அம்மானை

மூன்று பெண்மணிகள் கூடி ஒருவகையான காய்களை மேலேபோட்டுப் பிடித்துக்கொண்டும், தொடை தடை விடைகளுடன் ஒருவர்க்கொருவர் உரையாடிக்கொள்ளும் முறையில் இன்னிசையுடன் பாடிக்கொண்டும் விளையாடுகின்ற ஒரு வகையான ஆட்டத்திற்கு அம்மானை என்று பெயர். இந்நிலையை அமைத்துப் பாடுகின்ற பாட்டிற்கு அம்மானைப் பாட்டு என்று பெயர். இப்பாட்டு (பெரும்பான்மையும்) ஐந்து அடிகளை உடையதாய் ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவால் பாடப்பெறும்.

தொடை : ஒரு பெண் ஒரு செய்தியை (தொடுத்து) அறிவிப்பதாக முதல் இரண்டடிகளும் இருக்கும்.


தடை : முதற்பெண் அறிவித்ததற்கு, இரண்டாவது பெண் (தடுத்து) குறுக்குக் கேள்வி போடுவதாக மூன்றாவது நான்காவது அடிகள் இருக்கும்.


விடை : அவ்விரு பெண்களின் தொடை, தடைகட்கேற்ப ஒரு நல்ல முடிவோ, தீர்ப்போ மூன்றாவது பெண் (விடுப்பதாக) கூறுவதாகக் கடைசி அடி இருக்கும்.


எனவே, மூன்று பெண்மணிகள் தொடை, தடை, விடைகளுடன், ஒருவர்க்கொருவர் உரையாடிக் கொள்வதாக அமையப் பெறும் சிறப்பால் அம்மானைப் பாடல்கள் அழகாயிருப்பதும், படிப்பதற்கு இனிமை தருவதும் வழக்கம். மூவர் பேச்சின் முடிவிலும் அம்மானை எனும் சொல் அழகுடன் மிளிரும். இம்முறையாக, மூன்று பெண்மணிகள் கூடி முடிவுகட்டித் தனித்தமிழ்க்கிளர்ச்சி செய்வதாக இந்நூல் அமைக்கப் பெற்றுளது.

தனித்தமிழ்க் கிளர்ச்சி 

அம்மானைபெண்களின் பேச்சு


தமிழ்த் திருநாள்


பொங்குகபால் எனமுழக்கம் புரிகின்ற தைத்திங்கட்
பொங்கல்தான் தமிழ்க்குரிய புதுத்திருநாள் அம்மானை
பொங்கல்தான் தமிழ்க்குரிய புதுத்திருநாள் ஆமாயின்
தங்குதீ பாவளியின் தகுதியென்ன அம்மானை
தீபா வளிவாடை தெற்குவீசிற் றம்மானை       (1)

தமிழ்ச் சிறப்பு


இனித்திடுநம் தமிழ்மொழிதான் இன்னொன்றன் துணையின்றித்
தனித்தியங்கும் தகுதிபெற்ற தனிமொழிகாண் அம்மானை
தனித்தியங்கும் தகுதிபெற்ற தனிமொழியே யாமாகில்
திணித்துமிக ஆரியச்சொல் சேர்த்ததேன் அம்மானை
திணித்தனர் ஆரியர்தம் திறமையினால் அம்மானை       (2)


நீதி நெறிமுறையே நின்றுநாம் ஆராயின்
ஆதி முதல்மொழிநம் அருந்தமிழே அம்மானை
ஆதி முதல்மொழிநம் அருந்தமிழே யாமாகில்
ஓதி அனைவரும் உணர்ந்தனரோ அம்மானை
உணரும் பருவந்தான் உற்றதுகாண் அம்மானை       (3)

கள்ளமில்தெ லுங்குதுளு கன்னடம லையாளமெனும்
பிள்ளைபல பெற்றவள்நம் பெருந்தமிழ்த்தாய் அம்மானை
பிள்ளைபல பெற்றவள்நம் பெருந்தமிழ்த்தா யாமாகில்
எள்ளுவண்ணம் ஆரியம்போல் இறக்கவில்லை யம்மானை
இறவாத இறைவன்நிகர் இன்தமிழ்த்தாய்க் கம்மானை       (4)

நாளும்இந் நாட்டிற்கு நடுமொழியாய் நனிநின்று
ஆளும்வன் மைதமிழுக் கடுத்ததுகாண் அம்மானை
ஆளும்வன் மைதமிழுக் கடுத்ததுவே யாமாகில்
மீளுதலில் அடிமையில்முன் மேவியதேன் அம்மானை
மேவியது நம்தமிழர் மிரண்டதினால் அம்மானை       (5)

பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்புரை :-
[1]. முதற்செய்யுள் வடநாட்டுக் கொள்கையாகிய தீபாவளியென்னும் வாடைக்காற்றுத் தெற்கிலுள்ள தமிழ்நாட்டில் வந்து வீசிப்பரவியது.
[2]ஆம் செய்யுள்-தனித்தியங்கல் = பிறமொழிச் சொற்களின் உதவி தேவையின்றித் தானே தனித்தியங்குவது.

[4]. கிளைமொழிகளாகிய பல பிள்ளைகளைப் பெற்றும், தமிழ் இளமை குன்றவில்லை; பேச்சுவழக்கு இறந்த ஆரியம் போல் இறக்கவுமில்லை. ஆதலின் அது கடவுளை ஒத்தது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]