தமிழினியின் கவிதை
சித்திரை 11, 2003 – ஆனி 01, 2046 : 23.04.1972 – 18.10.2015
போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது.
வெடியதிர்வுகளின் பேரோசைகளால்
குடி பெயர்ந்தலையும்
யானைக் கூட்டங்களாக
இருண்ட முகில்களும் கூட
மருண்டு போய்க் கிடந்தன.
பகலை விழுங்கி தீர்த்திருந்த
இரவின் கர்சனை
பயங்கரமாயிருந்தது
அம்பகாம பெருங்காட்டின்
போர்க்களத்தில்.
காதலுறச் செய்யும்
கானகத்தின் வனப்பை
கடைவாயில் செருகிய
வெற்றிலைக் குதப்பலாக
சப்பிக்கொண்டிருந்தது
யுத்தம்.
மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெற கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காகக் காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர் தண்ணீருக்காகத்
துடிக்கிறதாம்.
எவருக்கும் தெரியாமல்
என்னிடத்தில் குமுறியவள்
விட்டுச் சென்ற
கண்ணீர்க் கடலின்
நெருப்பலைகளில்
நித்தமும்
கருகிக் கரைகிறது
நெஞ்சம்.
தனி மனித
உணர்ச்சிகளின் மீதேறி
எப்போதும்
உழுதபடியே செல்கின்றன
போரின்
நியாய சக்கரங்கள்.
அக்கணத்தில்
பிய்த்தெறியப்பட்டிருந்த
பச்சை மரங்களின்
இரத்த வீச்சத்தை
நுகர்ந்த வல்லுாறுகளின்
நீண்ட நாக்குகளில்
உமிழ்ந்து
பெருகுகிறது
வெற்றிப் பேராசை.
-தமிழினி
(புரட்டாசி 02, 2046- 19.09.2015)
கண்ணீர் பெருகச் செய்யும் கவிதை! நாம் சிறந்த போராளியை மட்டுமில்லை, நல்ல தலைவியை மட்டுமில்லை, அருமையான கவிஞர் ஒருவரையும் இழந்திருக்கிறோம்!