(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 2/17 தொடர்ச்சி)

தனித்தமிழ்க் கிளர்ச்சி : 3/17

தேனுலவு தருவின்கீழ்த் தேவருள தாக்கூறும்
வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்கா தம்மானை
வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்காதெனின் அந்த
வானுலகை உயர்ந்ததா வாழ்த்துவதேன் அம்மானை
வாழ்த்துபவர் தமிழ்ச்சுவையின் வளமறியார் அம்மானை       (11)

இறவாத முத்தியை எண்ணிச் சிலருலகில்
பிறவாமை வேண்டுமெனப் பித்துண்டார் அம்மானை
பிறவாமை வேண்டுவோரைப் பித்தர் எனலாமோ
பிறந்து பயனென்ன பெருந்துன்பம் அம்மானை
பிறந்து தமிழின்பம் பெறவேண்டும் அம்மானை       (12)

அமிழ்தான நீர்சூழ்ந்த அகல்நிலத்து நாடுகட்குள்
தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் அம்மானை
தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் தோன்றுதற்குத்
தமிழ்நாட்டில் சிறப்பென்ன தங்கியுள தம்மானை
தமிழைவிடச் சிறப்பென்ன தங்கவேண்டும் அம்மானை       (13)

மன்னிய தெய்வம் மதுரையில் பாண்டியனாய்
நண்ணியதா நூற்கள் நவில்கின்ற அம்மானை
நண்ணியதா நூற்கள் நவில்கின்ற எனினங்கு
நண்ணிய காரணத்தை நவின்றிடுவாய் அம்மானை
நண்ணியது தமிழ்ச்சுவையை நாடியே அம்மானை       (14)

பொய்தானும் இல்லையிது பொருத்தமே தெய்வத்தை
வைதாலும் தமிழினால் வாழவைக்கும் அம்மானை
வைதாலும் தமிழினால் வாழவைக்கும் என்பதுதான்
மெய்தான் எனின்தமிழ்க்கு மேன்மையன்றோ அம்மானை
தமிழ்க்குள்ள மேன்மை தமிழர்க்கும் அம்மானை       (15)

பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்புரை :-

  1. தமிழின்பம் அறியாதவரே தேவஉலகத்தை உயர்ந்ததென்பார்கள்.

    12. பிறவாத முத்தி (மோட்சம்) வேண்டா. தமிழ்நாட்டில் பிறந்து பிறந்து தமிழின்பத்தைச் சுவைப்பதே முத்தி.

    13. இனிய தமிழ் பேசப்படுவதால் தமிழ்நாடு என்றாலேயே ஓர் இன்பம் தோன்றுகிறது.

    14. சிவனும் சிவையும் முருகனும் பாண்டிய மன்னர்களாய் மதுரையில் வாழ்ந்தமைக்குக் காரணம் தமிழின்பத்தைச் சுவைக்கவேண்டும் என்னும் ஆவலே.
    15. தெய்வத்தைத் தமிழால் வைதாலும் வாழ்வுண்டாகும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]