தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !
உலகின் வடிவம் உருண்டை என்பதை
உருபெரும் அறிவியலாளர் கலிலியோ கூறினார்
கலிலியோ கூற்றை கண்கண்ட நாடுகளுக்கு
கருத்துரையாகப் பரப்புரை செய்தார் ஆனால்
ஈராயிரத்து ஐநூறுக்குமுன்னே சீராயிரம் படைத்த
இருவரிமறை ஆசான் திருவள்ளுவப் பெருமகன்
உருவான உலகம் உருண்டை என்றே
இருவரியிலே உலகிற்கு இயம்பினார் அன்றே !
” சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் ; அதனால்
உழந்தும் உழவே தலை ” என்றாரே
படித்தனர் ஆயினும் பரப்புரை செய்தனரா ?
பிறநாட்டார் சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே !
சுழலும் உலகம்கூட உழவரின் பின்செல்லும்
நிழலாக இருக்கிறதென நிறைவாகக் சொல்லுமந்த
உழவரின் திருநாளே உருபெரும் பொங்கலதுவும்
பழமைப் புத்தாண்டு புதுநாள் என்போம் !
இழிபிறப்பின் பெயரால் இருக்கின்ற அறுபதாண்டை
வழிமொழி அறியா வன்நெஞ்சர் தமிழராண்டென
புகுத்திட்டார் ; தமிழரினம் பகுத்துப் பார்த்து
வகுத்திடுவோம் புதுநெறியை தொகுத்து மகிழ்வோம் !
பொங்கு கின்றபுதுப் பாலின் பூநுரையில்
பொலி கின்ற பொலந்தூய்மை அகத்தில்கொண்டு
சங்கத் தமிழ்மரபை சாற்றிமறைந்த சான்றோர்களை
பொங்கல் புத்தாண்டில் போற்றி மகிழ்வோம் !
வாழ்த்துகள் !
இளையவன்–செயா , மதுரை
பெரியார் ஆண்டு 135 தொ. ஆ. 2878
தி. ஆ. 2044 சிலை (மார்கழி ) 22 ( 07–01–2014 )
தை திருநாளாம் தமிழர் திருநாளில் திருவள்ளுவப் பெருமானின் ஆசிகளோடு நாம் அனைவரும் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று அன்போடும் மகிழ்வோடும் இவாண்டை துவங்குவோம் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
தமிழ் மகானைப் பற்றியும் தமிழன் மறந்ததைப் பற்றியும் உட்க்கருத்தாய் வைத்து அருமையான கவிதை வடித்தமைக்கு வாழ்த்துக்கள்.