திருத்தமிழ்ப்பாவை

தமிழ்த்தாயின் கட்டளை ஏற்றுத் ‘ திருத்தமிழ்ப்பாவை’ பாடினேன்

  • கவிஞர் வேணு குணசேகரன்

தமிழ்த்தாய் தைத்திங்கள் பிறக்குமுன் எமக்கொரு கட்டளை இட்டாள். அந்தக் கட்டளையை எம்மால் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு எமது சிற்றறிவே காரணம்.

 மார்கழியில் வைணவர்கள் திருப்பாவையையும், சைவர்கள் திருவெம்பாவையையும் ஓதி மகிழ்வதுபோலத் தமிழ்த்தாயும் தமக்கென ஒன்றைச் செய்யுமாறு பணித்திருக்கும் அந்த நுண்ணிய கட்டளையை அவளருளாலே பின்னர்ப் புரிந்து கொண்டேன். ஆயின் அது எம்மால் இயலுமா என்று கொஞ்சம்கூடச் சிந்திக்கவில்லை.

  மாறாகத், திருப்பாவை, திருவெம்பாவைப் பாசுரங்களைப்போல, அவள் விழைந்தவண்ணம் எழுதத் தொடங்கிவிட்டேன். அவளின் கட்டளைப்படி, எம்மால் முடிந்த வகையில் எப்படியெல்லாம் எம் சிந்தனைத் திறனுக்கேற்ற முறையில் அவளைப்பற்றியும், அவள் கட்டிக்காத்துவரும் இனத்தைப் பற்றியும், பழம்பெருமையுடன் இனி எங்ஙனம் வருங்காலத்தில், இழந்த பெருமையினும் மேலான புகழை அடையும்வகை பற்றியும் முப்பது பாசுரங்களில் பாடியிருக்கிறேன்.

இந் நூலுக்குத் , ‘ திருத்தமிழ்ப்பாவை ‘ என்று பெயர் சூட்டியுள்ளேன்.

தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் தமிழன்னைக்கு யான் சூட்டியுள்ள மகுடம்பற்றித்  தங்கள் மேலான கருத்தைத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

இறை வணக்கம்

பற்றின்றிப் பொற்றாளைப் பற்றிநிற்கும்
பற்றொன்றே
பற்றாகி , உற்றபக்தி நெற்றாகி முற்றாகி
வெற்றிடத்தில் சுற்றிநிற்கும் சற்றும்ஓய்
வுற்றறியா
நற்றுணையே! சிற்றணுநான்! சற்றெனைநீ
பற்றிடுவாய்!

 

தமிழ் வணக்கம்

உலகத்தாய், கருப்பையின் பனிக்கு டத்தை
உடைத்தவுடன் முதன்முதலில் பிறந்த தாயே !
விலகத்தான் முடியாத தளைக்கட் டுக்குள்
விந்தைமிகு சொந்தமென என்னைக்
கொண்டாய் !
பலகற்றும் பலமொழிகள் ஆய்ந்த பின்னும்
பைந்தமிழே முதன்மையெனும் கருத்து
மின்னும் !
திலகத்தைப் போன்றவளே! உனைவ ணங்கித்
‘திருத்தமிழ்ப்பா வை’எனும்நூல் யாத்தேன்;
ஏற்பாய் !

 

– கவிஞர் வேணு குணசேகரன்