தமிழ் வளர்கிறது! 10-12 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி)
தமிழ் வளர்கிறது! 10-12
தமிழ்நாட்டில் வானொலியை இயக்கு விக்கும்
தனியுரிமை பெற்றவரோ வடமொ ழிப்பேர்
அமைத்ததனை அழைக்கின்றர் இந்தி தன்னை
அருமுயற்சி செய்திங்கே பரப்பு கின்றார்.
சமைத்துவைத்த அறுசுவைசேர் உணவி ருக்கச்
சரக்குதனைக் குடிப்பாட்டும் சழக்கர் போலே
நமைத்துன்பப் படுத்துகின்ற ஆள வந்தார்
நாட்டுமொழி வளர்ச்சியினைத் தடுக்க லானார் ! (10)
கொள்ளைகொலை ஆபாசச் செய்தி யென்னும்
குப்பையெலாம் பரப்புகின்ற செய்தித் தாள்கள்
கள்ளமிலா நாட்டினரின் உள்ளங் தன்னைக்
கயமைவழிச் சேர்க்கின்ற கதையி தழ்கள்
வெள்ளம்போல் பெருக்கிரும்பால் விலைப்ப டுத்தி
விந்தையுறத் தமிழ்வளர்ப்ப தாகக் கூறும்
குள்ளர்களும் இந்நாட்டில் பெருகிப் போனார்
குணங்கெட்டார் இவைபடித்தார் நூறு நூறாய் ! (11)
இருசொற்கள் புணர்ந்திடுங்கால் தோன்று மொற்றை
எடுத்துவிட்டுத் தமிழெழுதும் கூட்ட மொன்று,
“விரியுலக வழக்கினிலே விளங்கு கின்ற
வேற்றுமொழி பலகண்டோம் புணர்ச்சி யென்னும்
ஒருவிதியைக் கண்டதில்லை ! தமிழில் மட்டும்
உண்டெனிலோ அதுபடிக்க நேர மில்லை
கருதுவதை யெழுதுங்கால் ஒற்று மிக்குக்
காண்பதனால் என்னபயன்” என்று கேட்கும்! (12)
(தொடரும்)
பாவலர் நாரா. நாச்சியப்பன்:
தமிழ் வளர்கிறது
Leave a Reply