தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 17/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17 தொடர்ச்சி)
தனித்தமிழ்க் கிளர்ச்சி: 17/17
உயர்வுபெற வேண்டுமெனின் ஒவ்வொரு குலத்தினரும்
அயர்வின்றிப் பலதுறைநூல் ஆயவேண்டும் அம்மானை
அயர்வின்றிப் பலதுறைநூல் அனைவரும் ஆராயின்
உயர்ந்தோர்க்குத் தாழ்குலத்தோர் ஒடுங்குவரோ அம்மானை
உயர்வுதாழ்வு பேசினினி ஒறுப்புண்டாம் அம்மானை (81)
தமிழ்நாட்டெல்லை
நன்கு வளம்பெற்ற நம்தமிழ் நாட்டெல்லை
தென்குமரி முதலாகத் திருப்பதியாம் அம்மானை
தென்குமரி முதலாகத் திருப்பதிநம் எல்லையெனில்
இன்று சிலரதனை எதிர்ப்பதேன் அம்மானை
எதிர்ப்பவரை எதிர்த்தால்நம் இடம்பெறலாம் அம்மானை (82)
முன்னைநாள் தொட்டுமே மொய்த்துத் தமிழர்வாழ்
சென்னை தமிழருக்கே சேரவேண்டும் அம்மானை
சென்னை தமிழருக்கே சேரவேண்டின் ஆந்திரர்கள்
முன்னித் தமதாக்க முயலுவதேன் அம்மானை
முயலவே விட்டால்நாம் மூடராவோம் அம்மானை (83)
தனித்தமிழ்க் கிளர்ச்சி
அன்றுபோல் நம்தமிழர் ஆக்கங்கள் பலபெற்று
என்றுமே இன்பமுடன் இருக்கவேண்டும் அம்மானை
என்றுமே இன்பமுடன் இருக்கவேண்டின் தமிழர்க்கு
இன்று தமிழ்நாட்டில் என்னவேண்டும் அம்மானை
தனித்தமிழ் நற்கிளர்ச்சிதான் வேண்டும் அம்மானை (84)
– பேராசிரியர் சுந்தர சண்முகனார்
(ஆக்கம்: 1948)
தொடரும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
குறிப்புரை :–
81 – எல்லாக் குலத்தினரும் பலதுறை நூற்களைக் கற்றால் உயர்ந்த குலத்தோர்க்குத் தாழ்ந்த குலத்தோர் அடங்கமாட்டார்கள் என்று சிலர் குறுகிய நோக்குடன் கூறுகின்றனர். இனியும் உயர்வுதாழ்வு கருதின் செங்கோல் தண்டிக்கும். ஒறுப்பு – தண்டனை.
சென்னை தமிழருக்கே
82,83,84 – தமிழ் நாட்டில் வடஎல்லை திருப்பதி, தென்னெல்லை குமரி. இது பழைய நூற்களிற்கண்ட உண்மை. எனவே, இவ்வெல்லைக் குட்பட்ட சென்னையை ஆந்திரர் தமதாக்க முயல்வது மிகக் கொடுமை. தமிழர் அறநெறியில் தனித்தமிழ்க் கிளர்ச்சி செய்யவேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Leave a Reply