jasline02

தேடும் பொருள் கைவர

 ஏற்றம் தரும் கல்வி

 தலை முறைகள் கடந்து

 திறமை ஊட்டும் கல்வி

                                         thamizhmuzhakkam02 இன்று வெறுமை யுற்று

 சிறுமையுற்று வீழுதடா மண்ணில்!

 சந்தையிலே கூவி விற்கும்

 சரக்கு ஆனதடா கல்வி

 சிந்தை உறைய வைக்குமளவில்

 சிக்கலில் தமிழ்க் கல்வி

 நாம்வெந்து நொந்து போனாலும்

மீட்க வேண்டும் அதனை!

 அறிவு மொழியாய் ஆங்கிலம்

 நாட்டில் ஆனதடா மாயையாய்

 அம்மா அப்பா எல்லாரும்

 ‘மம்மி டாடி’ போதையாய்

 தனியார்மயக் கல்வியில் தவிக்குதய்யா

 வருந்தி விழிக்குதய்யா பிள்ளைகள்

 மீட்கும் வழியைத் தேடியே

 முயற்சி பலபல செய்குவோம்!

 தாய்த்தமிழே வகுப்பு அறையில்

 தனித் தமிழாய் வென்றிட

 சேய்களெல்லாம் அயல் மொழியின்

 நோய்கள் அற்று வாழ்ந்திட

 தன்மொழியில் இன்தமிழில் பண்பமைந்து

 குழந்தை மொழி பயின்றிட

 தமிழன் என்று ஒருகூட்டம்

 புகழ்சேர் தரணியில் நிலைபெற

 மீண்டுமொரு வேள்வி தன்னை

 தாய்த்தமிழில் கல்வி தன்னை

 கொணர்ந்திடவே உறுதி ஏற்று

 அயற் கல்வி தொலைத்திடுவோம்!

 கருவறையின் இருட்டு அறையில்

 கேட்டு மகிழ்ந்த மொழியிலே

 நல்மனம் உவந்து நிலைபுரிந்து

 கற்கும் நிலையை எய்தினால்

 நித்தம் வாழ்வில் உயர்ச்சியே

 துறைகள் தோறும் மலர்ச்சியே!

 கிட்டக்கிட்ட இருந்து நம்மை

 முட்டும் அன்பில் கட்டியணைத்து

 வளர்த்துவிட்ட தாய்த்தமிழே தனித்தமிழே

 கல்வி மொழியாய் ஆகினால்

 மீண்டு மொருஉயர் நிலையில்

 அகிலமாளும் தனிபெரும் நிலையில்

 தமிழர்நிலை வளரும் மலருமதில்

 ஐயமில்லை வீழ்ச்சி இல்லை!

– ச. சாசலின் பிரிசில்டா,

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(தன்நிதி),

அருள் ஆனந்தர் கல்லூரி,

கருமாத்தூர், மதுரை