(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17 தொடர்ச்சி)

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17


முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரம்மானை
முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரெனிற்பின்னர்
அடிமையில் நம்தமிழர் ஆழ்ந்ததேன் அம்மானை
ஆழ்ந்ததோ ஒற்றுமையின் அகன்றதால் அம்மானை       (46)

புலவர்


அன்று தொடங்கி அருந்தமிழ்நற் புலவோர்கள்
சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ரம்மானை
சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ராமாயின்
இன்று முதற்பெருமை இலாததேன் அம்மானை
நன்று சொனாயினியும் நழுவவிடா ரம்மானை       (47)

வரிசை பலசெய்து வண்தமிழ்நற் புலவோர்கள்
அரசர் அடங்கிமிக அரசாண்டார் அம்மானை
அரசர் அடங்கிமிக அரசாண்டா ராமாகில்
அரசரினும் புலவர்தம் ஆற்றலென்ன அம்மானை
ஆற்றல் தமிழ்தந்த ஆற்றலே அம்மானை       (48)

விசிறிதன் கைக்கொண்டு விசிறினன்காண் அம்மானை
விசிறிதன் கைக்கொண்டு விசிறியது மெய்யாகில்
விசிறிய காரணத்தை விளம்பிடுவாய் அம்மானை
காரணந்தான் தமிழறிந்த காதலே யம்மானை       (49)

அயலார்


தமிழ்நாட்டில் தமிழ்ச்சோற்றைத் தகுதியுடன் மிகஉண்டு
தமிழுக்கே கேடுசெய்வோர் தங்கியுளார் அம்மானை
தமிழுக்கே கேடுசெய்து தங்கியுள்ள அவர்தம்மைத்
தமிழர்கள் தண்டிக்கத் தயங்குவதேன் அம்மானை
தயங்குவதற்குக் காரணம்நம் தண்ணளியே அம்மானை       (50)


– பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்புரை :-

48 – பண்டையக் காலத்தில் அரசர்கள் தமிழ்ப்புலவர்களின் வாக்கைத் தட்டாது அடங்கி அரசாண்டு வந்தார்கள். காரணம் புலவர்களின் தமிழாற்றலே. இசைமிக்க ஒருசேரன் இனியஒரு புலவர்க்கு

49. பண்டு, மோசிகீரனார் என்னும் புலவர் வழிநடந்த களைப்பால் அரண்மனைக் கட்டில் ஒன்றில் அறியாது படுத்து உறங்கிவிட்டார். அவ்வரண்மனைக்குரிய சேர அரசன் புலவரைத் தண்டிக்காது, விசிறி கொண்டு விசிறினான். காரணம் தமிழ்ப்பற்றே.
50 – தண்ணளி – கருணை

+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]