தமிழ் வீரரின் எழுச்சி

 எங்கள் இளந்தமிழர் வீரர்-அவர்

இப்புவி வீழினும் வீரர் ! வீரர்!

சிங்கப் படையினைப் போலப்-பகைத்

தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்!

கங்கை தவழ்ந்திடு நாடு-தங்கள்

காதல் எலாமந்த நாட்டினோடு

தங்க ளினத்தவர்க்காக-உயிர்

தன்னையு மீந்திடும் வீரர் ஆவர்!

 

வெற்றி நிலைத்திட வேண்டும்- தங்கள்

வீர மெலாம்புவி ஏறவேண்டும்

சுற்றம் சுகப்பட வேண்டும-நற்

சுதந்திரம் வாழ்வினில் கூடவேண்டும்

மற்றிவை; வீரரின் உள்ளம் தனில்

மண்டிக் கிளர்வன; வாழி! வாழி

சற்றிதில் சோர்பவர் அல்லர்-இதில்

சாவடைதல் ஒன்று வாழ்தல் ஒன்று!

 

சோழனென் றேஒரு வீரன்-இந்தத்

தொல்புவி காத்தவன் வீரன்-வீரன்!

வாழிய பாண்டிய வீரன்!-அவன்

வாய்மையி லேபெரும் வீரன்-வீரன்!

ஊழிபெ யர்ந்துவந் தாலும் தங்கள்

ஊக்கங் கெடாக்குடி தோன்றினோர்கள்.

வாழ்க! தமிழ்க்குல வீரர்-அந்த

வன்மைத் தமிழ்க்குலம் வாழ்க! வாழ்க!

–  பாரதிதாசன்