே நம்புவதில்லை!

 

தனித்தனியே வாழப் பழகித்

தனித்தன்மையை இழந்து விட்டோம்

தன்னிலையை மறந்து விட்டோம்

 

பொழுது போக்க வந்த சாதனம்

வாணாள் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறது

 

தொடுதிரையைத் தடவத் தவறிவிட்டால்

இருண்டு போகிறது என் அலைபேசி மட்டுமல்ல

என் அகமும் புறமும் கூட

 

தள்ளி நிற்கும் நம்மைப் பார்த்து

எள்ளி நகைக்கின்றன கருவிகள்

செயற்கை என்னால் செயலிழந்து போனதடா

இயற்கை என்று!

 

சிந்திப்போம் சந்திப்போம்

மீண்டும் மீண்டும்!

 

இவண்

ஆற்காடு க. குமரன்

9789814114