gurunathan

அன்னைமொழி மறந்தார்!

அன்னைமொழி அமுதமென
அற்றைநாள் சொன்னார்கள்
இற்றை நாளில்
முன்னைமொழி மூத்தமொழி
முடங்கியதை மறந்துவிட்டு
மூங்கை யானார்;
பின்னைவந்த மொழிகளிலே
பேசுகின்றார்; எழுதுகின்றார்
பேதை யாகித்
தன்மொழியைத் தாம்மறந்து
தருக்குகிறார் தமிழ்நாட்டில்
வெட்கக் கேடே!

இருந்தமிழே உன்னால்தான்
நானிருந்தேன்; அன்று சொன்னார்;
இற்றை நாளில்
இருந்தமிழே உனக்காய்நான்
இருப்பதாகச் சொல்வதற்கே
இதயம் இல்லை!
அரியணையில் ஏற்றிவைத்த
அருந்தமிழைப் போற்றுவதற்கு
மறந்து போனோம்
திருத்தமுற எடுத்துரைக்கத்
திசையெங்கும் தமிழ்வளர்க்கும்
கொள்கை ஏற்போம்.

புலம்பெயர்ந்து போனவர்கள்
புதுமைகளைக் கண்டங்கே
மொழிவ ளர்த்து
நலமுடனே வாழ்கின்றார்;
நாமோ இங்கே
இலக்கியத்தை இலக்கணத்தை
இளைஞர்க்குப் பயிற்றுவிக்க
ஏன்ம றந்தோம்
கலக்கமுற்ற தமிழன்னை
கண்ணீரை வடிக்கின்றாள்
கவலை யுற்றே!

 – முனைவர் இராம.குருநாதன்